வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் ஒன்பது
வகைகளை உடையது. அவையாவன:
- பிரிவு அறிவுறுத்தல்
- பிரிவு உடன்படாமை
- பிரிவு உடன்படுத்தல்
- பிரிவு உடன்படுதல்
- பிரிவுழிக் கலங்கல்
- வன்புறை
- வன்பொறை
- வரும்வழிக் கலங்கல்
- வந்துழி மகிழ்ச்சி
பிரிவு அறிவுறுத்தல்
திருமணத்தை முன் வைத்து, பொருளீட்டுதல் காரணமாகத்
தான் பிரியப்போகும் செய்தியைத் தலைவிக்குத்
தெரிவிக்கும்படி தோழியிடம் தலைவன் கூறுதல் பிரிவு
அறிவுறுத்தல் எனப்படும்.
பிரிவு உடன்படாமை
திருமணத்தை முன்வைத்து, பொருளீட்டுதல் காரணமாகத்
தலைவன் பிரிவதைத் தோழி உடன்படாமல் தலைவனிடம்
மறுத்துக் கூறுதல் பிரிவு உடன்படாமை எனப்படும்.
பிரிவு உடன்படுத்தல்
உரிய காரணங்களையும் சென்று வரவேண்டியதன்
இன்றியமையாமையையும் எடுத்துக் கூறிய தலைவன்
தனது பிரிவைத் தோழி உடன்படுமாறு செய்தல் பிரிவு உடன்படுத்தல் எனப்படும்.
பிரிவு உடன்படுதல்
உரிய காரணங்களையும் சென்று வரவேண்டியதன்
இன்றியமையாமையையும் தலைவன் எடுத்துரைக்க, அதை
உணர்ந்த தோழி தலைவனது பிரிவை உடன்படுதல் பிரிவு உடன்படுதல் எனப்படும்.
பிரிவுழிக் கலங்கல்
வரைவிடை வைத்துப் பொருள் ஈட்டுதல் காரணமாகத்
தலைவன் பிரிந்து செல்ல, அதனால் தலைவி மனம் கலங்கி
இருத்தல் பிரிவுழிக் கலங்கல் எனப்படும்.
வன்புறை
தலைவனது பிரிவு அவசியமானது; அப்பிரிவை ஏற்றுப்
பொறுத்து ஆற்றியிருத்தலே பொருத்தமுடையது என்று தோழி
தலைவியிடம் வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.
வன்பொறை
தலைவி தோழியின் சொற்களைக் கேட்டு ஆற்றி
இருத்தல், வன்பொறை ஆகும். (பொறை - பொருத்துக்கொள்ளுதல்)
வரும்வழிக் கலங்கல்
பொருள்வயின் பிரிவு மேற்கொண்ட தலைவன், தன்பணி
முடித்துத் திரும்புகிறான். திரும்பும் வழியில் தன் பிரிவால்
தலைவிக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம் - கலக்கம் - தாங்க
இயலாத தன்மைகளை எண்ணி மனம் கலங்குகிறான். இதுவே
வரும்வழிக் கலங்கல் எனப்படும்.
வந்துழி மகிழ்ச்சி
பொருளீட்டிக் கொண்டு திரும்பிவரும் வழியெங்கும்
வருந்தியவாறே வந்த தலைவன் மீண்டு வந்ததும் அவனைக்
கண்ட தலைவி மனம்மகிழ்தல் வந்துழி மகிழ்ச்சி எனப்படும்.
|