5.6
அடிக்கும் தொடைக்கும் புறனடை
செய்யுளியல் முதல் நூற்பாவில் ‘வெண்பா, அகவல், கலிப்பா
அளவடி ; வஞ்சி என்னும் ஒண்பா அடி குறள், சிந்து’ என்று படித்திருப்பீர்கள்.
அதற்குப் புறனடையான ஒரு கருத்தை இங்குப் படிக்கவிருக்கிறோம். மேலும் முரண்தொடை
தொடர்பான ஒரு புதிய இலக்கணத்தையும் அறிந்து கொள்ள விருக்கிறோம்.
5.6.1 அடிக்குப் புறனடை
அளவடிகளால் அமைவதற்குரிய
கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும் ஐஞ்சீர் அடிகள்
அருகி வரும்.
எடுத்துக்காட்டு :
அணிகிளர் சிறுபொறி
அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித்
துணியிரும் பனிமுந்நீர் தொட்டுழந்து மலைந்தனையே
- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
(அணி
=
அழகு ; பொறி = புள்ளி ; துத்தி
= பாம்புப் படம் ; நாகம்
= பாம்பு ; எருத்து = தலை ; மலைந்தனை
= கொன்றாய்)
மேற்காட்டிய கலிப்பா அடிகளில் முதலடி ஐஞ்சீரடியாக
வருவது காண்க.
எடுத்துக்காட்டு :
உமணர் சேர்ந்து கழிந்த
மருங்கின் அகன்தலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்கா
டின்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
-
(குறுந்தொகை, 124)
|
(உமணர்
= உப்பு வணிகர் ; அகன்தலை
= அகன்ற இடம் ; ஓமை = ஒரு வகை மரம்)
மேற்காட்டிய நேரிசை ஆசிரியப்பாவின் முதலடி ஐஞ்சீரடியாக
வந்திருப்பது காண்க.
5.6.2 முரண்தொடைக்குப் புதிய இலக்கணம்
உறுப்பியலில் முரண்தொடை
இலக்கணம் படித்திருக்கிறீர்கள். அடிதோறும் முதற்சீரில் சொல்லாலோ பொருளாலோ
முரண்படத் தொடுப்பது முரண்தொடை. அது முதல் தொடை எனப்படும். ஓரடிக்குள்ளேயே
முதற்சீரில் தொடங்கிப் பிற சீர்களினிடையே முரண் அமைவது விகற்பத் தொடை எனப்படும்
(வழித்தொடை , உறழ்ச்சித் தொடை). அவற்றை மறுபடி படித்துவிட்டுக் கீழ்க்காணும்
புதிய முரண்தொடை அமைப்புகளைப் பாருங்கள். இவை ஐந்து ஆகும்.
அடிதோறும் இறுதிச் சீரில் சொல்லோ பொருளோ முரண்படத்
தொடுப்பது. எடுத்துக்காட்டு :
கயன்மலைப்
பன்ன கண்ணிணை கரிதே
தடமுலைத் திவளும் தனிவடம் வெளிதே
- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
(கயல்
= மீன் ; திவளும்
= அசையும்)
மேற்காட்டிய பா அடிகளின் இறுச் சீர்களில் கரிதே
x வெளிதே எனக் கடை முரண் அமைந்து வந்துள்ளது.
அடிகளில் இறுதி இரு சீர்களில் சொல்லோ பொருளோ முரண்படத்
தொடுப்பது.
எடுத்துக்காட்டு :
மீனாய்ந் தருந்திய
கருங்கால் வெண்குருகு
தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம் |
(குருகு
= கொக்கு ; ஞாழல்
= ஒரு வகை மரம் ; குழூஉம்
= ஒன்று சேரும்)
மேற்காட்டிய பா அடிகளில் இறுதி இரண்டு சீர்களில்
கருமை x வெண்மை, விரிதல் x ஒன்றிணைதல் எனும் முரண்பொருள் அமைந்து வந்திருப்பது
காண்க.
இரண்டாம்
சீரிலும் நான்காம் சீரிலும் முரண் அமைவது.
எடுத்துக்காட்டு :
சாரல் ஓங்கிய தடந்தாள்
தாழை
கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து
- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்) |
(தடந்தாள்
= பெரிய தண்டு)
மேற்காட்டிய அடிகளில் ஓங்குதல் x தாழ்தல், குவிதல்
x விரிதல் எனும் பொருள்பட முரண் அமைந்திருப்பது காண்க. (ஓங்கிய x தாழை என்பது
முரணா? ஆம். அது பொருள் முரண் அன்று ; சொல் முரண். தாழை என்பது தாழஞ்செடியைக்
குறித்தாலும் சொல் அளவில் ‘தாழ்தல்’ எனும் பொருளும் தருகிறது. ‘கரிசல் காட்டில்
வெள்ளாடு என்பது முரணா? ஆம். வெள்ளாடு வெண்மையான ஆடு எனப் பொருள்படாது. ஆயினும்
சொல் அளவில் உள்ள "வெண்மை, கரிசல் என்பதற்கு முரண். அதுபோலத் தான் இங்கு
ஓங்கிய x தாழை எனும் சொல் முரண் அமைந்துள்ளது.)
இறுதி மூன்று சீர்களில் முரண் அமைவது.
எடுத்துக்காட்டு :
காவியங்
கருங்கண் செவ்வாய்ப் பைந்தொடி
- (யாப்பருங்கலக் காரிகை
உரைமேற்கோள்) |
(காவி
= குவளை மலர்)
மேற்காட்டிய அடியில் இறுதி மூன்று சீர்களில் கருமை
x செம்மை x பசுமை என முரண் அமைந்திருப்பது காண்க. (இந்த எடுத்துக் காட்டிலும்
பைந்தொடி என்பது சொல் முரணே. பை = பசுமை எனும் பொருள் தரும் சொல்லே. ஆனால்
இங்குப் புதிய, அழகிய எனும் பொருளைத் தருகிறது. எனவே சொல் மட்டும் முரண்படுகிறது.)
நடு
இரு சீர்களில் முரண் அமைவது.
எடுத்துக்காட்டு :
கோதையின் தாழ்ந்த ஓங்குவெள்
ளருவி
- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்) |
(கோதை
= மாலை)
மேற்காட்டிய அடியில் நடு இரு சீர்கள் தாழ்ந்த x
ஓங்கு என முரண்பட்டு வருவது காண்க.
-
பிற தொடை வகைகளிலும் புதிய விகற்பங்கள்
மேற்காட்டிய ஐந்தும்
முரண்தொடைக்குச் சொல்லப்பட்ட புதிய விகற்பங்கள். இவற்றை மோனை, இயைபு, எதுகை,
அளபெடை எனும் தொடை வகைகளுக்கும் சேர்த்துக் கொள்ளலாம் என உரையாசிரியர் கூறியுள்ளார்.
மோனைத் தொடையின் புதிய
விகற்பங்கள் கடைமோனை, கடையிணை மோனை, பின் மோனை, கடைக்கூழை மோனை, இடைப்புணர்
மோனை.
இயைபுத் தொடை : கடையியைபு, கடையிணையியைபு, பின்னியைபு,
கடைக்கூழை யிழைபு, இடைப்புணரியைபு.
எதுகைத் தொடை : கடையெதுகை, கடையிணை எதுகை, பின்னெதுகை,
கடைக்கூழை எதுகை, இடைப்புணரெதுகை.
அளபெடைத் தொடை : கடையளபெடை, கடையிணை யளபெடை, பின்னளபெடை,
கடைக்கூழையளபெடை, இடைப்புணரளபெடை.
இனி, இவ்விலக்கணங்களை உணர்த்தும் நூற்பாவின் பொருள்
:
கலிப்பாவிலும் ஆசிரியப் பாவிலும் அருகி ஐஞ்சீரடியும்
வரலாம் என்பர் தமிழ் அறிஞர். வேறொரு பிரிவினர் முரண்தொடைக்குக் கடை, கடையிணை,
பின், கடைக்கூழை, இடைப்புணர் என வேறு ஐந்து விகற்பங்களும் கூறுவர்.
மாணவர்களே !
முதலில் சொல்லப்பட்டுள்ள கருத்து புறனடை, பின் சொல்லப்பட்ட
கருத்து முன்பு சொல்லப்படாத புதிய கருத்து என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
|