5.4காஞ்சிப்
போர் நிகழ்ச்சிகள் - l
இனி
மறக்காஞ்சி, பேய்நிலை, பேய்க்காஞ்சி, தொட்ட
காஞ்சி, தொடாக் காஞ்சி என்பன பற்றிக் கற்போம்.
5.4.1 மறக்காஞ்சி
பகைவர்க்குத் தங்களது மறப்பண்பின் மேம்பாடு தோன்றப்
போர் செய்தலின் மறக்காஞ்சி எனப்
பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
பூவொடு இலையும் பொலியும் மாலை அணிந்தவன் காஞ்சி
மன்னன். அவன், போரிலும் வல்லவன். வஞ்சியாரின் மலைத்தலை
(எதிர்ப்பை) அழிக்கும் வகையில் தனது போர்த்தொழிலைச்
செய்கின்றான். அதனைச் சொல்வது, மறக்காஞ்சியாம்.
இலைப்பொலிதார் இகல்வேந்தன்
மலைப்புஒழிய மறம்கடாயின்று
(மலைப்பு = எதிர்ப்பு, போர்; கடாதல் = செலுத்துதல்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
பகை மன்னர் வியக்கும்படியாகவும், பருந்தும் கழுகும்
கருத்த தலையையும் தசையையும் இழுத்துக் கொண்டு
செல்லும்படியாகவும், காஞ்சி மறவன் மறத்தொழிலை ஆற்றினான்.
துறையமைதி
தறுகண்மையில் (வீரத்தில்) குன்றாத காஞ்சி மறவன்,
பகைமறவரின் தலை முதலியவற்றைக் கழுகு, பருந்து ஆகியன
கவர்ந்து செல்லும்படி மறத்தொழிலாற்றினான் என்பதில்
வேந்தனின் பகை ஆற்றல் அழிந்தது புலனாகிறது. அதனால்,
துறைப் பொருள் பொருந்துவதும் அறிய வருகின்றது.
இதுவும்அது (மறக்காஞ்சி)
மறக்காஞ்சி மற்றொன்றையும் குறிக்கும். வாள் அல்லது
வலோல் புண்பட்ட காஞ்சி மறவன், தன்னுடைய வீரம் தோன்றப்
புண்ணைக் கிழித்துக் கொண்டு மாள்வதும் மறமே. ஆதலால்,
இத்தகைய மறமும் மறக்காஞ்சி எனும் பெயரைப் பெறுவதாயிற்று.
கொளுப் பொருளும் கொளுவும்
ஒப்பனையால் பொலிந்த காஞ்சி மறவன், பகைவருடைய
மாறுபாட்டைப் பொறாதவனாய்த் தான் ஏற்றுக் கொண்ட
புண்ணைக் கிழித்துக் கொண்டு இறந்தானாயினும் மேற்கூறிய
மறக்காஞ்சித் துறையே என்பர் அறிஞர்.
மண்கெழு மறவன் மாறுநிலை
நோனான்
புண்கிழித்து முடியினும் அத்துறை ஆகும்
(மாறுநிலை
= பகைமை; நோனான் = பொறாதவனாகி)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
தன்பக்கத்து வீரர் நடுங்கவும் தான் நடுங்காத காஞ்சி
மறவன் ஒருவன், வஞ்சிப் படைவீரர், தங்கள் நாட்டு எல்லையைக்
கைப்பற்றிய பின்னரும் முன்னேறுவதைப் பொறாதவனாய்
முன்னமே பெற்ற புண்ணைக் கிழித்துக் கொண்டு மாய்ந்தான்.
துறையமைதி
காஞ்சியான் தான் ஏற்ற புண்ணைத் தனது கைவேலினால்
கிழித்துக் கொண்டு இறத்தல் மறக்காஞ்சி ஆகும்.
5.4.2 பேய்நிலை
பேய், காவல் செய்யும் நிலையைக் கூறலின் பேய்நிலை
எனப் பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
போர்க்களத்தில் தன்னுடைய
வேலின் திறத்தை
வெளிப்படுத்தும் காஞ்சி மறவன் ஒருவன் விழுப்புண்பட்டு
வீழ்ந்துகிடக்க, அவனது நிலையைக் கண்ணால் கண்டு, மனத்தால்
அன்பு கொண்டு பேய் ஒன்று அவனைப் பிரியாமல் காத்து
நின்றதைக் கூறுவது பேய்நிலை
என்னும் துறையாம்.
செருவேலோன் திறம்நோக்கிப்
பிரிவின்றிப் பேய்ஓம்பின்று
(ஓம்புதல்
= காத்தல்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
போர்க்களத்திலுள்ள மறவர்கள் விரும்பும் வண்ணம்
வெகுண்டு போர் செய்தான் காஞ்சி மறவன் ஒருவன்; அவன்,
வஞ்சி மறவர் வேலினால் புண்பட்டு வீழ்ந்தான். வீழ்ந்தவனது
மனம் மகிழும்படி பேய்கூட அவனைக் காவல்காத்து நிற்கின்றது.
ஆதலால், பலரும் பாராட்டுதற்குரிய திறனுடைய இம்மறவனுக்கு
அன்பில்லாதவர் யாரும் இவ்வுலகில் இல்லை போலும் என
நினைக்க வேண்டியுள்ளது. இதைக் கண்டவர்கள் இவ்வாறு
பேசினார்கள்.
5.4.3 பேய்க் காஞ்சி
விழுப்புண்பட்டு விழுந்து கிடக்கும் வீரனை அச்சுறுத்தற்காகப்
பேய் செய்யும் செயல்களைக் கூறுதலின்
பேய்க் காஞ்சி
எனப்பட்டது.
கொளுப் பொருளும் கொளுவும்
பிணங்கள் நிறைந்த போர்க்களத்தில் புண்பட்டு விழுந்த
மறவரைப் பேய் அச்சுறுத்தியதைக் கூறுவது, பேய்க் காஞ்சி
என்னும் துறையாம்.
பிணம்பிறங்கிய களத்துவீழ்ந்தார்க்கு
அணங்காற்ற அச்சுறீஇயன்று எடுத்துக்காட்டு
வெண்பாவின் பொருள்
பெண்பேய் ஒன்று, போர்க்களத்துக் குருதி வெள்ளத்தில்
விழுப்புண்பட்டுக் கிடக்கும் மறவனைக் காண்கின்றது.
அவனை அச்சமுறுத்துகின்றது. அவன் அஞ்சும் வண்ணம்
அப்பேய் மகள் செய்யும்
செயல்கள்களாவன, சுற்றிச்
சுற்றிச் சுழன்று வருதல், தன்னுருவைப் பெரிதாக்கிக் காட்டல் ;
தன்வடிவைக் குறுக்கிக் காட்டல் ; குடலை மாலையாகச்
சூடிக்கொண்டு மகிழ்ச்சியோடு நகைத்தல் ; அவ்விடத்தை விட்டுப்
போவது போலப் போக்குக் காட்டல் போல்வனவாம்.
5.4.4 தொட்ட காஞ்சி
விழுப்புண் ஏற்று மனைக்கண் கிடந்த மறவனது
புண்ணினைப் பேய்மகள் தொடுவது பற்றி இத்துறை இப்பெயர்
பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
இடமகன்ற வீட்டினுள் போர் மறவன் கிடந்த நிலையில்
இருக்கின்றான். அவனது விழுப்புண்ணைச் சுற்றத்தார் மருந்திட்டு
ஆற்ற முயன்று கொண்டுள்ளார்கள். அப்படிப் பாதுகாத்துக்
கொண்டிருக்கும்போதே, தொங்கும் முலையும் பெரிய வாயும்
உடைய பேய் மகள், கிடக்கும் மறவனின் புண்ணைத்
தொடுகின்றாள். அதனால் அவன் இறப்பு நிகழும். தொடும் அந்தச்
செயலைப் பேசுவது தொட்ட காஞ்சி என்னும் துறையாம்.
வியன்மனைவிடலை புண்காப்பத்
துயல்முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று.
(வியன்மனை = பெரிய வீடு; விடலை = மறவன்;
துயல் =
தொங்கு; பேழ்வாய் = பெரிய வாய்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
முன்பு, பகைவர்தம்மைத் தன்வேலினால் கொன்றவன்,
இன்று, புண்ணேற்றுக் கிடக்கின்றான். அவனை இறக்கப் பண்ணப்
பேய்மகள் அவனது புண்ணைத் தொட்டாள்.
துறையமைதி
படைக் கருவிகள் பிளந்த புண்ணை ஏந்திய மார்பை,
பேய்மகள்
இருளில் சென்று, குறுகி, நோக்கி, உமிழ்ந்து, மறவன்
பேருறக்கத்தை (மரணத்தை)த் தழுவத் தொட்டாள் என்பதில்,
பேயின் செயற்பாடுகள் பலவற்றுள் உயிர்ஏகத் தொட்டமையைச்
சிறக்கச் சொல்வது காணப்படுகின்றது. அது ‘பேய் தொட்டன்று’
என்னும் துறைப் பொருள் காட்டுவதை அறிவிக்கின்றது.
5.4.5 தொடாக் காஞ்சி
மறவனது புண்ணினைப் பேய்மகள் தொடுவதற்கு அஞ்சித்
தொடாமல் நின்றதைப் பேசுவதனால் தொடாக் காஞ்சி என்னும்
பெயர் பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
ஒரு மறவன். போர்முனையில்
விழுப்புண்ணை ஏற்றான்.
அவனைக் காக்க, அவனது சுற்றத்தார் பேய்க்குப் பகையான
ஐயவி (வெண் கடுகு) தூவல், மணப்பொருளைப் புகைத்தல்
போன்றவற்றைச் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால்,
பேய்மகள் அவனைத் தொட நடுங்குகின்றாள் ; இடம் விட்டு
இடம் பெயர்கின்றாள் எனப் பேயின் செயலைப் பேசுவது
தொடாக் காஞ்சி என்னும் துறையாம்.
அடல்அஞ்சா நெடுந்தகைப்புண்
தொடல்அஞ்சித் துடித்துநீங்கின்று
(அடல்
= போர்; நெடுந்தகை = வீரன்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
மறவனுடைய
புண்ணை அவனுடைய மனைவியும் அவர்தம் சுற்றமும் சேர்ந்து வெண்கடுகு சிந்தியும்
குங்குலியம், அகில் முதலிய நறுமணப் பொருட்களைப் புகைத்தும் பல்வகை
மலர்களைத் தூவியும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியும் பாதுகாப்பதால், பேய்மகள்
அஞ்சி அவனைத் தொடாமல் நீங்குகின்றாள்.
|