1.1 வரைவு

வரைவு என்னும் சொல் திருமணத்தைக் குறிக்கும். அவ்வாறே கரணம் என்பது திருமண நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றை முந்தைய பாடங்களில் கண்டு தெளிந்தோம். இனி, இங்கு வரைவு என்பதற்கான இலக்கண விளக்கத்தைக் காண்போம்.

இலக்கணம்

நம்பியகப் பொருள் நூலாசிரியர் வரைவின் இலக்கணத்தைக் கீழ்க்காணும் நூற்பா வழி வகுத்து வழங்குகிறார்.

வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்

குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்

கரணமொடு புணரக் கடியயர்ந்து கொளலே

- (வரைவியல் - 1)

1.1.1 இருவகை வரைவு

தலைவன் தலைவியை மணந்து கொள்வது வரைவு எனப்படும். அது கரணம் எனப்படும் சடங்கு முறைகளுடன் கூடியதாக அமையும். அவ்வாறு நிகழும் வரைவு என்னும் திருமணம்.

(1) பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு மகட்கொடை (மகளைத் தருதல்) வழங்க நிகழ்வது.

(2) பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு வழங்காமல் தலைமக்கள் தம்விருப்பப்படி நடத்திக் கொள்வது.

என இரு நிலைப்பாடுகளை உடையது.

1.1.2 வரைவிற்குரிய கிளவிகள்

அகத்துறை நிகழ்வுகளில் பங்குபெறும் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலானோர் நிகழ்த்தும் உரையாடல்கள் கிளவி என்றும் அவற்றின் தொகுப்பு கிளவித் தொகை என்றும் அழைக்கப்படும்.

நம்பியகப் பொருள் நூலாசிரியர், வரைவிற்குரிய கிளவித் தொகைகளை இரண்டு பிரிவுகளில் பாகுபடுத்தி உரைத்துள்ளார்.

அவை,

(1) வரைவு மலிதல்

(2) அறத்தொடு நிற்றல்

என்பன.