5.5 அடி மயக்கம்

மாணவர்களே!

    செய்யுளியலின் முதல் நூற்பாவில் வெண்பா, அகவல், கலிப்பா அளவடி பெறும் ; வஞ்சிப்பா குறளடி அல்லது சிந்தடி பெறும் என அறிந்தீர்கள். நான்கு பாவுக்கும் உரிய ஓசைகளையும் அறிந்தீர்கள். அளவடியாய்ச் செப்பலோசை பெற்று வந்தால் அது வெள்ளடி ;அளவடியாய் அகவலோசை பெற்று வந்தால் அது ஆசிரிய அடி ; அளவடியாய்த் துள்ளலோசை பெற்றுவந்தால் அது கலியடி ; குறளடியாகவோ சிந்தடியாகவோ வந்து தூங்கலோசை பெற்று வந்தால் அது வஞ்சியடி. இவ்வடிகள் இவற்றுக்குரிய பாக்களில் இடம்பெறும் என்பது நாம் முன்பு உணர்ந்துள்ள கருத்து. இவற்றுக்குப் புறனடையான கருத்துகளை இங்குக் காண்போம். ஒரு பாவுக்குரிய அடி மற்றொரு பாவில் மயங்கி (கலந்து) வருமா? வெண்பாவைத் தவிர மற்ற எல்லாப் பாக்களிலும் பிற பாக்களுக்குரிய அடிகள் மயங்கி வரும்.

5.5.1 ஆசிரியப்பா

    ஆசிரியப்பாவில் இயற்றளை வெள்ளடியும் (இயற்சீர் வெண்டளைகள் அமைந்த வெள்ளடி) வஞ்சியடியும் மயங்கி வரும்.

எடுத்துக்காட்டு :

எறும்பி அளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் தேர்சென்ற ஆறே ;
அதுமற் றவலம் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்கல் ஊரே.

             - (குறுந்தொகை, 12)

(எறும்பி அளை = எறும்புப் புற்று ;    சுனைய = சுனைகளையுடைய ;      பகழி = அம்பு ; மாய்க்கும் = தீட்டும் ; கவலை = பிளவுபட்ட பாதைகள் ; நொதுமல் = அயல்தன்மை ; கழறும் = கடிந்துரைக்கும்)

    மேற்கண்ட நேரிசை ஆசிரியப் பாவின் முதலடியைக் கவனியுங்கள். எறும்பி அளையில் > இயற்சீர் வெண்டளை ;
அளையில் குறும்பல் > இயற்சீர் வெண்டளை ;
குறும்பல் சுனைய > இயற்சீர் வெண்டளை ;
     சுனைய உலைக்கல் > இயற்சீர் வெண்டளை.
     இவ்வாறு அடி முழுதும் இயற்சீர் வெண்டளையால் ஆகியிருப்பதால் இது இயற்றளை    வெள்ளடி. இவ்வடி ஆசிரியப்பாவில் மயங்கி வந்துள்ளது.

எடுத்துக்காட்டு :

    ‘முனைத்தெவ்வர் முரணவிய’ எனத் தொடங்கும் புறநானூற்று ஆசிரியப்பாவில் (புறநானூறு, 98) சில அடிகள் :

தோல்செறிப்பினின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடிசெறிப்பவும்
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி அம்பொடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்கா தொய்யென
உறுமுறை மரபின் புறம்நின் றுய்க்கும்
கூற்றத் தனையை ஆகலின் போற்றார் . . . . .

(தோல் செறிப்பில் = உறையில் இடப்படாத ; தோல் = கேடயம் ;மைந்து = வலிமை ; ஐயவி = வெண்சிறு கடுகு ; போற்றார் = பகைவர்)

    மேற்காட்டிய பாவில் முதல் ஐந்தடிகள் குறளடியாலான வஞ்சியடிகள், 1, 2, 5 ஆகிய அடிகளில் வஞ்சித்தளை அமைந்திருப்பது காண்க.

தோல்செறிப்பினின் - வேல்கண்டவர் > கனிமுன் நேர் > ஒன்றாத வஞ்சித்தளை
தோல்கழியொடு - பிடிசெறிப்பவும் > கனிமுன் நிரை > ஒன்றிய வஞ்சித்தளை

    இவ்வாறு ஆசிரியப்பாவில் வஞ்சியடிகள் மயங்கி வந்துள்ளன.

· ஆசிரியப்பாவில் வெண்சீர் வெள்ளடி, கலியடி அருகி வரல்

    நூற்பாவில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும் ‘விதப்புக் கிளவி’ எனும் முறையில் இதுவும் நூலாசிரியர் கருத்தே எனக் கொண்டு, உரையாசிரியர் வெண்சீர் வெள்ளடியும் கலியடியும் ஆசிரியப்பாவில் அருகிவரும் என்கிறார்.

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே
             - (புறநானூறு, 186)

(மலர்தலை = பரந்த இடம் ; அறிகை = அறிவது)

    மேற்காட்டிய நேரிசை ஆசிரியப்பாவின் முதலடியில் உயிரன்றே எனும்இரண்டு வெண்சீர்கள் வந்துள்ளன.நெல்லும் - உயிரன்றே > இயற்சீர் வெண்டளை ; உயிரன்றே - நீரும் > வெண்சீர் வெண்டளை. ஆகவே இவ்வடி வெண்சீர் வெள்ளடி.

எடுத்துக்காட்டு :

வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் . . . .
            (புறநானூறு, 55)

(மாற = மாறனே ! ; சினத்த = சினமுடைய ; கதழ்பரிய = விரைந்து செல்லும் ; கலிமா = குதிரை ; நெஞ்சு = ஊக்கம் ; புகழ் = போரை விரும்பும்)

    மேற்கண்ட அடிகள் ஆசிரியப் பாவில் வருவன. இப்பாவில் ஆசிரிய அடிகளுக்கிடையே ‘கடுஞ்சினத்த . . .’ எனத் தொடங்கி இரண்டு கலியடிகள் வந்துள்ளன. கடுஞ்சினத்த - கொல்களிறும் > கலித்தளை. இது போலவே மேலும் ஐந்து சீரிணைப்புகளில் கலித்தளை வந்திருப்பதைப் பாருங்கள்.

    இவ்வாறு ஆசிரியப்பாவில் வெண்சீர் வெள்ளடியும் கலியடியும் அருகி வந்துள்ளன.

5.5.2 வஞ்சியப்பா

    வஞ்சிப்பாவில் ஆசிரிய அடிகள் மயங்கி வரும். கலியடியும் வெள்ளடியும் அருகி வரும்.

எடுத்துக்காட்டு :

    பட்டினப்பாலை ஒரு நீண்ட வஞ்சிப்பாட்டு. 301 அடிகளைக் கொண்ட அவ்வஞ்சிப்பாவில்,

     நுண்ணிதின் உணர நாடி நண்ணார் - (அடி-225)

என்பது போல ஆசிரிய அடிகள் பல வந்துள்ளன. அடி முழுவதும் சீர்களிடையே ஆசிரியத்தளை வருவது காண்க.

    கொள்வதூஉ     மிகைகொளாது     கொடுப்பதூஉம் குறைகொடாது (அடி 210) என்னும் அடி முழுவதிலும் காய் முன் நிரை வந்து கலித்தளை அமைந்துள்ளது. இவ்வாறு கலியடி அருகி வந்துள்ளது.

கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை - (அடி, 23)

என்னும் அடி முழுவதிலும் மா முன் நிரை என இயற்சீர் வெண்டளை அமைந்துள்ளது. இவ்வாறு வெள்ளடியும் அருகி வந்துள்ளது.

5.5.3 கலிப்பா

    கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும்.

எடுத்துக்காட்டு :

    காமர் கடும்புனல் . . .எனத் தொடங்கும் கலித்தொகை 39ஆம் பாடல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும். அப்பாடலில்,

வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா
கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்
- (அடிகள், 12-14)

(வள்ளி = கிழங்கு ;     கீழ் = வேர் ;    வரை = மலை ; தொடா = தொடுக்க மாட்டா ; குரல் = கதிர்)

    மேற்கண்டவை போன்ற வெண்பா அடிகள் கலந்து வந்துள்ளன.

எடுத்துக்காட்டு :

    இமையவில் வாங்கிய . . . . எனத் தொடங்கும் கலிப்பாவில் (கலித்தொகை, 38)

    நீடிரு விடரகம் சிலம்பக் கூய்த்தன் (அடி, 8)

(விடர் = மலைப்பிளவு ; சிலம்ப = ஒலிக்க)

எனும் அடி முழுமையும் ஆசிரியத் தளைகள் அமைந்த ஆசிரிய அடி.

நூற்பாவின் பொருள் :

    ஆசிரியப்பாவில் இயற்சீர்களால் அமைந்த வெண்பா அடியும், வஞ்சியடியும் மயங்கி வரும் ; வெண்சீர் வெள்ளடியும் கலியடியும் அருகி வரும். வஞ்சிப்பாவில் ஆசிரிய அடிகள் மயங்கி வரும் ; கலியடியும் வெள்ளடியும் அருகி வரும். கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும்.

மாணவர்களே !

    இந்த நூற்பாவில் சொல்லப்பட்டவை, செய்யுளியலில் உணர்த்தப்பட்ட கருத்துகளுக்குப்     புறனடையானவை என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.