4.0 பாட முன்னுரை |
நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் இறுதி இயல் ஒழிபியல் ஆகும். முன்னர் அமைந்த அகத்திணை இயல், களவியல், கற்பியல், வரைவியல் என்னும் நான்கு இயல்களிலும் சொல்லப்படாமல் விட்டுப்போன செய்திகளைக் கூறுவதாக ஒழிபியல் அமைந்துள்ளது. ‘சொல்லாது ஒழிந்த’ செய்திகளைச் சொல்லும் இயல் என்னும் அடிப்படையில் ‘ஒழிபியல்’ என்னும் பெயர் அமைந்தது. |
ஒழிபியல் என்னும் இறுதியியல் உணர்த்தும் செய்திகளை, அகப்பாட்டு உறுப்புகள், அகப்பாட்டினுள் வரும் பொருள்கள், அகப்புறக் கைக்கிளை, அகப்பொருட் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை, அகப்பாடல்களில் பாடப்படுவோர், வழுவும் அமைதியும் என்னும் உட்பிரிவுகளில் பகுத்துக் காணலாம். |
இவற்றுள் அகப்பாட்டு உறுப்புகள் பற்றிய இலக்கணச் செய்திகளை விளக்கி உரைப்பதாக இப்பாடம் அமைகிறது. |