2.1 திணை
விளக்கம்
திணை என்பது குலம்,
நிலம், ஒழுக்கம் ஆகிய பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்.
குறிஞ்சித் திணை என்பது
மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் (நிலம்) குறிக்கும்; புணர்தலும்
புணர்தல் நிமித்தமுமாகிய ஒழுக்கத்தைக் (ஒழுக்கம்) குறிக்கும். குறிஞ்சி
என்பது அந்நிலத்தில் பூக்கும் சிறந்த பூவாகும். பூவால் நிலமும்
ஒழுக்கமும் சுட்டப் பெறுகின்றன.
வெட்சி
தானே குறிஞ்சியது புறனே
- (தொல்.புறத்திணை
இயல்- 1 : 3)
|
என்பது தொல்காப்பியம்.
குறிஞ்சியாகிய அகவொழுக்கத்திற்கு, வெட்சி ஒழுக்கமாகிய ஆனிரையைக் கவர்தல்
புறனாகின்றது என்பது இதன் பொருள்.
2.1.1 வெட்சித் திணை ஒழுக்கம்
வெட்சித்
திணை என்பதன் பொருள் வெட்சி
ஒழுக்கம் என்பதாகும். வெட்சி ஒழுக்கமாவது ஆனிரை (பசுக்கூட்டம்)
கவர்தலும், கவர்ந்த அவற்றை ஓம்பலும் (காத்தல்) ஆகும். (ஆன்+நிரை= ஆனிரை)
ஆனிரையைக் கவரும் மறவர்
வெட்சிப் பூவை
அடையாளப் பூவாகச் சூடிக் கொள்வர். இவ்வாறு
சூடுதல்,
மறவர் பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டவேயாம்.
வெட்சி, ஒருவகை மரத்தில் மலரும் பூ.
2.1.2 வெட்சி குறிஞ்சிக்குப் புறன்
தாய் தந்தையரின் காவல் எல்லைக்குள் தங்குகின்ற பசுப்போன்ற தலைவியைத்
தலைவன் தனது ஆண்மையால் கவர்வான்; பகற்குறியும் இரவுக் குறியும் எய்துவான்;
உடன் போக்கென அவளை உடன்கொண்டு போவதும் உண்டு. இவற்றால் தலைவி இல்லத்து
எல்லையை இகத்தல் அல்லது கடத்தல் தெரிய வரும். உடன்போக்கில், வழியில்
தலைவியை விளையாடச் செய்தும் நிழலுள்ள இடத்தில் இளைப்பாறச் செய்தும்
வழிநடை வருத்தம் நீங்கக் கொண்டு செல்வான்.
வெட்சி
மறவர்களும் பகை மன்னனின் பாதுகாவலில் உள்ள பசுநிரையை இரவுப்போதில்
கவர்ந்து செல்வர்; செல்லும் அவர்கள் அவற்றை நீருள்ள இடத்தில் பருகச்
செய்தும் நிழலுள்ள இடத்தில் இளைப்பாறச் செய்தும் ஓட்டிச் செல்வர்.
இதனால், புறத்திணையின் வெட்சி, அகத்திணையின் குறிஞ்சிக்குப் புறனாவது
புலப்படும். இவ்வாறே புறத்திணைகள் அகத்திணைப் பிரிவுகளுக்குப் புறனாக
அமையும். அகத்திணையில் இடம்பெறும் ஒரு நிகழ்வைப் போல, அதற்கு இணையாக,
புறத்திணையில் நிகழும் ஒரு நிகழ்வினைப் புறன்
என்று குறிப்பிடுவார்கள்.
|