6.6 மதிலைச் சூழ்ந்த நிகழ்வுகள்

பெரும் போருக்குப் பின் உழிஞை மறவர்கள் நொச்சியாரின் அரணை நெருங்கி அதனை வளைத்துக் கொண்டனர். அதன்பின் நிகழும் நடவடிக்கைகளை விளக்கும் துறைகளை அடுத்துக் காணலாம்.

6.6.1 புறத்துழிஞை

முன்னர் வெட்சியில் பார்த்த புறத்திறை, ஆத்திரள் தங்கும் காவற்காட்டின் புறத்தே வெட்சியார் தங்கியது. உழிஞையில் முன்பு இடம் பெற்ற புறத்திறை உழிஞையார் மதிலின் புறத்தே தங்கியது. இப்புறத்துழிஞை. உழிஞையார் அகழியின் புறத்தே கரையில் தங்கியதைச் சொல்வதாகும். பெயர் வேறுபாடும் காரணமும் புலனாகிறதல்லவா?

  • கொளுப் பொருளும் கொளுவும்
  • விசும்பில் படிகின்ற அளவுக்கு உயர்ச்சியையுடைய பகைவரது காவற்காட்டினைக் கடந்து சென்ற உழிஞைப்படை ஆழ்ந்த அகழியின் கரைப் பக்கத்தில் தங்கியதைச் சொல்வது புறத்துழிஞை என்னும் துறையாம்.

    விண்தோயும் மிளைகடந்து
    குண்டுஅகழிப் புறத்துஇறுத்தன்று.
    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    உழிஞை மன்னன், ஆட்களை அகப்படுத்திக் கொள்வதில் தப்பாத முதலைகளையுடைய ஆழ்ந்த நீர் அகழியிலுள்ள நீரையே பருகும் நீராகக் கொண்டு அதன் கரையில் வந்து தங்கினான். தங்கிய அதற்கே, மலைபோன்ற அரணுள்ளே இருக்கின்ற வளையல் அணிந்த பெண்டிர் வெப்பப் பெரு மூச்சினை விட்டார்கள்; வெல்லுதற்கரிய போராக இது அமையும் என்பது உறுதி என்று கண்டோர் கூறினர்.

    துறையமைதி

    அகழியின் தண்ணீரையே தன்னுடைய படைகள் பருகும் நீராகும்படி உழிஞை வேந்தன், அகழிக் கரையில் தங்கினான். தங்கிய அளவில் நொச்சி மறவருடைய மகளிர் பெரியதொரு போர் நிகழும் என வெய்துயிர்த்தனர் என்பதில் கரையில் தங்கிய செய்தி பேசப்படுதலின் இது புறத்துழிஞைத் துறையாகின்றது.

    6.6.2 பாசிநிலை

    நீரிடைப் பாசி போல நெருங்கியும் விலகியும் இருவகை மறவரும் மோதும் போர் ஆதலின் பாசிநிலை எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்
  • உழிஞை மறவர்கள் தம் பகைவராகிய நொச்சியாரின் வலி அழியும்படி அவர்கள் அகழியிடத்தே போர் புரிந்தது, பாசி நிலை என்னும் துறையாம்.

    அடங்காதார் மிடல்சாய
    கிடங்கிடைப் போர்மலைந்தன்று.

    (கிடங்கு = அகழி)

    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    பகைவராகிய நொச்சி மறவர் ஒழிவில்லாமல், இடையறவில்லாமல், ஓடம், மரத்தோணி ஆகியவற்றின் மேல் ஏறிக் கொண்டு, போர்மேல் வரும் உழிஞை மறவரைத் தடுக்கின்றனர்; சினக்கின்றனர். உழிஞை மறவர் பலர் கிடங்கிடத்தே குருதிச் சேற்றிலே, அப்பகைவர் எய்த அம்புகளால் இறந்துபட்டார்கள்.

    துறையமைதி

    நொச்சியார் சினக்கவும் மலையவும் அகழியின்கண் குருதிச் சேற்றில் அம்புபட்டு இறந்த உழிஞையார் பலர் என்பதனில் ‘கிடங்கிடைப் போர் மலைந்தமை’ கூறப்படுதலின் இத்துறை பாசிநிலை ஆகியது.

    6.6.3 ஏணிநிலை

    நொச்சியார் மதில்மேல் உழிஞையார் ஏணி சாத்தியமையைக் கூறுவதாகலின் இது ஏணிநிலை எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்
  • உழிஞை மறவர், நெருங்கிச் சென்று, மறைவாக அமைக்கப்பட்ட ஏவறைகளை உடைய நொச்சியாரது மதிலிலே ஏணியைச் சாத்தியது ஏணி நிலை என்னும் துறையாம்.

    தொடுகழல் மறவர் துன்னித் துன்னார்
    இடுசூட்டு இஞ்சியின் ஏணிசாத் தின்று.

    (துன்னி = நெருங்கி; துன்னார் = பகைவர்; சூட்டு = ஏவறை; இஞ்சி = மதில்)

    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    உழிஞையார், தாள கதிக்கு ஏற்ப நடைபோடும் புரவிப்படை உடையவர்; களிற்றுப்படை பல உடையவர். நொச்சி மறவர்கள் தமது எயிலில் பண்ணிவைத்த கல்பொறி, பாம்புப் பொறி, கனல் பொறி, குரங்குப் பொறி, வில் பொறி, வேல் பொறி ஆகியவைகள் தடுக்கவும் அவர்கள் அவற்றிற்கு அஞ்சாது, நொச்சியாரின் எயிலில் ஏறப் பல ஏணிகளைச் சாத்தினார்கள்.

    துறையமைதி

    மதில்மீது மறைவாக அமைக்கப்பட்டுள்ள கல், பாம்பு, கனல் முதலிய பொறிகள் தடுக்கவும், தயங்காதவராய்ப் பகைவர் மதில்மேல் ஏணியைச் சாத்தினர் உழிஞையார் என்பதில் கொளு கூறும் ‘ஏணி சாத்தின்று’ என்பது வருகிறது. இதனால், துறைப் பொருள் தெளிவாகப் பொருந்தி வருவது புலனாகும்.

    6.6.4 எயிற்பாசி

    பாசி மேலே படர்வது போல எயில்மேல் ஊர்தல் நிகழ்தலின் எயில்பாசி என்னும் பெயர் பெற்றது, இத்துறை.

  • கொளுப் பொருளும் கொளுவும
  • வெகுளியை உடைய உழிஞையார், நொச்சியாரின் காவல் மிகுந்த எயிலின் வலியழியும்படியாக, முன்பு எயில்மேல் தாம் சாத்திய ஏணியின் மீது ஊர்ந்ததைச் சொல்வது எயிற்பாசி எனப்படும்.

    உடல்சினத்தார் கடிஅரணம்
    மிடல்சாய மேல்இவர்ந்தன்று.

    (உடல் = பொங்கு; கடி = காவல்; மிடல் = வலிமை; இவர்தல் = நகருதல், ஊருதல்)

    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    சுட்ட செங்கல்லால் ஆகிய நெடிய மதிலைச் சுற்றி உழிஞை மறவர் பிரியாதவராய்ச் சூழ்ந்திருந்தனர். அவர்கள்மேல் நொச்சியார் எறிந்த வேல்கள் உடலை ஊடுருவிக் கொண்டு வெளிப் போந்தன. இதனால், உழிஞையார் சிலர் மாய்ந்தனர். மாய்ந்தவர்கள் போக எஞ்சிய உழிஞை மறவர் பலர், பாம்பும் உடும்பும் எவ்வாறு ஊர்ந்து மேலேறுமோ அதுபோல ஏணிமேல் ஏறினார்கள்.

    துறையமைதி

    அழிந்தவர்போக மிஞ்சிய உழிஞை மறவர் பலர் ஏணியின் மேல் பாம்பும் உடும்பும் போல் தொடர்ந்து ஊர்ந்து ஏறியது கூறப்பட்டதால் எயில் பாசி என்னும் துறைப் பொருள் பொருந்துவதாயிற்று.