5.6 அகப்புறப் பெருந்திணை

பெருந்திணை என்பது அகத்திணை இலக்கணத்திற்கு இசைந்ததாக - ஒத்து வருவதாக - ஏற்கத் தக்கதாக அமையும்போது அதனை அகப்பொருட் பெருந்திணை என்று குறிப்பிட்டனர். அதற்கு மாறாக, அகத்திணைக்கு அடங்காமல் - முரண்பட்டதாக அமையும் பெருந்திணைச் செய்திகளை அகப்புறப் பெருந்திணை என்று வகைப்படுத்தினர்.

5.6.1 அகப்புறப் பெருந்திணையின் பிரிவுகள்

நாற்கவிராச நம்பி அகப்புறப் பெருந்திணையின் பிரிவுகளாக எண்வகைப்பட்ட செய்திகளை விளக்கிச் சென்றுள்ளார். அவையாவன:

1) மடலேறுதல்

தன் குறை நீங்காத தலைவன் பனை மடலால் குதிரையைச் செய்து அதன் மீது ஏறி நின்று தன் விருப்பத்தை வெளிப்படுத்துதல்.

2) விடை தழாஅல்

தலைவன் தான் விரும்பிய தலைவியை மணத்தல் பொருட்டு, ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்று கூறுவர். (விடை-எருது, ஏறு, காளை; தழாஅல்-தழுவுதல்)

3) குற்றிசை

தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.

4) குறுங்கலி

தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல்.

5) சுரநடை

தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.

6) முதுபாலை

தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல்.

7) தாபதநிலை

தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.

8) தபுதார நிலை

தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.