5.3. தொடை

’தொடு’ என்னும் ஏவல் கண்ணிய வினைப்பகுதியுடன் இயைந்து (தொடு+ஐ)’தொடை’ என்னும் செயப்படுபொருட்பெயரை உண்டாக்குகின்றது. தொடை என்பதற்கு இங்குத் ’தொடுக்கப்படுவது’ ஆகிய பொருள் என்று அருத்தம்; ’ஐ’ செயப்படுபொருள் விகுதி. தடுக்கப்படுவது தடை; மடுக்கப்படுவது மடை; இறுக்கப்படுவது இறை; நிறுக்கப்படுவது நிறை; எடுக்கப்படுவது எடை என்றாற்போலத் தொடுக்கப்படுவது தொடை என்றாயிற்று.

மாலை தொடுக்கப்படுவது என்ற காரணத்தால், அது, தொடை எனவும் வழங்கப்படும். தொடை என்பது மேலும் ஒரு விகுதியை(அல்) ஏற்றுத் ’தொடையல்’ எனவும் வழங்கப்பெறும். ‘என் சொற்றொடையல் ஏற்றருளே’ என்கின்றார் ஓர் அருளாளர்.

செய்யுளும் கட்டப்படுவது தானே! தொடுக்கப்படுவது தானே! ஆம். குமரகுருபரர்,

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்

என மதுரை மீனாட்சியம்மையை விளிக்கின்றார். மேலும் அவர், ‘தொடையின் பயனே நறைபழுத்த தீந்தமிழின் ஒழுகு நறும் சுவையே’ என விளிப்பதைக் கொண்டு பாட்டாகிய தொடையும் இன்பம்; அதன்கண் பயிலும் தொடையும் இன்பம் என்பவற்றையும் உய்த்துணர்ந்து கொள்ளுங்கள். மாணாக்கர்களே, தொடை என்பது பாடலுக்கு ‘அழகு’ சேர்ப்பது மட்டும் அன்று; நறும் சுவையைக் (இன்பத்தை) கூட்டுவதும் ஆகும்.

செய்யுளின் சுவையைக் கூட்டுவதற்குச் செய்யுளின் அகவயத்ததாகிய கற்பனை, கற்பனையுள் அடங்குகின்ற உவமம் முதலாய கூறுகள் பல உள. செய்யுளின் அழகும் சுவையும் ஊட்டும் அகவயக்கூறே தொடை எனலாம். செய்யுளைப் படைக்குங்கால் கவிஞர்கள் எழுத்து, சொல், பொருள் இலக்கணங்களில் இடம்பெறும் மொழிக்கூறுகள் சிலவற்றைப் பயன்படுத்தித் தொடுக்கின்றனர் அல்லது கட்டுகின்றனர். அவற்றையே நாம் ‘தொடை’ என்கின்றோம். இத்தொடைகளை முழுப்பாட்டில் பயிலத் தொடுப்பதன்றிப் பாட்டின் பகுதிகளாகிய அடியில் அடங்கும் சீர்களிலும் பயிலவிடுகின்றனர். இவை தம்மை,

1. எழுத்து நிலையில் அமையும் தொடை
2. சொல் நிலையில் அமையும் தொடை
3. எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை
4. சொல்லும் பொருளும் என்ற நிலையில் அமையும் தொடை
5. சூன்ய (zero) நிலையில் அமையும் தொடை

என்னும் வகையில் வகுத்துக்கொண்டு படிக்கத் தொடங்குவோம். இப்படியொரு பகுப்பைக் கொள்ள இடம் வைத்துள்ளனரே யன்றி யாப்பிலக்கண நூலார் இவ்வாறு பகுக்கவில்லை. இனிய மாணாக்கர்களே! புரிதலில் எளிமை கருதி உங்களுக்காகக் கொண்ட பிரிவுகளே இவை.

5.3.1 எழுத்து நிலையில் அமையும் தொடை

எழுத்து நிலையில் அமையும் தொடை என்றது மொழியினது (Language) எழுத்திலக்கணக் கூறுகளில் சிலவற்றைப் பயன்படுத்திச் செய்யுளை அழகுண்டாகத் தொடுப்பதை/கட்டுவதை ஆகும். இவ்வகையில் அமையும் தொடைகள்,

அ. மோனைத் தொடை
ஆ. எதுகைத் தொடை
இ. அளபெடைத் தொடை

என்பனவாம்.

  • அ. மோனைத்தொடை
  • செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை எனப்பெறும். அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வரும் காரணம் பற்றி, இது அடிமோனை எனவும் வழங்கப்பெறும்.

    ணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி
    ரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி
    ம்பொன் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி
    கன்ற அல்குல் அந்நுண் மருங்குல் ...

    எனவரும் இந்தப் பாடலைப் பாருங்கள். நான்கு அடிகளே காட்டப்படுகின்றன. அடிதோறும் முதல்மொழியாய் வருபவை ‘அ’ என்ற உயிரெழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவை என்பதை அறிவீர்கள். அவை ‘அ’ என ஒன்றி வந்துள்ளன.

    மாவும் புள்ளும் வதிவயின் படர
    மாநீர் விரிந்த பூவும் கூம்ப
    மாலை தொடுத்த கோதையும் கமழ
    மாலை வந்த வாடையின்
    மாயோள் இன்னுயிர் புறத்துஇறுத் தற்றே

    இந்தப் பாடலைப் பாருங்கள். இதன்கண் அடிதோறும் அமைந்த மாவும், மாநீர், மாலை, மாயோன் என்னும் முதல்சீர்களின் முதலெழுத்து ‘மா’ என்னும் உயிர்மெய் நெடிலாய் ஒன்றி அமைவதைக் காண்பீர்கள். இங்ஙனம் ஒவ்வோர் அடியிலும் வரும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத்தொடையாகும்.

  • எதுகைத்தொடை
  • செய்யுள் ஒன்றின் அடிகள்தோறும் முதலெழுத்து ஒழிந்த இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத்தொடை ஆகும். அடிதோறும் வரும் காரணம் பற்றி இந்த எதுகைத்தொடையை அடிஎதுகை என்று வழங்குவதும் உண்டு. இரண்டாம் எழுத்து, மெய்யாகவோ உயிர்மெய்யாகவோ ஆய்தமாகவோ அமையும்.

    டியேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார்
    டியார்; கனங்குழாய்! காணார்கொல்? காட்டுள்
    டியின் முழக்(கு)அஞ்சி ஈர்ங்கவுள் வேழம்
    பிடியின் புறத்தசைத்த கை.

    இந்த வெண்பாச் செய்யுளின் ஒவ்வோர் அடியின் முதற்சீரிலும் வரும் இரண்டாம் எழுத்து ‘டி’ என்னும் ஒரே எழுத்தாக அமைந்திருப்பதால் இது எதுகைத்தொடை ஆயிற்று. அடிதோறும் வந்த எதுகையாதலின் ‘அடியெதுகை’ என்று இந்த எதுகைத்தொடை வழங்கவும் பெறும்.

    மாணாக்கர்களே! எதுகை என்பது இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது மட்டுமன்று. அதன் முதலெழுத்தாக நின்ற எழுத்தின் மாத்திரையளவும் ஒன்றி இருக்க வேண்டும். ‘கட்டு’ என்பதற்குப் ‘பட்டு’ என்பது எதுகை. இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்றது என்பதற்காகப் ‘பாட்டு’ என்பது எதுகையாகாது. இவ்வாறே ‘பாட்டு’ என்பதற்குக் ‘காட்டு’ என்பதே எதுகையாகுமே அன்றிப் ‘பட்டு’ என்பது எதுகையாகாது, என்பதனை நெஞ்சில் நிறுத்துங்கள். மாத்திரையும் அளவில் ஒன்றி வரவேண்டும் என்பது கருத்து. இக்கருத்தைக் காரிகையின் உரையாசிரியர்,


    இரண்டாம் எழுத்து ஒன்றின் எதுகை ’என்னாது‘ வழுவா
    எழுத்து’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், இரண்டாம் எழுத்து
    ஒன்றிவரினும் முதலெழுத் தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய்
    வந்து கட்டு என்பதற்குப் பட்டு என்பது அல்லது பாட்டு என்பது
    எதுகை ஆகாது. காட்டு என்பதற்குப் பாட்டு என்பதல்லது பட்டு
    என்பது எதுகையாகாது எனக்கொள்க

    என்று ‘மிகை’ வகையை அறிவிக்கின்றார்.

  • அளபெடைத்தொடை
  • ஒரு செய்யுளின் அடிகள்தோறும் முதற்கண் வரும் உயிர் நெடில் அல்லது உயிர்மெய், நெடில் எழுத்துகள் அளபு எடுத்து ஒன்றிவரத் தொடுப்பின், அது, அளபெடைத்தொடை எனப்பெறும்.

    உயிர் எழுத்துகளுள் நெடிலும், உயிர்மெய்யுள் நெடிலும் தாம் அளபெடுக்கும் என்பதும், இவை மொழிமுதல், இடை, கடை என்னும் மூவிடங்களிலும் அளபெடுக்குமாயினும் முதலில் எடுக்கும் ஒன்றே கொள்ளப்படுகின்றது. மொழிக்கு முதலில் வராது என்று கொள்ளப்படும் மெய்யும் ஆய்தமும் அடியின் முதல்சீரில்,

    எங்ங்கி றைவனுளன் என்பாய் மனனே யா
    னெங்ங் கெனத்திரிவா ரின்’

    எனவும்

    கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு
    பொன்ன் பொறிசுணங்கு போழ்வாய் இலவம்பூ
    மின்ன் னுழைமருங்குல் மேதகு சாயலாள்
    என்ன் பிறமகளா மாறு

    எனவும்

    எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயர்
    வெஃஃகு வார்க்குஇல்லை வீடு

    எனவும்

    அமையுமாயின், ஒற்றளபெடையும் ஒற்றில் அடங்கும் ஆய்தமும் எதுகை என்னும் நிலையை அடைந்துவிடுகின்றன. எனவே, இங்கு அளபெடை என்றது உயிரளபெடையையே எனக் கொள்ளலாம் போலத் தோன்றுகின்றது.

    ஆஅ அளிய அலவன்தன் பார்ப்பினோடு
    ஈஇர் இரைகொண்டு ஈர்அளைப் பள்ளியுள்
    தூஉம் திரை அலைப்பத் துஞ்சாது, இறைவன்தோள்
    மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால்!
    ஓஒ உழக்கும் துயர்.

    இந்தச் செய்யுளில் ‘ஆஅ’ ‘ஈஇ’ ’ஓஒ’ என்பன உயிர்நெடில்கள் அளபெடுத்தமைக்குக் காட்டாக அமைகின்றன. ’தூஉ’ ‘மேஎ’ என்பன உயிர்மெய்யில் உள்ள அல்லது மெய்யை ஏறிய உயிர்நெடில்கள் அளபெடுத்தமைக்குக் காட்டாகின்றன. முதலில் நின்றன ‘த்’,‘ம்’ என்னும் எழுத்துகளேனும் ஒற்றுமை நயம் கருதி முதல் எழுத்து அளபெடுத்ததாகக் கூறுவது மரபு.

    5.3.2 சொல் நிலையில் அமையும் தொடை.

    மொழியினது (Language) சொல்லிலக்கணக் கூறுகளில் ஒன்றினைப் பயன்படுத்திச் செய்யுளை அழகுண்டாகத் தொடுப்பதைச் சொல் நிலையில் அமையும் தொடை என்பர். இவ்வகையில் அமையும் தொடை ஒன்றே ஒன்று. அது இரட்டைத்தொடையாகும்.

  • இரட்டைத்தொடை
  • ‘’இரட்டைத்தொடை’’ என்பதில் இடம்பெறும் இரட்டை என்பது ’’இரண்டு’’ என்னும் பொருளில் வருவதன்று. அது,

    பாவடி யானைப் படுமணி இரட்டும்
    மலைவீழ் அருவி முரசென இரட்டும்
    இரட்டும் ஒள்ளருவி’ ‘பறையிரட்ட

    என்ற இடங்களில் தொடர்நிகழ்வைச் சொல்ல வருவதைப் போன்றது. அதாவது, மீண்டும் மீண்டும் வருதல் என்னும் பொருளில் வழங்குவது என்று குறிக்கலாம்.

    ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
    விளக்கினுள் சீறெரி ஒக்குமே ஒக்கும்
    குளக்கொட்டிப் பூவின் நிறம்

    இந்தப் பாடலில் இரண்டாம் அடியில் வரும் ‘ஒக்குமே ஒக்கும்’ என்பது இரட்டைத்தொடை ஆகாது. ஏனெனில் ‘ஒக்குமே’ என்பது அந்த இரண்டாம் அடி முழுவதும் வரவில்லை. ஆனால், முதலடியில் நான்குசீர் முழுதும் (பலமுறை) அடுக்கிவரும் ‘ஒக்குமே’ என்ற சொல்லைப் பார்க்கின்றோம். இதுதான் இரட்டைத்தொடை.

    எனவே, நாற்சீர் ஓரடியின் முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது இரட்டைத்தொடை என்றாகின்றது.

    5.3.3 எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை

    எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை என்றது எழுத்து, சொல் ஆகிய இரண்டு பற்றிய மொழிக்கூறுகளைப் பயன்படுத்தி அழகுபடக் கூறும் தொடையமைப்பையாகும். இவ்வமைப்பில் அடங்குவன இரண்டு. அவை, ஒன்று இயைபுத்தொடை; மற்றொன்று அந்தாதித்தொடை என்பனவாம்.

  • இயைபுத்தொடை.
  • செய்யுளின் அடிதோறும் இறுதி எழுத்து, அல்லது இறுதி அசை அல்லது இறுதிச்சொல் மீண்டும் மீண்டும் வருமாறு தொடுப்பது இயைபுத் தொடை எனப்படும். ‘இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே’ என்கின்றார் தொல்காப்பியர்.

    சூரல் பம்பிய சிறுகான் யாறே
    சூரர மகளிர் ஆரணங் கினரே
    வாரல் எனினே யான்அஞ் சுவலே
    சாரல் நாட நீவரல் ஆறே

    இந்தப் பாடலின் எல்லா அடியின் ஈற்றிலும் ‘ஏ’ என்னும் ஒரே எழுத்து மீண்டும் மீண்டும் வருமாறு தொடுக்கப்பட்டுள்ளது காண்க.

    வானில் பறக்கிற புள்ளெலாம் நான்
    மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
    கானிழல் வளரும் மரமெலாம் நான்
    காற்றும் புனலும் கடலுமே நான்;

    விண்ணில் தெரிகின்ற மீன்எலாம் நான்
    வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
    மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
    வாரியில் உள்ள உயிரெலாம் நான்.

    இந்தப் பாடலின் அடிகள் எல்லாமும் ‘நான்’ என்ற அசையில் அல்லது நான் என்ற சொல்லில் முடிந்துள்ளன.

    இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே
    தன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே
    ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே
    அரிமதர் மழைக்கணும் அணங்கே
    திருநுதற் பொறித்த திலதமும் அணங்கே

    - இச்செய்யுளின் அடிகள் எல்லாமும் ‘அணங்கு’ என்னும் சொல் மட்டும் அன்றி ‘ஏ’ என்னும் அசைநிலையும் இறுதியில் வரத் தொடுக்கப்பட்டுள்ளது.

  • அந்தாதித்தொடை
  • செய்யுள்அடி ஒன்றின் இறுதியில் நின்ற எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த அடியின் முதலாக வருமாறு தொடுப்பது அந்தாதித் தொடை என்பர். அந்தமாக நின்றது ஆதியாக வருவது அந்தாதி. அந்தம்+ஆதி = அந்தாதி.

    அடி 1. உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
    அடி 2. மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
    அடி 3. முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
    அடி 4. ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
    அடி 5. ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
    அடி 6. அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து
    அடி 7. துன்னிய மாந்தரது என்
    அடி 8. ன்னரும் சிறப்பின் விண்மிசை
    உலகே

    உலகு எனத் தொடங்கி உலகு என முடிந்து மண்டலித்து வரும் இப்பாட்டில் 6 ஆம் அடியின் அந்தம் ‘து’ என்னும் எழுத்து. அது ஏழாம் அடியின் ஆதியாக (து) வந்துள்ளது. இவ்வாறே ஏழாம் அடியின் அந்தம் ‘ப’ என்னும் எழுத்து, எட்டாம் அடியின் ஆதியாக வந்துள்ளது. இது எழுத்தந்தாதிக்குக் காட்டாகின்றது. முதலடியின், இறுதிச்சீர், ‘அவிர்’ என்னும் நிரையசையும் ‘மதி’ என்னும் நிரையசையும் கூடிய ‘கருவிளம்’ என்னும் வாய்பாட்டு ஈரசைச்சீர் ஆகும். இதன் இறுதி அசை ‘மதி’ என்பது இரண்டாம் அடியின் ஆதியானது. எனவே, அசை அந்தாதி.

    இரண்டாம் அடியின் அந்தம் ‘முக்குடை’ என்ற ஈரசைச்சீர். இந்தச் சீர் (முக்குடை) முழுதும் மூன்றாம் அடியின் ஆதிச்சீராக வந்துள்ளது. இவ்வாறே ‘ஆசனம்’ என்னும் மூன்றாம் அடியின் அந்தச்சீர், நான்காம் அடியின் ஆதிச்சீராக வந்துள்ளது. ’அறிவு’ என்னும் ஐந்தாம் அடியின் அந்தச்சீர் ஆறாம் அடியின் ஆதிச்சீராக வந்துள்ளது. ஆக, இவை மூன்றும் சீர்அந்தாதிகள் ஆகும். நான்காம் அடிமுழுதும் ஆறாம் அடியாக மடங்கி வந்துள்ளது. ஆதலால், இஃது ஒன்றும் அடியந்தாதி. இதன்கண் எழுத்தந்தாதி, அசையந்தாதி. சீர்அந்தாதி, அடியந்தாதி என்ற நால்வகை அந்தாதிகளையும் காண்கின்றோம்.

    5.3.4 சொல்லும் பொருளும் என்ற நிலையில் அமையும் தொடை

    ஒரு செய்யுளின் ஒவ்வோர் அடியின் தொடக்கத்திலும் சொல்லால் முரண்பாடு தோன்றவும் அல்லது பொருளால் முரண்பாடு தோன்றவும் பாடலைக் கட்டுவது/தொடுப்பது முரண்தொடை எனப்பெறும்.

    காலையும் மாலையும் கைக்கூப்பிக் கால்தொழுதால்
    மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
    கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
    பெருமானைச் சிற்றம் பலத்து

    -இது தண்டியலங்கார மேற்கோள் வெண்பா. இது, சொல்விரோத அணிக்குக் காட்டாக்கப்படுகின்றது. மாறுபாடு, முரண், விரோதம் என்பன ஒரு பொருளை உணர்த்திவரும் சொற்களாம். இதனுள்வரும் காலை, மாலை; கை, கால்; மேல், கீழ்; கருமை, வெண்மை; செம்மை, பசுமை; பெருமை, சிறுமை என்பன முரண் சொற்களாம்.

    கார்காலத்து மாலையில் குயில்கள் சோர்வெய்தும்; மயில்கள் ஆர்த்து நடம் இடும். இவை. ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருள்கள்.

    சோலை மயிலும் குயில்மழலை சோர்ந்தடங்க
    ஆலும் மயிலினங்கள் ஆர்த்தெழுந்த - ஞாலம்
    குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த
    விளர்ந்த துணைபிரிந்தார் மெய்

    இப்பாடலிலும் குளிர்ந்த, கறுத்த; சிவந்த, விளர்ந்த எனும் சொல்முரண்களைக் காண்கின்றோம். ஆனால், இவ்விருவகை முரண்களும் பாடலின் அடிதோறும் முதல்சீரில் இடம்பெறவில்லை.

    இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்
    நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை
    இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
    பொன்னின் அன்ன நுண்தாது உறைக்கும்
    சிறுகுடிப் பரதவர் மடமகள்
    பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே

    இந்தப் பாடலில் இருள், நிலவு; சிறு, பெரு எனச் சொல்முரணும், இரும்பு, பொன் என்னும் பொருள்முரணும் ஒவ்வோர் அடியின் முதலிலும் வருமாறு தொடுக்கப்பட்டுள்ளன. ஆதலின் முரண்தொடை ஆகின்றது. அடிதொறும் வரும் சொற்களால் முரணானமையால் இது, அடிமுரண்தொடை என்றும் கூறப்பெறும்.

    5.3.5 சூன்ய (zero) நிலையில் அமையும் தொடை

    இராமன்-பெயர்ச்சொல், ஒருவனின் பெயர். ‘இராமன் பாடினான்’ என்னும்போது ‘இராமன்’ என்பது பெயரன்று; அது வினைமுதல். வினைமுதல், செய்பவன், கருத்தா, எழுவாய் என்பன ஒருபொருளையே குறிப்பனவாகும்.

    வேற்றுமை என்பதன் பெயர்க்காரணத்தைக் கூறுகின்றார், தெய்வச்சிலையார் என்னும் உரையாசிரியர். அது வருமாறு:

    “என்னை வேறுபடுத்தியவாறு எனின், ஒருபொருளை ஒருகால் வினைமுதல் ஆக்கியும், ஒருகால் செயப்படுபொருளாக்கியும், ஒருகால் கருவி ஆக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும், ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு வேறுபடுத்தது என்க”

    தெய்வச்சிலையாரின் விளக்கமாகிய வெளிச்சத்தில் பார்த்தால், எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதுகூட வெற்றுரையாகி விடுகின்றது. உருபு உண்டு என்றாகின்றது.

    இராமன் - பெயர்ப்பொருள்
    இராமன் படித்தான் - வினைமுதல் பொருள்

    வினைமுதல் பொருளாக்கிய வேற்றுமை உருபு எது? முதல் வேற்றுமை உருபு. முதல் வேற்றுமைக்கு உருபு உண்டா? இல்லை. உருபு இல்லையெனின் பெயர்ப்பொருள் வினைமுதல்-எழுவாய்- செய்பவன் என வேறாக்கப்பட்டது எவ்வாறு? அப்படியா? உருபு இருக்கின்றது; தெரியவில்லை. தெரியாத அதனைச் ‘சூன்ய உருபு’ என்பர். இராமன்+0+ படித்தான் என்றும் எழுதிக்காட்டுவர். இப்படிப் பலவற்றைக் காட்டலாம்.

    Sheep grazes the grass-ஆடு புல்லை மேய்கிறது
    Sheep graze the grass-ஆடுகள் புல்லை மேய்கின்றன
    (S= morph)
    Deer goes fastly-மான் விரைவாக ஓடுகிறது
    Deer go fastly-மான்கள் விரைவாக ஓடும் (S; morph)
    (படர்க்கை ஒருமைக்கு grazes. goes என வரும் என்பதும், he. She. It-க்கு வினையொடு ‘s’ வரும்; ‘They’ என்னும் படர்க்கைப்பன்மையில் நிகழ்கால வினையில் ‘s’ வராது என்பன கொண்டு மேற்கண்ட எடுத்துக்காட்டை நோக்க வேண்டும்).

    செந்தொடை என்பது நாம், மேலே கண்ட மோனை முதலாகிய தொடைகளுள் எதுவொன்றும் அமையாமல் தொடுப்பதாகும். அஃதாவது எந்த வகைத் தொடைநயமும் இன்றித் தொடுப்பது செந்தொடை.

    எ-டு:

    பூத்த வேங்கை வியன்சினை ஏறி
    மயிலினம் அகவும் நாடன்
    நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே’

    இந்தப் பாட்டில் எவ்வகைத் தொடையும் அமையவில்லை.

    முதல் வேற்றுமைக்கு உருபு இல்லையெனினும் ஏதோ ஒன்று பெயர்ப்பொருளை வினைமுதல் பொருளாக்குகின்றது. அது சூன்ய உருபு. அதுபோலச் செந்தொடைப்பாட்டில் எந்தத் தொடையும் இல்லையெனினும் நயம் இருக்கின்றது. அது, சூன்யத்தொடை எனலாம் போலத் தோன்றுகின்றது.

    செவ்விய ஒலியும் ஒலியாலாகும் மொழியும் இல்லையானாலும் குழந்தையின் சொல்லைச் ‘செங்கீரை’ என்கின்றோம். கீரை-சொல். ‘செங்கீரை’ என்பது பிள்ளைத்தமிழில் பிரசித்தம். ஏ, என்றா, எனா, உம்மை, என்று, என, ஓடு என்னும் எண்ணிடைச் சொற்கள் யாதொன்றும் வாராமல் ‘சாத்தன் கொற்றன் தேவன் பூதன் நால்வரும் வந்தார்’ என்றாற்போன்று வருவதைப் ‘பெயர்ச்செவ்வெண்’ என்பர். செங்கீரை, செவ்வெண் என்பன போன்று யாதொரு தொடையும் வாராமல் தொடுப்பதைச் செந்தொடை என்றார்கள் போலும்.

    ‘பூத்த ................தோனே’ என்னும் செந்தொடைப்பாட்டு, தோழி அறத்தொடு நின்றதாக அமைந்து கழிபேரின்பம் தருகின்றது.