3.4 போரும் விளைவும் ஆநிரையை மீட்பதற்காகப் போர் தொடங்குகிறது. போர் என்றாலே வெட்டும் குத்தும் மரணமும் ஏற்படுமல்லவா? அவற்றை விளக்குகின்றன பின்வரும் துறைகள். போர் - நிரை மீட்சிப் போர்; மலைதல் - போரிடல். பசுவினம் சென்ற அடிச்சுவட்டின் மேல் தொடர்ந்து சென்ற கரந்தையார் அவற்றை மீட்க வேண்டி மலைவது ஆதலின் போர் மலைதல் எனப் பெற்றது. ஆரவாரத்தோடும் மின்னும் வேற்படைகளொடும் சென்ற கரந்தை மறவர்கள் வெட்சியாரைக் கண்டனர்; மேற்கொண்டு செல்லா வண்ணம் அவர்களைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டனர்; அச்சம் தோன்றும்படியாகத் தாக்கினர்; அதில் ஒரு சமயம் கரந்தையார் ஓங்கினர்; வெட்சியார் தாழ்ந்தனர், மற்றொரு சமயம் வெட்சியார் ஓங்கினர்; கரந்தையார் தாழ்ந்தனர். இவ்வாறு நிகழ்த்திய உறழ் போரைப் (மாறி மாறி வரும்) பற்றியது போர் மலைதல் என்னும் துறையாம்.
(உட்கு = அச்சம்) வேந்தனுடைய மனம் எப்போதும் வெற்றியையே நினைக்கும். வேந்தன் மனம் மகிழ ஆநிரையை மீட்கும் போரில் கரந்தை மறவன் புண்பட்டு வெற்றியுடன் வருவதனைக் கூறுவதால் புண்ணொடு வருதல் என்னும் பெயராயிற்று. உலகம் உள்ளளவு தன்னுடைய புகழை நிலைக்கச் செய்து, மறவன் ஒருவன் கரந்தைப் போரில் தன்னுடல் அழிதற்குக் காரணமான விழுப்புண்ணை ஏற்று வெற்றியுடன் வந்தது புண்ணோடு வருதல் எனும் துறையாம்.
போர்க்களத்து + ஒழிதல் = போர்க்களத்தின்கண் இறந்து போதல். ஆநிரை மீட்சிப் போரில் ஈடுபட்ட கரந்தை மறவன் ஒருவன் போர்க்களத்தில் இறந்துபட்டதைக் கூறுவதால் இத்துறை, போர்க்களத்து ஒழிதல் என்னும் பெயர் உடையதாயிற்று. வெட்சி மறவர்களோடு கரந்தை மறவன் ஒருவன் அயர்வின்றி இறுதி வரையும் எதிர்நின்று போரிட்டான்; அப்போர்க்களத்திலேயே இறந்து பட்டான். இறந்து பட்டமையை இயம்புவது போர்க்களத்து ஒழிதல் என்னும் துறையாம்.
|