5.1 ஆண்பால் கூற்று - I

பெண் ஒருத்தியைக் கண்ட ஆண்மகன் ஒருவன், அவள் அழகைக் கண்டதனால் ஏற்பட்ட வியப்பில் அவள் மானிடப்பெண்தானா? என ஐயுற்றுத் தெளியும் நிலை அவனது கூற்றுகளால் புலப்படுத்தப்படுகின்றது. காட்சி, ஐயம், துணிவு, உட்கோள் என்ற நான்கு துறைகள் இந்நிலையை விளக்குகின்றன.

5.1.1 காட்சி

பெண்ணைக் கண்டு விரும்புதல் காட்சி எனப்படுகிறது. இதனைக் கொளு,

சுரும்பிவர் பூம்பொழில் சுடர்வேல் காளை
கருந்தடம் கண்ணியைக் கண்டுநயந்(து) அன்று

என விளக்குகிறது. ‘வண்டுகள் சுற்றும் பூக்களையுடைய சோலையில், வேலினை ஏந்திய காளை, கறுத்த பெரிய கண்களைக் கொண்ட பெண்ணைக் கண்டு விரும்புதல்’ என்பது இதன்பொருள். வெண்பா இதனை அழகுபட விளக்குகிறது : ‘மூங்கில் போன்ற தோள்களையும் பெண் தன்மையையும் கொண்ட இப்பெண்ணின் சிவந்த வாய் தளிர்போல் காணவும், அரும்பு மார்புகள் பூங்கொத்தாகத் தோன்றவும், பூங்கொடி போன்ற பெண்ணின் கண்களே பூக்களை மொய்க்கும் வண்டுகளாகத் தோன்றும் ; இத்தகைய பெண்ணைப் பார்த்தேன். என் விழிகள் மகிழ்ந்தன’ என்று தலைவன் கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.

5.1.2 ஐயம்

(கண்ட பெண் எத்தகையவள் என) ஐயப்படுதல் ஐயம எனப்படுகிறது. கொளு,

கல்நவில் தோளான் கண்டபின் அவளை இன்னள்என்(று)
உணரான் ஐயம்உற்(று) அன்று

என விளக்குகிறது. ‘கல் போன்ற தோள்களையுடையவன் அப்பெண்ணைக் கண்டபின் இன்னவள் என்று அறியமுடியாமல் ஐயப்படுதல்’ என்பது பொருள். இவ் ஐயத்தன்மையினை வெண்பா புலப்படுத்துகின்றது ; ‘தாமரையில் இருக்கும் திருமகளோ? செழித்த சோலைகள் நிறைந்த வானஉலகத்து மகளோ? இனிய குரலையும் மைதீட்டிய விழிகளையும் உடைய இப்பெண் யாரெனப் புலப்படாது ஐயத்தில் என் மனம் துயரத்தில் அழுந்துகின்றது’.

5.1.3 துணிவு

(அப்பெண்) எத்தன்மையள் எனத் துணிதல் (தெளிதல்) என்பது பொருள். கொளு,

மாநிலத்(து) இயலும் மாதர் ஆமெனத்
தூமலர்க் கோதையைத் துணிந்து உரைத்தன்று

என விளக்குகிறது. ‘பூமாலை அணிந்த அப்பெண்ணை இப்பரந்த உலகில் வாழும் மானிடப்பெண் எனத் தெளிவது’ என்பது பொருள். வெண்பா இத்தெளியும் தன்மையை,

திருநுதல் வேரரும்பும் தேங்கோதை வாடும்
இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த
போகிதழ் உண்கணும் இமைக்கும்
ஆகும் மற்றிவள் அகலிடத்(து) அணங்கே

என்று அழகுபட விளக்குகிறது. வான் உலகத்துப் பெண்களுக்குரிய அடையாளங்கள் இல்லாமல் இம்மண்ணுலகத்துப் பெண்ணுக்குரிய தன்மையில் அவள் இருப்பது கொண்டு தலைவன் தெளிவதாக வெண்பா காட்டுகிறது: ‘அழகிய நெற்றியில் வியர்வை அரும்புகிறது; அவள் அணிந்துள்ள மாலை வாடுகிறது; கால்கள் நிலத்தில் தோய்கின்றன; செவ்வரி பரந்த கண்கள் இமைக்கின்றன. இந்த அடையாளங்களால் இவள் மானிடப்பெண் என்பது தெளிவாகிறது’ என்பது பொருள். வியர்வை அரும்பாமையும் மாலை வாடாமையும் கால்கள் நிலத்தில் தோயாமையும் கண்கள் இமைக்காமையும் வானுலகப் பெண்ணின் அடையாளங்கள்.

5.1.4 உட்கோள்

(பெண்ணை) உள்ளத்தில் கொள்ளுதல் என்பது இதன்பொருள். தலைவி குறித்துத் தலைவன் கொண்டுள்ள உணர்வு கொளுவில் புலப்படுத்தப்படுகிறது.

இணர்ஆர் கோதைஎன் நெஞ்சத்(து) இருந்து
உணராள் என்னைஎன உட்கொண்(டு) அன்று

என்பது கொளு. மாலை அணிந்த இப்பெண் என் மனத்தில் இருந்தும் என்னை அறியாதவளாய் இருக்கிறாள் எனத் தலைவன் உள்ளத்திலே எண்ணம் கொள்வது இதன் பொருள். வெண்பா தலைவனது உணர்வை விளக்குகிறது. ‘என் மனத்திலே கலந்த காமத்தீ என் ஆற்றலைச் சுடுகின்றது; சிவந்த இதழ்களையும் அழகிய நெற்றியையுமுடைய இவள் என் நெஞ்சிலேயே இருந்தும் தன் இனிய சொற்களால் அத்தீயை அவியாது இருக்கிறாளே!’ என்பது வெண்பா தரும் விளக்கம்.