5.1 உவமைப் பொருள்

அகப்பாட்டினுள் வரும் இருவகைப் பொருள்களில் முதலாவதாக அமைவது உவமைப் பொருளாகும். இது உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம் என இரண்டு வகைப்படும்.

5.1.1 உள்ளுறை உவமம்

உள்ளுறை என்னும் சொல்லை, உள்+உறை எனப் பிரித்துப் பொருள் காணலாம். ஒரு பாடலில், உட்கருத்தாக ஒன்று மறைந்து நிற்பது உள்ளுறை எனப்படும். அவ்வாறு மறைந்து நிற்கும் கருத்துக்கு கருப்பொருள் நிகழ்ச்சி அடிப்படையாக (உவமைபோல) அமையும்போது அதனை உள்ளுறை உவமம் என்று கூறுவர்.

உள்ளுறை உவமம் பெரும்பான்மையும் அகப்பொருட் செய்யுட்களில் இடம்பெறும். கருப்பொருளை மையப்படுத்தி வெளிப்படையாகச் சொல்லப்பட்ட செய்தியை உவமையாகக் கொண்டு அதன் மூலம் உணரத்தக்க வேறோர் செய்தியை அறிவதே உள்ளுறை உவமம் ஆகும்.

உள்ளுறை உவமம் பற்றிய இலக்கணத்தை நாற்கவிராச நம்பி

உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் (238)

என்று ஒரு நூற்பாவின் மூலம் வரையறுத்துள்ளார்.

உதாரணம்:

வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடு தேன்வேட்டும் குறுகும் : - நிறைமதுச் சேர்ந்து
உண்டாடும் தன் முகத்தே செவ்வி உடையதோர்
வண்தாமரை பிரிந்த வண்டு

இப்பாடலில் கருப்பொருளை வைத்துச் சொல்லப்பட்ட உவமையின் மூலம் குறிப்பால் கொள்ளப்படும் பொருள் யாது என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீடு இனிது விளக்கும்.

சொல்லப்பட்ட உவமை

குறிப்பால் கொள்ளும் பொருள்

வண்டு

தலைவன்

செவ்வியுடையதோர் தாமரை அழகிய தலைவி
வண்டு தாமரையில் நிறை மதுச்சேர்ந்து உண்டாடுதல் தலைவன் தலைவியிடம் இன்பம் நுகர்தல்

தாமரையை வண்டு நீங்குதல் தலைவியைத் தலைவன் நீங்குதல்
காவி (குவளை மலர்) பரத்தை
இனவண்டுகள் காவியின் தேன் உண்ணல் பரத்தர் (ஆடவர் பலர்) அப்பரத்தையை நுகர்தல்
குவளை மலர் வண்டுகளால் நுகரப்பட்டுத் தேன்குறைதல் பரத்தரால் (ஆடவர் பலரால்) துய்க்கப் பெற்றுப் பரத்தை பொலிவிழத்தல்
தேன்குறைந்த குவளை மலரை வண்டு விரும்பிச் சேர்தல் பொலிவிழந்த பரத்தையைத் தலைவன் விரும்பிச் சேர்தல்

5.1.2 வெளிப்படை உவமம்

இது உவமையின் பிறிதோர் வகையாகும். உள்ளுறை போலப் பொருள் மறைந்து நிற்றல் இல்லாமல் வெளிப்படையாக விளங்குவது இவ்வகை. இதனை நான்கு பிரிவுகளில் காணலாம்.

வ. எண்.

பிரிவுகள்
விளக்கம்
உதாரணம்

1.

வினை உவமம்

செயல் பற்றியது

புலி போலப் பாய்ந்தான்

2.
பயன் உவமம்
பயன் பற்றியது
மாரி (மழை) போன்றவன் பாரி
3.
மெய் உவமம்
வடிவம் பற்றியது
வேல் போன்ற விழி
4.
உரு உவமம்
நிறம் பற்றியது
பவளம் போன்ற வாய்