5.2
எழுத்துகளுக்குப் புறனடை
உறுப்பியலில் எழுத்துகளின் அளவு (மாத்திரை) பற்றி
அறிந்தீர்கள். சில எழுத்துகள் செய்யுளில் இடம்பெறும் போது, செய்யுளின் ஓசை
அமைப்பில் பிழை நேராதிருப்பதற்காக, அவற்றின் அளவு மாறுவதுண்டு. அதாவது அலகிடும்போது
(அசையாக்கிப் பிரிக்கும் போது) இந்த மாற்றங்கள் தேவைப்படலாம். அதனை இங்குக்
காணலாம்.
5.2.1
குற்றியலிகரமும் குற்றியலுகரமும்
உறுப்பியலில் குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகியவை
அரை மாத்திரை பெறும் எனக் கூறப்பட்டது.ஒற்றெழுத்துகளும் அரை மாத்திரை பெறுவனவே.
எனினும் எழுத்துகளைக் கூட்டி அலகிடும் போது குற்றியலிகரத்தையும் குற்றியலுகரத்தையும்
பிற குற்றெழுத்துகளைப் (ஒரு மாத்திரை பெறுவன) போலக் கொண்டு அலகிடுவதே வழக்கமானது.
ஆனால் செய்யுளில் அவை இடம்பெறும் சீர்களில் ஓசை அமைப்புக் கெட்டுச் சீரும்
தளையும் சிதையுமானால் குற்றியலிகரத்தையும்,
குற்றியலுகரத்தையும் ஒற்றுப் போலக் கொண்டு, அலகிடாமல் விட்டுவிட வேண்டும்.
சிறுநன்றி இன்றிவர்க்கியாஞ்
செய்தக்கால் நாளைப்
பெருநன்றி மன்னும் பெரிதென் - றுறுநன்றி
தானவாய்ச் செய்வதூஉம் தானமன் றென்பவே
வானவாம் உள்ளத் தவர்.
- (யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்) |
(இன்று
இவர்க்கு யாம் = இன்றிவர்க்கியாம்
= கி, குற்றியலிகரம் ; மன்னும் = மேலும் ; அவாய் = விரும்பி ; வான் = விண்ணுலகு)
மேற்காட்டிய வெண்பாவில்
இன்றிவர்க்கியாம் - செய்தக்கால் என்னும் சீர்களை
இயல்பாக அலகிட்டால் கூவிளங்கனி-தேமாங்காய் என வரும். கனி முன் நேர் என ஒன்றாத
வஞ்சித் தளை வரும். வெண்பாவில் கனிச்சீரும் வஞ்சித் தளையும் வரக்கூடாது.
ஆகவே வெண்பாவின் செப்பலோசையைக் காக்கக் ‘கி’ என்பதில்
உள்ள குற்றியலிகரத்தை அலகிடாமல் விட்டுவிட வேண்டும். விட்டுவிட்டால் இன்றிவர்க்க்யாம்
என அச்சீர் கூவிளங்காய்ச் சீராகும். காய்முன் நேர் என வெண்சீர் வெண்டளையும்
அமையும். சீரும் தளையும் சிதையாமலிருக்கும்.
எடுத்துக்காட்டு :
அருளல்ல தியாதெனில்
கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
-
(திருக்குறள், 254) |
(அருள்
அல்லது யாதெனில் > அருளல்லதியாதெனில் = தி குற்றியலிகரம். அருள்
இல்லது = அருளும் இல்லாததும் ; கோறல்
= கொல்லுதல்)
இவ்வெண்பாவில் அருளல்ல
தியாதெனில் > புளிமாங்காய் - கருவிளம், காய் முன்
நிரை எனக் கலித்தளை வரும். வெண்பாவில் கலித்தளை வரக்கூடாது. ஆகவே ‘தி’ எனும்
குற்றியலிகரத்தை அலகிடாமல் விட்டுவிட வேண்டும். அருளல்ல யாதெனில் > புளிமாங்காய்,
கூவிளம் > காய்முன்நேர் என வெண்சீர் வெண்டளை அமையும்.வெண்பா ஓசை சிதையாது.
இனிக் குற்றியலுகரத்தை அலகிடும் முறை பற்றிக் காண்போம்.
கொன்றுகோடுநீடு
குருதிபாயவும்
சென்றுகோடுநீடு செழுமலைபொருவன
வென்று கோடுநீடு விறல்வேழம் |
(கோடு
= யானைக் கொம்பு, மலைக்குவடு ; பொருவன
= மோதுவன ; விறல் = வலிமை)
என வரும் வஞ்சிப்பா அடிகளைப் பாருங்கள். வஞ்சிப்பாவில் கனிச் சீர்கள், பொதுச்
சீர்கள் (நாலசைச் சீர்) மிகுந்துவரும். ஓரளவு காய்ச்சீரும் வரலாம். ஆனால்
மேற்காட்டிய வஞ்சியடிகளில் ஆறசைச் சீர்கள் வந்துள்ளன.
கொன்-று-கோ-டு-நீ-டு (இங்கு மாணவர்க்கு ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
கொன்-றுகோ-டுநீ-டு என அலகிட்டால் அது நாலசைச் சீர்தானே எனலாம். இது சரிதான்.
ஆயினும் ஒரு சீருக்குள் பல சொற்கள் வரும்போது ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே
அலகிடுவதும் ஒருமுறை அம்முறைப்படி அலகிட்டால் மேற்குறிப்பிட்டது போல ஆறசைச்
சீர் வருகிறது.) எந்தப் பாவிலும் ஆறசைச் சீர் வரக்கூடாது. ஆகவே று, டு எனும்
குற்றியலுகரங்களை (அடிக்கோடிடப் பெற்றவை) அலகிடாமல் விட்டுவிட்டால் (கொன்-கோ-நீ)
அச்சீர்கள் மூவசைச் சீர்களாகி விடும். சீரும் தளையும் சிதையாமலிருக்கும்.
5.2.2
உயிரளபெடை
உயிரளபெடை மூன்று மாத்திரை பெறும் என உறுப்பியலில்
கூறப்பட்டது. ஆனால் சீரும் தளையும் சிதையும் நிலை வருமானால் அளபெடை நெட்டெழுத்துப்
போலவே கொண்டு அலகிடப் பெறும்.
எடுத்துக்காட்டு :
பல்லுக்குத் தோற்ற
பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னும் தோற்றிலவால் - நெல்லுக்கு
நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும்
மாறோமால் அன்றளந்த மண்.
- (யாப்பருங்கலக் காரிகை,
உரைமேற்கோள்) |
(தோற்றில
= தோன்றவில்லை ; நூறோஒநூறு = விலை கூவி
விற்றல் ; மாறு = ஒப்பு)
மேற்காட்டிய வெண்பாவில் அளபெடை வரும் சீரை இயல்பாக
நூ-றோ-ஒ-நூ என நான்கசையாக அலகிட வேண்டும். (இவ்வாறு அலகிடுவது பற்றி அடுத்த
நூற்பாவில் விளக்கப்படும்) இவ்வாறு அலகிட்டால் வெண்பாவில் வரக்கூடாத நாலசைச்
சீர் வந்து சீரும் தளையும் சிதையும். ஆகவே உயிரளபெடையை வெறும் நெடில் போலக்
கொண்டு - அளபெழுந்த அறிகுறியாக வரும் குறிலைக் கணக்கிடாமல் நூ-றோ-நூ என அலகிட
வேண்டும். இவ்வாறு அலகிட்டால் தேமாங்காய்ச் சீராகும். நூறோநூ-றென்பாள் >
காய்முன் நேர் > வெண்சீர் வெண்டளை ஆகும். வெண்பா ஓசை காக்கப்படும்.
5.2.3
ஐகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம் ஒன்றரை மாத்திரை பெறும் என உறுப்பியலில்
கூறப்பட்டது.ஆயினும் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தைப் போலக்
கொள்ளப்பட்டு அதன்பின் வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக
அலகிடப் பெறும்.
எடுத்துக்காட்டு :
அன்னையையான் நோவ
தவமால் அணியிழாய்
புன்னையையான் நோவன் புலந்து
- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
(அவம்
= வீண் ; நோவன் = வருந்துவேன்
; புலந்து = சினந்து)
மேற்காட்டிய வெண்பாவில்
ஐகாரத்தை நெடில்போலவோ, 1.5 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு அன்னையையான், புன்னையையான் எனும் சீர்களை அன்-னை-யை-யான் எனவும் புன்-னை-யை-யான்
என்று பிரித்தால் அவை நாலசைச் சீர்கள் ஆகும். வெண்பாவில் நாலசைச் சீர்களுக்கு
இடமில்லை. ஆகவே ஐகாரக் குறுக்கத்தை ஒரு மாத்திரை
பெறும் குறில் போலக் கொண்டு அன்-னயை-யான், புன்-னயை-யான் என அலகிட வேண்டும்.
அச்சீர்கள் கூவிளங்காய்ச் சீர்கள் ஆகி, வெண்பா ஓசை காக்கப் பெறும்.
(ஐகாரக் குறுக்கம்
தொடர்பாகக் காரிகையில் சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
சொல்லின் முதல், இடை, கடை என மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை அயர், ஐயிரு என்பதை அயிரு
என்பனபோல அலகிட வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள் மொழி முதலில்,
அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை நெடில் போலவோ, 1.5 மாத்திரை பெறும்
குறுக்கமாகவோ கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும் என இலக்கணம்
வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு > ஐ-யிரு என அலகிட வேண்டும்.
எடுத்துக்காட்டு :
கைவேல்
களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். - (திருக்குறள் - 774)
|
(பறியா
= பறித்து ; நகும்
= சிரிப்பான்)
மேற்காட்டிய வெண்பாவில் கைவேல் என்பதில் சீரின்
முதலில் உள்ளது ஐகாரக்குறுக்கமே யாயினும் கை-வேல் எனத் தனி நேரசையாக அலகிட்டால்தான்
வெண்பா இலக்கணம் அமையும். (குறில்போலக் கொண்டு நிரையசையாக அலகிட்டால் இலக்கணம்
சிதையும்.)
5.2.4
ஒற்றளபெடை
ஒற்றுகள் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கும் என்பதை
உறுப்பியலில் அறிந்தீர்கள். ஒற்று அளபெடுக்கும்போது அதனை எவ்வாறு அலகிடுவது
எனும் இலக்கணம் இங்குக் கூறப்படுகிறது. சீர்களை அலகிடும்போது ஒற்றுகளுக்கு
அலகு மதிப்பு இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் ஒற்று அளபெடுக்கும் போது
ஒரு நேரசையாகக் கொள்ளப்படும். அதன் முன்னும் பின்னும் உள்ள எழுத்துகளுடன்
சேர்த்து நிரையசை யாக்கக் கூடாது.
எடுத்துக்காட்டு :
கண்ண் கருவிளை கார்முல்லை
கூரெயிறு
பொன்ன் பொறிசுணங்கு போழ்வாய் இலவம்பூ...
- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
மேற்கண்ட
வெண்பா அடிகளில் வரும்
ஒற்றளபெடைகளைக் க-ண்ண் > நேர்நேர் > தேமா ; பொ-ன்ன்
> நேர்நேர் > தேமா என அலகிட வேண்டும். இவ்வாறு அலகிட்டால்தான் மாமுன் நிரை
என வெண்டளை அமையும்.
எடுத்துக்காட்டு :
எஃஃ
கிலங்கிய கையராய் இன்னுயிர்
வெஃஃ குவார்க்கில்லை வீடு
- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
(எஃஃகு
= ஆயுதம் ; வெஃஃகு = விரும்புதல்)
மேற்காட்டிய வெண்பாவில் ஆய்த எழுத்து
அளபெழுந்துள்ளது. எ-ஃஃ > நேர்நேர்
> தேமா ; வெ-ஃஃ > நேர்நேர் > தேமா என அலகிட வேண்டும். இவ்வாறே இலங்ங்கு என
ஒரு சீர் வந்தால் இல-ங்ங்-கு > நிரை நேர் நேர் > புளிமாங்காய் என அலகிட வேண்டும்.
5.2.5
சீரும் தளையும் சிதையாத போது
சீரும் தளையும் சிதைய வரும்போது குற்றியலிகரமும்
குற்றியலுகரமும் அலகுபெறா எனப் பார்த்தோம். சீரும் தளையும் சிதையாத போது
அவற்றை எவ்வாறு கொள்வது? அவற்றைக் குறில் போலக் கொண்டு அலகிட வேண்டும்.
எடுத்துக்காட்டு :
வந்துநீ சேரின்
உயிர்வாழும் - வாராக்கால்
முந்தியாய் பெய்த வளைகழலும் . . . . .
-
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
(வாழும்
= வாழ்வாள் ; முந்து+யாய்
> முந்தியாய் = முன்பு தாய் ; பெய்த
= இட்ட)
மேற்காட்டிய வெண்பா அடிகளில் வந்துநீ எனும் சீரில்
உள்ள குற்றியலுகரத்தை வந்-துநீ > நேர்நிரை > கூவிளம் எனவும், முந்தியாய்
எனும் சீரில் உள்ள குற்றியலிகரத்தை முந்-தியாய் > நேர்நிரை > கூவிளம் எனவும்
குறில் போலக் கொண்டு அலகிட வேண்டும். ஏனெனில் இங்கு இவற்றைக் குறிலாகக் கொள்வதனால்
வெண்பாவுக்குரிய சீரோ தளையோ கெடவில்லை. விளமுன் நிரை என வெண்டளை சரியாக அமைகிறது.
சீரும் தளையும் சிதையாத போது உயிரளபெடையை எவ்வாறு
அலகிடுவது என்பது அடுத்த நூற்பாவில் விளக்கப்படும்.
இதுவரை விளக்கப்பட்ட இலக்கண விதிகளைக் கூறும் நூற்பாவின்
பொருள் :
செய்யுளில் சீரும் தளையும் சிதைய வரும் இடங்களில்
அச்சிதைவை நீக்குவதற்காகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், உயிரளபெடை ஆகியவை
அலகு பெறா ; ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்துப் போல அலகிடப் பெறும் ; ஒற்றளபெடை
ஓர் அலகு (நேரசை) பெறும்.
மாணவர்களே !
இந்த நூற்பாவில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் உறுப்பியலில்
சொல்லாமல் விடுபட்ட கருத்துகள் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அடுத்து
அசைக்குப் புறனடை கூறும் நூற்பாவின் கருத்துகளைக் காண்போம். |