3.7 மன்னன் பெருமையும் வீரர் சிறப்பும்

கரந்தை மன்னனை, அவனது சிறப்புகளைக் கூறிப் படை வீரர் புகழ்கின்றனர். அவ்வாறே படை மறவரின் குடிப் பெருமையும் பேசப்படுகிறது. இவற்றை வேத்தியல் மலிபு, குடிநிலை ஆகிய துறைகள் குறிப்பிடுகின்றன.

3.7.1 வேத்தியல் மலிபு

வேத்து + இயல் + மலிபு = வேத்தியல் மலிபு. வேந்து, வேத்து ஆயிற்று. (வலித்தல் விகாரம்) இயல்பு - இயல் என நின்றது. மலிபு - மிகுத்துச் சொல்லல். மறவர்கள் தம்முடைய வேந்தனின் இயல்பைப் பெரிதும் வியந்து கூறுவது ஆதலின் வேத்தியல் மலிபு எனப் பெயர் பெற்றது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்
  • தோள் கொண்டு மலைவதில் வல்லவன், மறத்தைப் பொருந்திய கரந்தை மன்னன். அவனுடைய படைவீரரும் வாட்போரில் வலிமையுடையவருமாகிய கரந்தை மறவர்கள் அவனைப் புகழ்ந்து கூறுவது வேத்தியல் மலிபு என்னும் துறையாகும்.

    தோள்வலிய வயவேந்தனை
    வாள்வலிமறவர் சிறப்புரைத்தன்று.

    (வயம் = வெற்றி)

    3.7.2 குடிநிலை

    பிறந்த குடியினது நிலையைப் பெருமை பொங்கப் பேசுகின்ற காரணத்தால் குடிநிலை எனப் பெற்றது. வழி வழிவந்த வன்கண்மையை (வீரம்) உடைய குடி என்று சிறப்பிப்பது குடிநிலை.

  • கொளுவின் பொருளும் கொளுவும்
  • மண் செறிந்த இவ்வுலகத்தில் பழமையையும், வழிவந்த வன்கண்மையையும் அளவாக மனத்தில் கொண்டு பிறர் அறிய வருகின்ற தொல்வரவும் தோலும் உடைய குடியின் வரலாற்றைச் சொல்வது குடிநிலை என்ற துறையாகும். (தொல் வரவு - தொன்மை; தோல் - புகழ்)

    மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
    கொண்டு பிறர்அறியும் குடிவரவு உரைத்தன்று.

    இதனை விளக்கும் பாடல்:

    பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்!
    வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
    முன்தோன்றி மூத்த குடி.

    இதன் கருத்து

    மலை தோன்றி மண் தோன்றாத காலம் ஒன்று உண்டு. அக்காலத்திலேயே மறப்பண்புடன் தோன்றிய மூத்த குடியினர் கரந்தை மறவர்கள். இவர்கள் பகைவரை அழித்து ஆநிரையை மீட்டுவந்தது இயல்பே. இதில் வியப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

    துறைப் பொருத்தம்

    மருத நிலம் தோன்றுவதற்கு முன்னமேயே இருந்த குறிஞ்சியில் முதற்கண் தோன்றிய மூத்தகுடியென்றும், அக்குடி தோன்றிய போதே வாளோடு தோன்றியதென்றும், அக்குடியில் பிறந்தோர் நாள்தோறும் மெய்யான புகழை வளர்த்துக் கொள்கின்றனர் என்றும் கூறியதால் மறக்குடியின் தொன்மையும் தோலும் புலப்பட்டு நிற்கின்றன. ஆதலால் துறைப் பொருள் பொருந்தி வருவது தெளிவு.