2.1 எழுத்து எழுப்பப்படும் காரணம் பற்றியும், எழுதப்படும் காரணம் பற்றியும் வைத்த பெயர் ‘எழுத்து’ என்பதாகும். இதனை, எழுதப் படுதலின் எழுத்தா கும்மே எனவரும் அடிகள் அறிவிக்கின்றன. எழுத்தின் வேறு பெயர்கள் இரேகை, வரி, பொறி என்பனவாம். எழுத்து என்பது இயற்பெயராய் நின்று எழுத்துகளைக் (ஒலி வடிவ, வரி வடிவ எழுத்துகள்) குறிக்கும்; சுருங்கச் சொன்னால், எழுத்து என்பது நாதத்தின் - ஓசையின் - காரியமாக இருப்பது; சொல்லுக்குக் காரணமாக இருப்பது எனலாம். மேலே எழுத்து என்பது நாதத்தின் காரியமாய் இருப்பது என்று பார்த்தோம் அல்லவா? அதனைச் சற்றுச் சிந்திப்போம். நாதம் என்னும் ஓசை, கண், மெய், வாய், மூக்கு ஆகியவற்றுக்குப் புலனாகுமா? ஆகாது. செவி ஒன்றனுக்கே புலனாகும். எனவே, ஒலிவடிவ எழுத்து, கண் முதலாயவற்றுக்குப் புலனாகாமல் செவியொன்றனுக்கே புலனாவது என்று கொள்வோம். இவ்வாறே வரிவடிவ எழுத்தை நோக்குவோம். வரிவடிவம், கண்ணுக்குப் மெய்க்கும் (உடம்புக்கும்) புலனாவது. (கண்ணுக்குப் புலனாகும் என்பது சரி; மெய்க்குப் புலனாகுமா? என்ற ஐயம் தோன்றுகிறதா? தோன்றினால், அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்னும் புலவர் தமது முதுகையே எழுதும் பலகையாகக் கொண்டு கற்றார் என்றதனை எண்ணிப் பாருங்கள். ஐயம் விலகும்.) செவி வாய் மூக்கு ஆகியவற்றுக்குப் புலனாகாமல் கண்ணுக்கும் மெய்க்கும் புலனாவது ‘வரிவடிவ எழுத்து’ எனக்கொள்வதில் தடையொன்றும் இல்லை அல்லவா? ‘ஆ’ என்ற எழுத்து என்னும் போது, எழுத்துத் தன்னையே சுட்டிக்கொள்கின்றது. ‘ஆ வந்தது’ என்னும்போது, ‘ஆ’ என்ற எழுத்துத் தன்னைச் சுட்டிக்கொள்ளவில்லை; மாறாக, அதனால் சுட்டப்பெறும் பசுவாகிய ஒரு பொருளைச் சுட்டுகின்றது. அஃதாவது, பொருண்மையைச் சுட்டுகின்றது. ஆகலான், எழுத்துத் தனித்து நின்று தன்னையும் பொருளையும் சுட்டும் என்பது தெரிகிறது. தமிழில் உள்ள எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை முப்பத்து மூன்று என்பார் தொல்காப்பியர். மூன்றுதலை யிட்ட முப்பதிற்று எழுத்து (தொல்.எழுத். புணரி. 1) என்பது அவருடைய வாக்கு. இம்முப்பத்து மூன்றெழுத்துகளை அவர் முதல் என்றும் சார்பு என்றும் இருவகையாக்குகின்றார். இவரது கணக்குப்படி முதலெழுத்தின் எண்ணிக்கை முப்பதாகும்; சார்பெழுத்தின் எண்ணிக்கை மூன்று ஆகும் . வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரரும், நேமிநாதம் இயற்றிய குணவீரரும் முதலெழுத்து முப்பத்தொன்று என்கின்றனர். இவர்கள் ஆய்த எழுத்து ஒன்றனையும் சேர்த்துக்கொண்டனர். இவர்களுக்குப்பின் வந்தவர் நன்னூல் ஆசிரியர் பவணந்தியார். இவர், தொல்காப்பியரொடு ஒத்து முப்பதே கொண்டார். சார்பெழுத்துகளைக் கொள்வதிலும் இலக்கண ஆசிரியர்கள் தம்முள் வேறுபடுகின்றனர். தொல்காப்பியர் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றனையே சார்பெழுத்துகளாகக் கொண்டார். தொல்காப்பியருக்குப் பின் வந்தவர்கள் சார்பெழுத்தின் வகையும் அவற்றின் விரியுமாகத் தத்தமக்கு வேண்டியவாறே கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் பின்னர்ப் படிக்க உள்ளீர்கள். முதலெழுத்து முப்பது என்பது உயிரும் மெய்யுமாக வகைப்படும். உயிர், மெய் ஆகியவை சேரும்போது பிறப்பது உயிர்மெய் எனப்படும். ‘உயிர்மெய்’ யையும் சார்பெழுத்து என்றனர் பின்னோர். இந்த வகைகளை எல்லாம் இப்பாடத்தின் பிற்பகுதியில் விரிவாகப் படிக்க இருக்கிறோம். மொழியிலக்கணத்தார் புணர்ச்சியைப் பற்றிச் சொல்லவரும்போது எழுத்துகளை உயிர்க்கணம், வன்கணம், மென்கணம், இடைக்கணம் என நான்கு கணங்களாகப் பகுத்துக் கொள்வர். மொத்தத்தில், தமிழில் உள்ள எழுத்துகள் எல்லாமும் உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய் என்னும் நான்கு வகைக்குள் அடங்குவனவேயாம். தொல்காப்பியர் ஆய்த எழுத்தைச் சார்பெழுத்துகள் மூன்றனுள் ஒன்றாகக் கொண்டார். ஆய்தம், உயிர் எழுத்தா? மெய்யெழுத்தா? அல்லது இரண்டுமேயா? என்ற வினா எழுவது இயல்பு. ஆய்தம், உயிரா? மெய்யா? இரண்டுமா? இதனை, அசைகளைப் பற்றிப் படித்த பிறகு அலகிட்டுக் காணும்போது தெளியலாம். ஆய்த எழுத்து, ஒரு சமயம் ‘மெய்’; ஒரு சமயம் உயிர். எனவே, இதனைத் ‘தனிநிலை’ என்ற பெயராலும் சுட்டினர். ‘தனிநிலை’ என்ற பெயர் பெற்றமைக்கு வேறு ஒரு காரணமும் சொல்வதுண்டு. அதனையும் காண்போம். க் - மெய்யெழுத்து; இது, தன்மேல் உயிர் ஏற இடங்கொடுக்கும். உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்பது விதி. இதன்படி, க்+அ-க; ஃ - இதனை மெய்யென்று கொள்வோம். இது, உயிர் ஏற இடங்கொடுக்குமா? ஃ+அ-?; மெய்யாயின் உயிரேற இடங்கொடுத்து உயிர்மெய் எழுத்தை உண்டாக்க வேண்டுமல்லவா? எனவே, ஆய்தம், ‘மெய்’ அன்று; ஃ - உயிராயின் மெய்யெழுத்துகளை ஊர்ந்து வரல் வேண்டும், க்+ஃ (உயிர்) - ?; எனவே உயிரும் அன்று. ஆதலினால் தான், நம் இலக்கணப் புலவர்கள் நெடுங்கணக்கில் பன்னிரண்டு உயிர்க்கும் பதினெட்டு மெய்க்கும் இடையில் வைத்தனர் போலும். ஆய்தத்தின் வேறு பெயர்கள், அஃகேனம், புள்ளி, தனிநிலை, அலி எழுத்து என்பனவாம்.
|