3.1 கரந்தைத் திணை - விளக்கம்
தமது நாட்டிலிருந்து வெட்சி மறவர்கள் கவர்ந்து சென்ற
ஆநிரைகளைக் கரந்தை
மறவர் மீட்கும் ஒழுக்கம் கரந்தைத்
திணை எனப்படும். இதனை,
வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம் |
என்னும் பழம்பாடல் தெரிவிக்கின்றது.
கரந்தை என்பது ஒரு வகைப் பூ. டாக்டர் உ.வே.சா. அவர்கள் 'கொட்டைக் கரந்தை
என்னும் பூடு (பூண்டு)' என்கிறார். இங்குக் கரந்தை என்பது நிரை மீட்டலாகிய
கரந்தை ஒழுக்கத்திற்கான குறியீடு ஆகும். எனவே, ஆகுபெயர். தொல்காப்பியர் கரந்தைத்
திணையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை. கரந்தையை வெட்சியின் மறுதலையாகக்
கொள்கின்றார். ஏனெனில், ஆநிரையைக் கவராத போது மீட்டல் நிகழாது. கரந்தை வெட்சியின்
மறுதலை ஒழுக்கம் என்பதைத் தெரிந்து கொண்டால், கரந்தையும் குறிஞ்சியது புறன்
ஆவதை உணர்வோம்.
3.1.1 கரந்தையும் குறிஞ்சியது புறன்
அகத்திணையில் தலைவன், தலைவியை 'உடன்போக்கு'
நிகழ்வின் மூலமாக இல்லத்து எல்லையைக் கடக்கச் செய்கின்றான்
என்பதை முன்னைய பாடத்தில் படித்தோம். உடன்போக்கெனச்
சென்ற தலைவியைத் தேடும் முயற்சியைப் பெரும்பான்மை
செவிலியும் சிறுபான்மை நற்றாயும் மேற்கொள்கின்றார்கள்
அல்லவா? தேடும் முயற்சி எதற்காக? மீட்டுவந்து தலைவனுக்குத்
தலைவியை மணம் முடிக்க என்பது தெரியும். இதுபோல. வெட்சி
மறவர் கவர்ந்து சென்ற பசுத்திரளைக் கரந்தை மறவர்
அவர்களிடமிருந்து மீட்பதில் ஈடுபடுவர். மீட்பது எதற்காக? இரு
பெரு மன்னரும் போர்க்களமும் நாளும் குறித்துப் போரிடவே
என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? இதனால், கரந்தை
யொழுக்கமும் குறிஞ்சியின் ஒழுக்கம் ஒன்றினுக்குப் புறமாதல்
விளங்கும்.
|