4.4 வஞ்சி மறவர்களின் சிறப்புகள்

போரில் ஈடுபட்டுள்ள மறவர்களின் சிறப்புகளைப் பார்ப்போம்.

4.4.1 நெடுமொழி வஞ்சி

நெடுமொழி என்பது பெருமிதம். வஞ்சி மறவன் பெருமிதத்தால் தன்னை வியந்து கூறும் மொழி பற்றி இப்பெயர் பூண்டது இத்துறை.

  • கொளுப் பொருளும் கொளுவும்
  • மறவன் ஒருவன், பகைவருடைய படையை நெருங்கித் தனது ஆண்மைத் தன்மையை அவர்கள் அறியத் தானே சிறப்பித்துரைப்பது, நெடுமொழி வஞ்சி என்னும் துறையாகும்.

    ஒன்னாதார் படைகெழுமித்
    தன்ஆண்மை எடுத்துரைத்தன்று
  • எடுத்துக்காட்டு வெண்பா
  • இன்னர் எனவேண்டா, என்னோடு எதிர்சீறி
    முன்னர் வருக. முரண்அகலும் - மன்னர்
    பருந்துஆர் படைஅமருள் பல்லார் புகழ
    விருந்தாய் அடைகுறுவார் விண்.

    இன்னர் (இன்னதன்மையர் = இப்படிப்பட்டவர்) என வேண்டா. யாவராயினும் ஆகுக ; என் முன்னர் வருக ; வரும் அவரை விண்ணுலகிற்கு அனுப்புவன் எனத் தன் பெருமிதம் தோன்ற மொழிவதில் ‘ஒன்னாதார் படைகெழுமித் தனது ஆண்மையை’ எடுத்துரைத்தல் அமைகின்றது. இதனால் துறையமைதி புலப்படுகின்றது.

    4.4.2 முதுமொழி வஞ்சி

    மொழி - சொல், புகழ். முதுபுகழாவது, குடியின் மூத்தானைப் புகழ்வது. இது பற்றி இத்துறை இப்பெயரைப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்
  • பழைய வீரவரலாற்றினை உடைய வாளொடு முன்தோன்றிய குடியின்கண் முன்னர் இருந்தமற வனது நிலைமையை மொழியும் வஞ்சித் துறை, முதுமொழி வஞ்சி என்பதாகும்.

    தொல்மரபின் வாள்குடியின்
    முன்னோனது நிலைகிளந்தன்று
  • எடுத்துக்காட்டு வெண்பா
  • குளிறு முரசம் குணில்பாயக் கூடார்
    ஒளிறுவாள் வெள்ளம் உழக்கிக் - களிறுஎறிந்து
    புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் !
    தண்ணடை நல்கல் தகும்.

    வேந்தே! முரசு முழங்கச் சென்று பகைவரின் வாட்படை வெள்ளத்தைக் கலக்கி அவர்களின் களிற்றுப்படையை வெட்டிச் சாய்த்துப் புண்ணொடு முன்னாளில் வந்த மறவன் இப்பொழுது இலனாகலின், அவனுடைய புதல்வனுக்குப் பரிசென மருத நிலங்களை வழங்குவது பொருத்தமானதே யாகும்.

    முரசு முழங்க, அதன் ஒலி கேட்டு, மறம் மூண்டு வாட்படை வெள்ளத்தைக் கலங்கச் செய்தவன்; களிற்றை வெட்டி வீழ்த்தி விழுப்புண்ணொடு முன்னாளில் வந்தவன் ஆகிய அவனுடைய மகன் இவன்’ என்பதில் குடிமுதல்வனின் புகழ் பொதிந்திருத்தலின், முதுமொழி வஞ்சி ஆவது தெளிவு.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    வஞ்சித் திணையாவது யாது?
    விடை
    2.
    வஞ்சி மறவர் எந்தப் பூவைச் சூடுவர்?
    விடை
    3.
    வஞ்சித் திணை எந்த அகத்திணையின் புறன் ஆகும்?
    விடை
    4.
    வஞ்சித் திணையின் துறைகள் எத்தனை?
    விடை
    5.
    வஞ்சி வேந்தன் எவற்றைப் புறவீடு செய்வான்?
    விடை
    6.
    ‘நெடுமொழி வஞ்சி’ - இத்துறையை விளக்குக.
    விடை