4.1 வஞ்சித் திணையும் துறைகளும் வஞ்சித் திணை என்பதன் விளக்கத்தையும் அதன் துறைகளையும் பற்றி இனிப் பார்ப்போம். வஞ்சித் திணை - வஞ்சி ஒழுக்கம். வஞ்சிப் பூவை அணிந்து கொண்டு நிகழ்த்தலின், இப்பெயர் பெற்றது. வாடுதல் இல்லாத வஞ்சிப்பூ மாலையை ஒர் அரசன் தன் தலையில் சூடிப் பகைவருடைய நிலத்தைக் கைப்பற்றுவது குறித்தது வஞ்சித் திணை எனப்படும்.
(கூடார் = பகைவர்) எடுத்துக்காட்டு வெண்பா
மறவர்கள் வில்விழாவாம் போரை விரும்பினார்கள். விரும்பவும், அவர்களுடைய மன்னன் வணங்காத பகைவரை வணங்கப் பண்ண வஞ்சி மாலையைச் சூடினான். அஃதாவது, பகைநாட்டின் மேல் போர் அறிவித்தான் என்பதாம். வணங்காதாரை வணக்க வஞ்சி வேந்தன் வஞ்சி மாலையைச் சூடினான்; மறவர் போரை விரும்பினர் என்பவற்றில் துறைப் பொருள் பொதிந்துள்ளதை அறிகின்றோம். துறை பொருந்துமாறும் புலனாகின்றது. வஞ்சி அரவம், குடை நிலை, வாள் நிலை, கொற்றவை நிலை, கொற்ற வஞ்சி, கொற்ற வள்ளை, பேராண் வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி, உழபுல வஞ்சி, மழபுல வஞ்சி, கொடை வஞ்சி, குறுவஞ்சி, ஒருதனி நிலை, தழிஞ்சி, பாசறை, பெருவஞ்சி, பெருஞ்சோற்று நிலை, நல்லிசை வஞ்சி என்னும் இருபதும் வஞ்சித் திணைத் துறைகள் ஆகும் என்பர் ஐயனாரிதனார்.
இந்நூற்பா வஞ்சித் திணையையும் சேர்த்து இருபத்தொன்று என்று கணக்கிடுகிறது. வஞ்சித் திணையுள் இருபது துறைகள் (நிகழ்வுகள்) இடம் பெறுகின்றன. இவற்றைப் போருக்கு முன்னர், போரின் பின்னர் எனப் பிரிக்கலாம். |