6.4
போருக்கு
முன்னைய நிகழ்வுகள்
பகைவர்
மதிலினை முற்றுகையிட்டுக் கைப்பற்றக்
கருதிய
உழிஞை மன்னன் மேற்கொள்ளும் செயல்கள் தொடர்கின்றன.
அவற்றைக் குறிப்பிடும் துறைகளைப் பார்ப்போம்.
6.4.1 குடைநாட் கோள்
மறவர் எல்லாரும் நற்சகுனம் பார்த்துப் போர்க்கெனப்
புறப்படுதல் என்பது இயலாதது. ஆதலின், குடை, வாள், முரசு
ஆகியவற்றை நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் புறவீடு
செய்வதென்ற வழக்கம் வந்தது. அவ்வழக்கம் பற்றிக் குடையைப்
புறவீடு செய்த இந்நிகழ்வு குடைநாட்
கோள் என்பதாயிற்று.
கொளுப்
பொருளும் கொளுவும்
உழிஞை வேந்தன், பகை மன்னனின் அரணைக்
கைப்பற்றக்
கருதி, தன் வெண்கொற்றக் குடையை நல்ல நாள் ஒன்றில் புறவீடு
செய்தமையைச் சொல்வது குடைநாட் கோள்
என்னும் துறையாம்.
சென்று அடையார் மதில்
கருதிக்
கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று.
(அடையார்
= பகைவர்)
எடுத்துக்காட்டு வெண்பாவின்
கருத்து
உலகத்திலுள்ள அரண்கள் எல்லாம், உழிஞை மன்னன் தனது வெண்கொற்றக் குடையை
நல்ல நாளில் புறவீடு செய்தும், தமது பகைமையை முழுமையாகக் கைவிட்டன.
ஆகலான், இனி முற்றுகை வேண்டுவதில்லை. இது வரை செங்குருதியில் ஆடிய
வேல், நெய் பூசிக் கொண்டு படைக்கலக் கொட்டிலில் கிடக்கலாம். தேர்கள்
போரெனப் புறப்பட வேண்டுவதில்லை. உரிய நிலைகளுள் புகலாம். குதிரையும்
களிறும் சாமரை, சேணம் முதலியவற்றால் ஒப்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.
ஒப்பனை செய்யப்பட்டிருப்பின், அவை அவற்றைக் களையலாம்.
துறையமைதி
உழிஞை மன்னன் குடை நாள் கொண்ட அளவில்,
மாற்றார்
அரணங்கள் முரண் அவிந்தன; வேல்,
தேர், மா, களிறு
ஆகியவை போர்க்கென்று செல்ல வேண்டுவதில்லை என்று
மொழிவதில், நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் குடையைப் புறவீடு
விட்டமை புலப்படுகின்றது. குடைநாள் கோள்
என்பதன்
இலக்கணம் பொருந்துமாறும் தெளிவாகிறது.
6.4.2
வாள்நாட் கோள்
முன்பு கூறியது போலவே நல்ல நாளில் நல்ல
முழுத்தத்தில்
வாளினைப் புறவீடு செய்தலின் வாள்நாட் கோள் எனப் பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைவருடைய
அரணைக் கைப்பற்ற நினைந்த உழிஞை
வேந்தன், தனக்கு வெற்றியைத் தருவதாகிய வாளினை
நல்ல
நாள் ஒன்றில் புறவீடு விட்டது
வாள்நாட் கோள் என்னும் துறையாகும் .
கலந்துஅடையார் மதில்கருதி
வலம்தருவாள் நாட்கொண்டன்று
(வலம்
= வெற்றி)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன் பகைவரது அரணைக் கொள்ளக்
கருதித்
தனது வாளை நல்ல நாளில் புறவீடு செய்தான். செய்த அளவில்,
பகைவர் மதிலினுள் உள்ள நடன மகளிர் ஆடுகின்ற
அரங்கம்,
கைகளைக் கோத்துக் கொண்டு பேய்கள் ஏறி, மாறிமாறி ஆடும்
களம் ஆயிற்று.
துறையமைதி
வாளினைப் புறவீடு செய்த
அளவிலே, பகைவரது
எயிலகத்துள்ள மகளிர் ஆடும் அரங்குகள், பேய்கள் கையைக்
கோத்துக் கொண்டு ஏறி ஆடுதற்கான அரங்கம் ஆயின என்பதில்
வலம்தரு வாள்நாள் கொண்டமை
பேசப்பட்டதால், இத்துறை
ஆயிற்று.
6.4.3 முரசவுழிஞை
முரசின் நிலைமை பற்றிக் கூறுவது ஆதலின்
முரசவுழிஞை
எனப் பெற்றது. நிலைமையாவது, அதனைத் தெய்வ நிலையில்
வைத்துக் காண்பதாம்.
கொளுப்
பொருளும் கொளுவும்
உழிஞை
மறவர்கள் உழிஞைப் பூவைச்
சூடி,
ஆட்டுக்கிடாவினைப் பலியாய் ஏற்கின்ற
முரசைத் தெய்வ
நிலையில் வைத்துப் புகழ்வர். இந்நிகழ்வு முரசவுழிஞை
எனப்
பெறும்.
பொன்புனை உழிஞை
சூடி மறியருந்தும்
திண்பிணி முரச நிலைஉரைத் தன்று
(மறி
= ஆட்டுக்கிடா)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை
மாலையை அணிந்த உழிஞை வேந்தனது அரண்மனையின் உள்ளே முரசு கரிய முகில்
போல முழங்குகின்றது. ஆதலால், இனி, களிறு குத்திப் பாயும். பாய்ந்து
குத்த, பகைவர் மதில்கள் குலைந்து விழும். இக்களிறுகளின் ஆற்றலுக்குக்
குலைந்து அழியாத மதில்கள் உண்டோ? எல்லா மதில்களும் குலையும்.
துறையமைதி
‘முரசம்
அதிர, மதில் குலைந்து விழும் ; வீழாத அரண்கள் இனி இரா‘ என்ற கண்டோர்
தம் கூற்றில் வைத்து, முரசத்தின் நிலைமை உரைக்கப் பெற்றுள்ளதால், இத்துறை
முரசவுழிஞை ஆவது தெளிவு.
6.4.4 கொற்ற வுழிஞை
பகைவரது அரணைக் கைப்பற்றிக்
கொள்ளப் படையொடு
செல்வது பற்றிக் கூறுவது கொற்ற வுழிஞை
எனப் பெற்றது.
கொளுப்
பொருளும் கொளுவும்
தன்னைப்
பணிந்து வந்து சேராத பகைமன்னனது
அரணினைக் கைக்கொள்வதன் பொருட்டாக, உழிஞை மன்னன்
தனது படையோடு சென்றது கொற்ற
உழிஞை என்னும்
துறையாம்.
அடையாதார் அரண்கொள்ளிய
படையோடு பரந்துஎழுந்தன்றுஎடுத்துக்காட்டு
வெண்பாவின் கருத்து
வாள், வேல் ஆகியவற்றோடு அருளையும் உடைய
உழிஞை மன்னன், புகுதற்கு அரிய காவற் காடு, ஆழம்
உடைய அகழி
ஆகியவற்றைக் கொண்ட பகைவர்களது அரணைக் கைப்பற்றுவதன்
பொருட்டு, தனது படையைக் கொண்டு வந்தான்.
துறையமைதி
நள்ளாதார் (பகைவர்)
மதில் கொள்ள, படை கொண்டு
எழுந்தான் என்பதில் துறைப் பொருள்
நிறைந்து நிற்பதைக்
காண்கின்றோம்.
6.4.5 அரசவுழிஞை
அரசனது
புகழைப் பாராட்டலின், அரசவுழிஞை
எனப் பெயர் பெற்றது.
கொளுப்
பொருளும் கொளுவும்
மக்களுக்கு
நிழல் தந்து, காக்கும் தொழிலைச்
சிறக்க
நடத்தும் உழிஞை வேந்தனின் புகழைச் சிறப்பாகச் சொன்னது
அரச வுழிஞை யாம்.
தொழில்காவல் மலிந்துஇயலும்
பொழில்காவலன் புகழ்விளம்பின்று. எடுத்துக்காட்டு
வெண்பாவின் கருத்து
மன எழுச்சியும், நல்ல ஆராய்ச்சியும், செல்வப்
பெருக்கமும்
உழிஞை வேந்தனிடம் எக்காலத்திலும்
அகலாது உள்ளன;
ஆதலால், உழிஞை வேந்தனுக்கு, இனிக் கையகப்படாத அரண்கள்
இல்லையாகும். அரண்கள் யாவும் கைவசப்படும்.
துறையமைதி
‘அரசர்க்குரிய ஊக்கம் முதலியவற்றை
நன்றாகவே உடைய
மன்னன் ஆதலால், அவனுக்கு, அவன் மேற்கொண்ட
மதில்
கைப்பற்றும் செயல் நிறைவேறும் என்பது
உறுதி’ என்ற
குறிப்பினைத் தந்து, துறைப் பொருளாகிய மன்னனைப் புகழ்தல்
என்பதைக் காட்டுவதில் பொருத்தம் இருப்பதைக் காணலாம்.
6.4.6 கந்தழி
கந்து - பற்றுக்கோடு, பகைவரது பற்றுக்கோடாகிய
மதிலை
அழித்தல் பற்றிக் கந்தழி என்னும்
குறியைப் பெற்றது இத்துறை.
கொளுப்
பொருளும் கொளுவும்
தார்மாலையை
அணிந்தவனும் நீலமணி நிறத்தவனும் ஆகிய
திருமால், வாணாசுரனுக்கு உரியதான சோ
என்னும் அரணினை
அழித்த வீரத்தைச் சொல்லியது கந்தழி
எனப்படும்
மாவுடைத்தார் மணிவண்ணன்
சோஉடைத்த மறம்நுவலின்று.எடுத்துக்காட்டு
வெண்பாவின் கருத்து
எல்லா நாளும், பகைவரது மார்பில், சக்கரப்
படை நீங்காது
நின்று எரிக்கும்படியாக, அந்நாளில் வாணாசுரனுக்குச் சொந்தமான
சோ என்னும் பெயரிய அரணை அழித்தவனும்
இவ்வுழிஞை
வேந்தனே ஆவான். திருமாலாகிய இவனுக்கு மாறாக இந்நாளில்
தங்களுடைய அரண்கள் வலிமையுடையன என்று கருதிக் கொண்டு
எதிர்மலைவார் யார் இருக்கின்றார்? ஒருவரும் இலர்.
துறையமைதி
வாணாசுரனின் சோ
என்னும் பெயரினையுடைய அரணைப்
பண்டு அழித்த திருமாலே இன்று உழிஞை
வேந்தனாக
வந்துள்ளான். இவனை எதிர்ப்பார் ஒருவரும் இலர் - என்றதனில்,
மன்னன் புகழ்ச்சி தென்படுதலால் இது கந்தழியாகின்றது.
6.4.7 முற்றுழிஞை
திரிபுர அசுரர்களின் மூன்று
எயில்களை முதற்கண்
முற்றியவன் முக்கண் முதல்வன். அவனே, உழிஞை வேந்தனாக
வந்துள்ளதாகப் பாவித்துக் கொண்டு பேசுதலின் முற்று
உழிஞை
என்று பெயர் வந்தது போலும். முற்று - முற்றுதல் = முற்றுகை.
கொளுப்
பொருளும் கொளுவும்
ஒளிவீசும்
சடையையுடைய சிவன் கொன்றைப் பூவோடு
உழிஞைப் போர் என்பது தோன்றச் சூடிய உழிஞைப்
பூவின்
சிறப்பைச் சொல்வது முற்றுழிஞை என்னும்
துறையாகும்.
ஆடுஇயல் அவிர்சடையான்
சூடியபூச் சிறப்புரைத்தன்று.எடுத்துக்காட்டு
வெண்பாவின் கருத்து
சிவபெருமானும் பெருமை கொண்ட
உழிஞை மாலையைச்
சூடித் திரிபுரங்கள் மூன்றினையும்
எரித்தான். சிவ
பரம்பொருளாலும் முற்றுகையின் போது சூடப்பட்ட உழிஞை
மாலையின் பெருமையை முற்ற அறிந்தவர்கள்
யார்
இருக்கின்றார்கள்? உழிஞையின் பெருமை
அறிவதற்கு
அருமையதேயாகும்.
துறையமைதி
செஞ்சடையானும் திரிபுர தகனத்தின் போது
உழிஞையையே
சூடினான்; அதன் பெருமை அறிவார் யாருளர்? என வினவி
அதன் சிறப்பை விரித்தலின் இத்துறை முற்றுழிஞையாகின்றது.
6.4.8 காந்தள்
காந்தள் மலரைச் சூடிச் சூரபன்மனை அழித்த
முருகனோடு
உழிஞை வேந்தனை வைத்துப் பேசுதலின் காந்தள்
என்னும்
பெயரை உடையதாயிற்று இத்துறை எனலாம்.
கொளுப்
பொருளும் கொளுவும்
கரிய
நிறத்துக் கடலிடத்தே சூரபன்மனைப் பிளந்த முருகப் பெருமானின் காந்தள்
பூவின் சிறப்பை உரைப்பது காந்தள்
என்னும் துறையாம்.
கருங்கடலுள் மாத்தடிந்தான்
செழுங்காந்தள் சிறப்புஉரைத்தன்று.
(மா
= மாமரம்; மா மர வடிவில் நின்ற அசுரனை முருகன் வேலால் அழித்தான்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
கிரௌஞ்சம்
என்னும் பறவையின் பெயரைத் தன்பெயராகக் கொண்ட மலை கிரௌஞ்சகிரி. அதனை
அழித்தவன் முருகப் பெருமான். இம்முருகப் பெருமானும் காந்தள் பூவைப்
போரின் போது சூடிக் கொண்டான் என்றால், கடல் போன்ற பெரிய படையுடன் சென்று
பகைவரோடு போர் செய்யக் கருதிய யார்தாம் பூச்சூடிக்கொள்ள மாட்டார்கள்?
வென்றியை விரும்புவோர் அனைவரும் சூடிக்கொள்வர்
துறையமைதி
கடலுள் நின்ற சூர்மாவைத் தடிந்த முருகனும் காந்தள்
பூவினைப் போர்ப்பூவாகச் சூடினான். அவனைப் போல் முடிக்கும்
செயலைத் தொடங்குபவர்களில் யார்தாம் போர்ப்பூவாகிய
உழிஞையைச் சூடிக் கொள்ளமாட்டார்? சூடுவர். காந்தளைப்
புகழ்வது இதில் துறைப்பொருளை வெளிப்படுத்துகிறது.
|