3.2 சீர்

சீர் என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று. எழுத்தும் அசையும் முதல் இரண்டு உறுப்புகள். இது மூன்றாவது உறுப்பாகும். நேரசை நிரையசை என்று மேலே பார்த்துவந்த ஈரசைகளும் தம்முள் இரண்டும் மூன்றும் நான்குமாக உறழ்ந்தும் உறழாதும் இணையச் சீர்கள் உருவாகின்றன. தனி ஓர் அசையும் கூட ஒருசீர் ஆதலும் உண்டு என்பதையும், நாம் இங்குக் கவனத்தில் கொள்வது நல்லது. இச்சீர்களின் எண்ணிக்கையை வைத்துத்தான் செய்யுளின் அடிகள் இருசீரடி, முச்சீரடி என்பனவாகக் கணக்கிடப்படுகின்றன. தளைகளை உண்டாக்குவதும் சீரே ஆகும். இவற்றை யெல்லாம் பின்வரும் பாடங்களில் படிக்க இருக்கின்றோம்.

சீர் என்பது சீர்மையின் குறுக்கம். இது காரணப்பெயராகும். அசை தனித்தோ இரண்டு முதலாக இணைந்தோ சீராக (சீர்மை-ஒழுங்கு) அமைதலின் ‘சீர்’ எனப்பட்டது. தான் பெற்ற பெயருக்கேற்ப, ‘ஒலி ஒழுங்கு’ அல்லது ஒலிநயம் (Rhythm) என்னும் நடைலயத்தை உண்டாக்குவதில் தளையைப் போலவே பெரும்பங்கு வகிப்பதும் இச்சீரே. அஃதாவது ‘சீர்’ என்னும் இந்தச் செய்யுள் உறுப்பே. இனிச் சீரின் வகைகளாகிய ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் ஆகியவை பற்றி விரிவாகப் படிப்போம்.

3.2.1 அசைச்சீர் (2)

அசைச்சீர் இரண்டு. அவை, நேரசைச்சீர், நிரையசைச்சீர் என்பனவாம்.

முன்னே, ‘சீர்’ என்றதன் விளக்கப்பகுதியில் ‘தனி ஓர் அசையும் கூட ஒருசீர் ஆதல் உண்டு’ என்று பார்த்தோம். அசை, நேர்அசை, நிரைசை என்று இருவகைப்படுவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த நேர், நிரை என்னும் அசைகள் தாமே தனித்து நின்று அசைச்சீர்கள் ஆவதைக் காண்போம்.

  • நேரசை மட்டுமே சீர் ஆதல்
  • வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல் (38)
    தொடிற்சுடி னல்லது காமநோய் போல
    விடிற்சுட லாற்றுமோ தீ (1159)
    ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
    வாரி வளங்குன்றிக் கால் (14)

    இந்த மூன்று குறள்களின் ஈற்றுச்சீரினை (ஏழாவது சீரினை)ப் பாருங்கள். இவை தனிக்குறில் ஒற்று, தனிநெடில், தனிநெடில் ஒற்று எனவந்த நேரசைகள். இவை நாள் என்னும் வாய்பாட்டைப் பெறும் ஓரசைச்சீர்களாம்.

    தனிக்குறில் ஒன்றுமே ஈற்றுச் சீராய் வந்து ‘நாள்’ எனும் வாய்பாட்டில் இயங்கும் நேரசையைக் காண்பது அரிது.

  • நிரையசை மட்டுமே சீர் ஆதல்
  • ‘நேர்’ என்னும் ஓரசையே வெண்பாவின் ஈற்றுச் சீராய் வந்து ‘நாள்’ என்னும் வாய்பாட்டைப் பெற்றது போல, நிரை என்னும் ஓரசையும் வெண்பாவின் ஈற்றுச்சீராய் நின்று ‘மலர்’ என்னும் வாய்பாட்டைப் பெறும்.

    வேண்டுதல் வேண் டாமை இலானடி சேர்ந்தார்க் (கு)
    யாண்டும் இடும்பை இல                               (4)
    அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்                           (430)
    அஞ்சுவ தோரும் அறனே; ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா                              (366)
    ஏவியது மாற்றும் இளங்கிளையும், காவாது
    வைதுஎள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய்தெள்ளி
    அம்மனை தேய்க்கும் மனையாளும், இம்மூவர்
    இம்மைக்(கு) உறுதி இலார்.                      (திரிகடுகம், 49)

    மேற்கண்ட பாடல்களின் இறுதிச் சீரைப் பாருங்கள். இல, இலர், அவா, இலார் என்பவை அவை. இவை யனைத்தும் முறையே இணைக்குறில், இணைக்குறில் ஒற்று, குறில் நெடில், குறில்நெடில் ஒற்று என்றவாறு இணைந்து நிரையசை ஆயின. அதே நேரத்தில் ஓரசைச்சீரும் ஆயின; மலர் என்னும் வாய்பாட்டின ஆயின.

    ஓரசையே நின்று சீர் ஆகும் இடங்களை ஒழிபியலிலும் படிக்க இருக்கின்றீர்கள். அங்குப் பேசப்படும் அசைக்கூன் உள்ளிட்ட சீர்க்கூன், அடிக்கூன் ஆகிய மூவகைக் கூன்களுள் அசைக்கூன், எனப்பெறும் ஒன்றும் அசைச்சீரே யாம்.

  • ஒரு விளக்கம்
  • சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய் (359)

    என்பது குறள்வெண்பா. இதன் இரண்டாம் சீர் ‘சார்பு’ என்பது. இது அசைவகையால் பிரிக்கும் போது நேர், நேர் என ஈரசையாகப் பிரிகின்றது.

    சார்பு

    சார்/ பு
    நெ ஒ.
    தனிநெடில்
    ஒற்று
    தனிக் குறில்
    நேரசை

    நேரசை
    தே மா
    (வாய்பாடு)

    சார்பு - இடைத்தொடர்க் குற்றியலுகரம். யாப்பிலக்கணத்தார் கருத்தின்படி ‘நெடில் ஒற்றுக் கீழ்க் குற்றியலுகரம். குற்றியலுகரத்திற்கு மாத்திரை அரை. அரைமாத்திரை அளவில் ஒலிக்கப்படும் எழுத்துகளை யாப்பிலக்கண நூலார் கணக்கில் கொள்ளார். என்றாலும் ஈற்றில் வாராமல் இடையில் வருமானால் ஒருமாத்திரை அளவினதாகக் கொள்வர்; அலகூட்டுவர் என்ற கொள்கைப்படி இந்த சார்பு என்னும் சொல் அலகூட்டப்பட்டுள்ளது. தேமா என்ற வாய்பாட்டையும் பெற்றுள்ளது.

    ‘சார்பு’ என்பதனைப் போன்றதே ‘மார்பு’ எனும் குற்றியலுகரச் சொல்லும், இது வெண்பாவின் இறுதியில் வரும்போது இதன்கண் உள்ள ‘புகர’ மாகிய குற்றியலுகர எழுத்து அரைமாத்திரை அளவினதாகக் கருதப்படுகின்றது. கருதி, ‘காசு’ என்னும் வாய்பாடு வழங்கப்படுகின்றது.

    பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு.                          (131)

    என்பது குறள்வெண்பா. இதன் ஈற்றுச்சீர் மார்பு என்பது. வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசையாதல் வேண்டும் என்பது விதி. விதிக்கேற்பப் பகுப்போம்.

    மார்பு

    மார் / பு
    நெடில் ஒற்று தனிநெடில் குறில் ஒற்று குற்றுகரம்

    நேரசை

    (மாத்திரை, அரை; அரைமாத்திரை கணக்கில் கொள்ளப்படாது. எனவே, மெய்க்குச்சமம். மெய் அலகு பெறாதது போலக் குற்றுகரமும் பெறாது)

    ஆகவே, குற்றுகர ஈற்றிலேயே வாய்பாடும் ‘காசு’ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு என்னும் வாய்பாடும் இத்தகையதே. இவற்றை ஓரசைச்சீராகவே கொள்வர்.

    3.2.2 ஈரசைச்சீர்

    மாணாக்க நண்பர்களே! 1, 2 என்னும் இரண்டு எண்களை வைத்துக் கொண்டு உங்களால் எத்தனை இரண்டிலக்க எண்களை உருவாக்க முடியும்?

    11
    21
    22
    12

    என நான்கு எண்களைத் தாமே? ஆம் எனின், (1) நேர், (2) நிரை என்னும் இரண்டு அசைகளைக் கொண்டு உங்களால் நான்கு ஈரசைச் சீர்களையும் உருவாக்க முடியும்,

    நேர் நேர் (11)
    நிரை நேர் (21)
    நிரை நிரை (22)
    நேர் நிரை (12)

    என்று. எனவே ஈரசைச்சீர் நான்கு.

    இவ்வாறே, நிரைநிரைச்சீர், நிரைநேர்சீர், நேர்நேர்ச்சீர், நேர்நிரைச் சீர் என்பது போல மூவசை, நான்கசைச் சீர்களையும் சொல்லப்புகின் மிக விரிவாக அமையும்.

    நம் முன்னோர் இவற்றைக் குறிப்பிட வழிகளைக் கண்டுள்ளனர் அவ்வழிகளுள் ஒன்றே வாய்பாடு என்பது. வாயில் படுவதால் வாய்பாடு. வாய்பாடு-இன்ன அமைப்பினது என்பதனைக் காட்டும் குறியீடு.

    அசைகள் இரண்டும் மூன்றும் நான்குமாய் இணைந்து உருவாகும் சீர்களுக்கும் வாய்பாடு கண்டனர். அங்ஙனம் ஈரசைச்சீர்கள் நான்கனுக்கும் கண்ட வாய்பாடே தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பன.

    1. கற்க

    தேமா

    கற் / க = தே / மா
    த.கு.ஒ த.கு த.நெ. த.நெ.
    நேர் நேர் நேர் நேர்
    தே மா

    தேமா
    (வாய்பாடு)

    (வாய்பாடு)

    2. அதற்கு

    புளிமா
    அதற் / கு = புளி / மா
    கு.கு.ஒ கு. கு.கு. நெடில்
    இணைக்குறில்
    ஒற்று
    தனிக்குறில் இணைக்குறில் தனிநெடில்
    நிரை நேர் நிரை நேர்

    புளிமா (வாய்பாடு)

    புளிமா (வாய்பாடு)

    3. கசடற

    கருவிளம்
    கச / டற = கரு / விளம்
    கு.கு. கு,கு கு.கு கு.கு.ஒ
    இணைக்குறில் இணைக்குறில் இணைக்குறில் இணைக்குறில்
    ஒற்று
    நிரை நிரை நிரை நிரை

    கருவிளம் (வாய்பாடு)

    கருவிளம் (வாய்பாடு)
    4. கற்பவை

    கூவிளம்

    கற் / பவை = கூ / விளம்
    கு.ஒ. கு.கு நெ. கு.கு.ஒ
    தனிக்குறில் ஒற்று இணைக்குறில் தனிநெடில் இணைக்குறில் ஒற்று
    நேர் நிரை நேர் நிரை

    கூவிளம் (வாய்பாடு)

    கூவிளம் (வாய்பாடு)

    பாடலில் அமைந்த சீர்களைத்தாம் அலகிட்டு வாய்பாடு காண வேண்டும் என்பதில்லை. வாய்பாடுகளைக் கூட அலகிட்டு அவ்வவ் வாய்பாடுகள் ஆகும் நெறியை அறியலாம்.

    தேமா
    புளிமா
    கருவிளம்
    கூவிளம்

    என்னும் நான்கு வாய்பாடுகளையும் பாருங்கள். இவற்றில் ‘மா’ என முடியும் சீர்கள் இரண்டும் ‘விளம்’ என முடியும் சீர்கள் இரண்டும் இருப்பதை அறிவீர்கள். ‘மா’ என முடியும் இரண்டையும் ‘மாச்சீர்’ என்று வழங்குவர்; ‘விளம்’ என முடியும் இரண்டையும் விளச்சீர் என்று வழங்குவர். எனவே, நான்கு எனப்பட்ட ஈரசைச்சீர் இருவகைப்படுவது புலனாகும்.

    ஈரசைச் சீருக்கு வேறொரு பெயரும் உண்டு. அப்பெயர், அகவல் சீர் என்பதாகும். சிறப்பாக இச்சீர் நான்கும் அகவல் என்னும் ஆசிரியப்பாவுக்கு உரிமை பூண்பதால் இப்பெயர் வந்தது. செய்யுட்கு உரிய சொல்லை உரிச்சொல் என்றது போல ஆசிரியப்பாவுக்கு உரியசீர், ஆசிரிய வுரிச்சீர் என்றும் உரிமை பற்றிப் பெயர் பெறுகின்றது.

    இது, ‘இயற்சீர்’ என்றும் வழங்கப்பெறும். காரணம், இரண்டாம். ஒன்று, நேர், நிரை என்ற அசைகள் தம்மொடு தாம் இயல்பாக இணைதலால் பிறக்கும் சீர் என்பது. மற்றொன்று, நால்வகைப் பாக்களுக்கும் மூவகைப் பாவினங்களுக்கும் பொருத்தமாக இயலுகின்ற சீர் என்பதாகும்.

    3.2.3 மூவசைச்சீர்

    மூன்று அசைகளைக் கொண்ட சீர் மூவசைச்சீர். இஃது, அசையின் எண்ணிக்கையையால் உற்ற பெயராகும்.

    முன்பு 1, 2 என்னும் இரண்டு எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்கள் நான்கனை உருவாக்கிய உங்களால், 1,2 என்னும் இவ்வெண்களைக் கொண்டு மூன்று இலக்க எண்கள் எட்டனை உருவாக்க முடியும்,

    111
    211
    221
    121
    112
    212
    222
    122

    என்றவாறு. 1 என்பதை நேர் அசை எனவும், 2 என்பதை நிரையசை எனவும் கொண்டு மேல் உருவாக்கிய மூவிலக்க எண்ணுக்கேற்பப் பொருத்துங்கள்.

    111
    - நேர்
    நேர்
    நேர்
    (1)
    நேரசை இறுதி
    211
    - நிரை
    நேர்
    நேர்
    (2)
    221
    - நிரை
    நிரை
    நேர்
    (3)
    121
    - நேர்
    நிரை
    நேர்
    (4)

    112 - நேர் நேர் நிரை (1) நிரையசை இறுதி
    212 - நிரை நேர் நிரை (2)
    222 - நிரை நிரை நிரை (3)
    122 - நேர் நிரை நிரை (4)

    இம் மூவசைச்சீர்கள் எட்டனையும் உற்று நோக்குங்கள். நேரசை இறுதியாகவுடைய சீர்கள் நான்கையும், நிரையசையை இறுதியாக உடைய சீர்கள் நான்கையும் காண்பீர்கள்.

    பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்
    உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ
    மனனொடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப்
    புனனாடன் பேரே வரும்.

    இது, முத்தொள்ளாயிரத்தில் காணப்படும் வெண்பா. இந்த வெண்பாவில் இடம்பெறும் நேர் ஈற்று மூவசைச் சீர்கள் சிலவற்றுக்கு அலகிட்டுப் பார்ப்போம்.

    மாணாக்கர்களே! இவற்றினின்றும் ‘காய்’ என்னும் வாய்பாட்டில் முடியும் மூவசைச்சீர்கள் நான்கு என்பதை அறிவீர்கள். அவை:

    தேமாங்காய் - நேர் நேர் நேர்
    புளிமாங்காய் - நிரை நேர் நேர்
    கருவிளங்காய் - நிரை நிரை நேர்
    கூவிளங்காய் - நேர் நிரை நேர்

    காய்ச்சீர் நான்கும் சிறப்பாக வெண்பாவுக்குரியன ஆகும். ஆதலால், இவற்றை வெண்பா உரிச்சீர் என்றும் வெண்சீர் என்றும் வெள்ளை உரிச்சீர் என்றும் வழங்குகின்றனர்.

    நேரீற்று மூவசைச் சீரைப் பார்த்தோம். இனி நிரையீற்று மூவசைச்சீரைப் பற்றிப் படிப்போம்.

    ‘பூந்தாமரைப் போதலமரத்
    தேம்புனலிடை மீன்திரிதரும்
    வளவயலிடைக் களவயின்மகிழ்
    வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
    மனைச்சிலம்பிய மணமுரசொலி
    வயற்கம்பலைக் கயலார்ப்பவும்’

    என்பது வஞ்சிப்பாவின் முற்பகுதி. இப்பகுதியினின்றும் சில சீர்களைக் கொண்டு அவற்றுக்கு அசை பிரித்து வாய்பாடு காண்போம்.

    இனிய மாணாக்கர்களே! மேல் குறித்தவற்றிலிருந்து ‘கனி’ என்னும் வாய்பாட்டில் முடியும் மூவகைச் சீர்கள் நான்கு என்பதை அறிகின்றீர்கள் அல்லவா? அந்த நான்கு சீர்கள்:

    தே மாங் கனி - நேர் நேர் நிரை
    புளி மாங் கனி - நிரை நேர் நிரை
    கரு விளங் கனி - நிரை நிரை நிரை
    கூ விளங் கனி - நேர் நிரை நேர்

    இத்தகைய மூவசைச்சீர்களைக் கனிச்சீர் என்கின்றனர். மேலே, இக்கனிச் சீர்களைக் காண நாம் ஒரு வஞ்சிப்பாவின் (‘பூந்தாமரை’ எனத் தொடங்கும் பா) அடிகளைத் தாமே கொண்டோம்? ஆம் எனில், இக் ‘கனிச்சீர்’கள் நான்கும் சிறப்பாக வஞ்சிப்பாவுக்கே உரியன என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது அல்லவா!

    வஞ்சிப்பாவுக்குச் சிறப்பாக உரிமை உடைய இந்தக் கனிச்சீர்களை வஞ்சியுரிச்சீர்கள், வஞ்சிச்சீர்கள் என்னும் பெயர்களாலும் குறிப்பர்.

    3.2.4 நாலசைச்சீர்

    நான்கு அசைகளால் இயலும் சீர் ஆதலால், நாலசைச்சீர் எனப்படுகின்றது. இஃது, அசையின் எண்ணிக்கையைக் கருதி வைக்கும் பெயராகும்.

    முன்பு 1,2 ஆகிய இரண்டு எண்களைக்கொண்டு இரண்டிலக்க எண்கள் நான்கனையும் மூன்று இலக்க எண்கள் எட்டனையும் உருவாக்கிய உங்களால் அந்த எண்களையே கொண்டு நான்கு இலக்க எண்கள் பதினாறனை உருவாக்க முடியும்,

    1111 1112
    2111 2112
    2211 2212
    1211 1212
    1121 1122
    2121 2122
    2221 2222
    1221 1222

    என்றவாறு, முன்கூறியவாறே ‘1’ என்பதை ‘நேர்’ அசை எனவும், ‘2’ என்பதை ‘நிரை’ யசை எனவும் கொண்டு மேல் உருவாக்கிய நான்கிலக்க எண்ணுக்கு ஏற்பப் பொருத்துங்கள்.

    1) 1111
    2) 2111
    3) 2211
    4) 1211
    5) 1121
    6) 2121
    7) 2221
    8) 1221
    - நேர் நேர் நேர் நேர்
    - நிரை நேர் நேர் நேர்
    - நிரை நிரை நேர் நேர்
    - நேர் நிரை நேர் நேர்
    - நேர் நேர் நிரை நேர்
    - நிரை நேர் நிரை நேர்
    - நிரை நிரை நிரை நேர்
    - நேர் நிரை நிரை நேர்
    நேர் ஈற்று நாலசைச்
    சீர் எட்டு
    9) 1112
    10) 2112
    11) 2212
    12) 1212
    13) 1122
    14) 2122
    15) 2222
    16) 1222
    - நேர் நேர் நேர் நிரை
    - நிரை நேர் நேர் நிரை
    - நிரை நிரை நேர் நிரை
    - நேர் நிரை நேர் நிரை
    - நேர் நேர் நிரை நிரை
    - நிரை நேர் நிரை நிரை
    - நிரை நிரை நிரை நிரை
    - நேர் நிரை நிரை நிரை
    நிரை ஈற்று நாலசைச்
    சீர் எட்டு.

    இப்போது பாருங்கள், நேர் நிரை என்னும் இரண்டு அசைகளைக் கொண்டு பதினாறு சீர்களை உருவாக்க முடியும் என்று உணர்வீர்கள். உணர, நாலசைச்சீர்களின் எண்ணிக்கை பதினாறு (16) என்பதும், இவற்றுள் ‘நேர்’ என்று முடிவன எட்டுச்சீர்கள் என்பதும், ‘நிரை’ என்று முடிவன எட்டுச்சீர்கள் என்பதும் அறிவீர்கள்.

    இவற்றின் வாய்பாட்டை அறியக் காரிகையின் உரையாசிரியராகிய குணசாகரர் தரும் வஞ்சிப்பா ஒன்றனை அலகிட்டுப் பார்ப்போம். அப்பாடல்:

    செழு நீர்ப் பவளத்
    அங் கண் வா னத் தம ர ர ர சரும்
    வெங் களி யா னை வேல் வேந்தரும்
    வடி வார் கூந் தன் மங்கையரும்
    கடி மல ரேந் திக் கதழ்ந் திறைஞ்சச்
    சிங் கஞ் சுமந் த மணியணை மிசைக்
    கொங் கவி ரசோ கின் குளிர்நிழல் கீழ்ச்
    திரள்காம்பின்
    முழு மதி புரை யும் முக்குடைநீழல்
    வெங் கண் வினைப்பகை விளிவெய்தப்
    பொன் புனை நெடு மதில் புடை வளைப்ப
    அனந் தச துட் டய மவையெய்த
    நனந் தலை யுல குடை நவைநீங்க
    மந் தமா ருத மருங்கசைப்ப
    அந் தர துந் துபி நின்றியம்ப
    இலங் கு சா மரை யெழுந் தலமர
    நலங் கிளர் பூமழை நனிசொரிதர
    இனிதிருந்
    தருணெறி நடாத்திய ஆதிதன்
    திருவடி பரவுதும் சித்திபெறல் பொருட்டே.

    இந் நான்கனையும் பாருங்கள்.

    தே மா
    புளி மா
    கரு விளம்
    கூ விளம்

    என்பனவற்றோடு நேர், நேர் என்று ஈரசைகள் இணைய, அவை, தேமாந்தண்பூ-புளிமாந்தண்பூ - கருவிளம்தண்பூ - கூவிளந்தண்பூ என ஆகின்றன. இவற்றைத் ‘தண்பூ’ வில் முடியும் நாலசைச் சீர்கள் என்பர்.

    அடுத்து, இந்த நான்கனையும் பாருங்கள்.

    தேமா
    புளிமா
    கருவிளம்
    கூவிளம்

    என்பவற்றுடன் நிரை, நேர் என்று ஈரசைகள் இணைய, அவை தேமா நறும்பூ - புளிமா நறும்பூ - கருவிள நறும்பூ - கூவிளநறும்பூ என வாய்பாட்டைப் பெறுகின்றன. இவற்றை ‘நறும்பூ’ வில் முடியும் நாலசைச் சீர்கள் என்கின்றோம். பூச்சீர், தண்பூ-நறும்பூ என்னும் இருவகையினது.

    அடுத்து, இந்த நான்கனையும் பாருங்கள். தேமா - புளிமா - கருவிளம் - கூவிளம் என்பவற்றுடன் நிரை, நிரை என்று ஈரசைகள் இணைய, அவை தேமா நறுநிழல் - புளிமா நறுநிழல் - கருவிள நறுநிழல் - கூவிள நறுநிழல் என வாய்பாட்டினை கூறுகின்றன. இவற்றை ‘நறுநிழல்’ என முடியும் நாலசைச்சீர்கள் என்கின்றோம்.

    இந்தச் சீர்கள் நான்கனையும் பாருங்கள்.

    தேமா
    புளிமா
    கருவிளம்
    கூவிளம்

    என்னும் வாய்பாட்டினைக் கொண்ட நான்கு ஈரசைச்சீர்களுடன் தனித்தனி நேர், நிரை என்னும் இரண்டு அசைகளைக்கூட்ட நான்கசைச் சீர்களாகின்றன. ஆகி முறையே

    தேமாந் தண்ணிழல்
    புளிமாந்தண்ணிழல்
    கருவிளந்தண்ணிழல்
    கூவிளந் தண்ணிழல்

    என்னும் வாய்பாட்டை உறுகின்றன. ‘தண்ணிழல்’ என்னும் முடிவின இவை. ஆக

    தண் பூ - (4)
    நறும் பூ - (4)
    தண்ணிழல் - (4)
    நறுநிழல் - (4)

    என்று பதினாறு வகைப்படுகின்றது நான்கசைச்சீர்.

    நான்கசைச்சீர்கள் பதினாறும் பொதுச்சீர் எனப்பெறும். இவ்வாறு சொல்வதற்குக் காரணம், எல்லா வகைப் பாடல்களுக்கும் உரிய பொதுச்சீர் என்பதன்று. அவ்வாறு இந்த நாலசைச்சீர் ஒன்றும் நால்வகைப் பாக்களிலும் பயின்றுவருவதில்லை. வஞ்சிப்பாவில் மட்டுந்தான் ஓரளவிற்குப் பயில்கின்றது. பின்னர் ஏன் இதனைப் ‘பொதுச்சீர்’ என்றனர்?

    ‘பொது’ என்பதற்குச் ‘சாதாரணம்’ என்பது பொருள். அவ்வளவு சிறப்பில்லாத மக்களைப் ‘பொதுமக்கள்’ என்று சொல்லுவதை / குறிப்பதைக் காண்கின்றோம். இஃது இந்தப் பொருளில் வருவதைப் ‘பொது மக்கட்கு ஆகாதே பாம்பறியும் பாம்பின கால்’ என்னும் பழமொழி நானூற்று அடியில் பார்க்கலாம். சிறப்பில்லாத இந்தச் சீரை இக்காரணத்தால்தான் ‘பொதுச்சீர்’ என்றனர். அலகிடும் போது பூச்சீர், காய்ச்சராகவும், நிழல்சீர் கனிச்சீராகவும் கொள்ளப்படும்.