6.1
எதுகைக்கும் மோனைக்கும் புறனடை
யாப்பு
மாணவர்களே! நீங்கள் சங்கப்பாடல், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களைப்
படித்திருப்பீர்கள். நீங்கள் காரிகை உறுப்பியலில் படித்த மோனை, இயைபு,
எதுகை, முரண், அளபெடை எனும் ஐந்து வகைத் தொடைகளுள் அந்த இலக்கியங்களில்
மிகுதியாகவும், தவறாமலும் இடம் பெறும் தொடைகள் மோனையும் எதுகையும்தாம்
என்பதைக் கண்டிருக்கிறீர்களா?'இல்லை' என்றால் ஒரு மறுபார்வை பார்த்துக்
கண்டுணருங்கள். எதுகையும் மோனையுமே பல நூற்றாண்டுகளாக (புதுக்கவிதை தோன்றும்
வரை) தமிழ்க் கவிதையின் ஓசை இனிமைக்கு முழுப்பொறுப்பு ஏற்றிருந்தவை. ஆகவே
அவை தொடர்பான இலக்கணக் கருத்துகளே மிகுதி. உறுப்பியலில் சொல்லப்பட்டதற்கு
அப்பால் அவற்றுக்குப் புறனடையாக அமையும் பல கருத்துகளும், புதிய கருத்துகளும்
ஒழிபியலில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காண்போம்.
எதுகை எனப்படுவது யாது? அடிதோறும் முதற்சீர் முதல்
எழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை. ஓரடிக்குள்ளும்
சீர்களில் எதுகை வரும். இவை உறுப்பியலில் நீங்கள்கற்றவை.இரண்டாம் எழுத்து
ஒன்றி வராமல் (கற்க - நிற்க என்பது போல் அல்லாமல்) வேறு சில வகைகளில் ஓசை
ஒப்புமை உடையவற்றையும் எதுகை என ஏற்கலாம் என்கிறது யாப்பிலக்கணம். அவை
வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை என மூவகைப்படும். முதல் எழுத்து
ஒன்றி வருவதாகிய மோனையும் மேற்குறித்த அடிப்படையில் வருக்க மோனை, நெடில்
மோனை, இன மோனை என மூவகைப்படும்.
6.1.1 வருக்க எதுகை
வருக்கம்
(வர்க்கம்) என்பது ஒரு மெய்யெழுத்தோடு பன்னிரண்டு உயிரெழுத்தும் சேர்ந்து
வரும் பன்னிரண்டு உயிர்மெய்யெழுத்தைக் குறிக்கும்.(க்+அ=க.) இவ்வாறே கா,கி,கீ,
கு, கூ, கெ,கே, கை, கொ,கோ, கௌ எனும் உயிர்மெய்கள் பிறக்கும். இந்தப் பன்னிரண்டும்
ஒரு வருக்கமாகும்.18 மெய்க்கும் இவ்வாறு தனித்தனியே வருக்கம் உண்டு என்பதை
அறிவீர்கள். அதன் வருக்க எழுத்து எதுகையோடு வந்தால் அது வருக்க
எதுகை எனப்படும்.
(எ.டு)
அறத்தா
றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
(திருக்குறள். 37) |
(அறத்தாறு
=அறத்தின் பயன்;சிவிகை = பல்லக்கு;பொறுத்தான்
= சுமப்பவன்; ஊர்ந்தான் = ஏறிச்செல்பவன்)
மேற்கண்ட குறட்பாவில் முதலடி முதற்சீர் இரண்டாமெழுத்து 'ற'; அடுத்த அடி
முதற்சீர் இரண்டாமெழுத்து றகரத்தின் வருக்கமான 'று'. இவ்வாறு வரும் எதுகையே
வருக்க எதுகை.
6.1.2
நெடில் எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றாவிடினும் அந்த எழுத்தின்
மேல் நெடில் ஏறி ஒன்றிவந்தால் அது நெடில் எதுகை எனப்படும்.
(எ.டு
ஆவா
வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்;
கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்;
மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்;
ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் - ஒருசாரார். |
(ஆவா
= ஆ!ஆ!; கூவிளி = கூவி அழைத்தல்;ஏகீர்
= செல்லுக; நாய்கீர் = தலைவர்களே!
என்செய்தும் = என்ன செய்வோம்)
மேற்காட்டிய பாடலில் அடிதோறும் முதற்சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி
வரவில்லை; ஆயினும் அவ்வெழுத்துகளின் மேல் ஆ, ஊ, ஆ, ஈ என நெடில்கள் ஏறி
ஒருவகை ஓசை இனிமை தருகின்றன. ஆகவே இது நெடில் எதுகை ஆகும்.
6.1.3 இன எதுகை
இரண்டாம்
எழுத்து ஒன்றாதாயினும் அதன் இன எழுத்து எதுகையாய் வருவது இன
எதுகை எனப்படும். இனம் என்பது வல்லினம், மெல்லினம், இடையினம்
எனும் மெய்யெழுத்து வகைகளைக் குறிக்கும் என்பதை அறிவீர்கள். முதலடி முதற்சீர்
இரண்டாம் எழுத்து ஒரு வல்லினமெய்யாக வந்து அடுத்த அடி முதற்சீர் இரண்டாம்
எழுத்து வேறொரு வல்லின மெய்யாக வந்தால் அது வல்லின எதுகை;மெல்லின மெய்
வந்து வேறொரு மெல்லினமெய் எதுகையாக வந்தால் அது மெல்லின எதுகை; இடையினமெய்
வந்து வேறொரு இடையினமெய் எதுகையாக வந்தால் அது இடையின எதுகை.
(எ.டு)
தக்கார்
தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
(திருக்குறள். 114) |
(எச்சம்
= பிள்ளைகள்)
மேற்குறித்த குறட்பாவில் 'க்' எனும் வல்லின மெய்க்கு 'ச்' எனும் மற்றொரு
வல்லினமெய் எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது வல்லின எதுகை.
(எ.டு)
அன்பீனும்
ஆர்வ முடைமை; அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
(திருக்குறள். 74) |
(நண்பு
= நட்பு)
மேற்காட்டிய குறட்பாவில் 'ன்' எனும் மெல்லின மெய்க்கு 'ண்' எனும் வேறொரு
மெல்லினமெய் எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது மெல்லின எதுகை.
(எ.டு
எல்லா
விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
(திருக்குறள். 299) |
மேற்காட்டிய குறட்பாவில்
'ல்' என்னும் இடையின மெய்க்கு 'ய்' எனும் மற்றொரு இடையினமெய் எதுகையாக
வந்துள்ளது. ஆகவே இது இடையின எதுகை.
6.1.4 வருக்க மோனை.
அடிதோறும்
முதற்சீர் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
என அறிவீர்கள். முதலடி முதற்சீரில் ஓர் உயிர்மெய் எழுத்து வர,அடுத்த அடி
முதற்சீர் முதல்எழுத்து அவ்வுயிர்மெய் எழுத்தின் வருக்க எழுத்தாக வந்தால்
அது வருக்க மோனை அதாவது முதற்சீர்
ஒன்றாமல் வருக்க எழுத்து வருவது.
(எ.டு
..................
புலாக்களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே
பொருநர்க் கோக்கிய வேலன் ஒருநிலைப்
பகைப்புலம் படர்தலும் உரியன்
...............
(புறநானூறு, 69) |
(புலாக்களம்
= பிணங்கள் கிடக்கும் போர்க்களம்; கலாஅ
= கலாம், போர்;பிறங்குநிலை = விளங்குகின்ற;
பொருநர்; போரிடுவோர்; ஓக்கிய
= ஏந்திய; படர்தல் = செல்லுதல்)
மேற்குறித்த புறநானூற்றுப் பாடல் அடிகளில் 'பு' எனும் உயிர்மெய்க்கு 'பி',
'பொ', 'ப' எனும் அதன் வருக்க எழுத்துகள் மோனையாக வந்திருப்பதால் இது வருக்க
மோனை ஆகும்.
6.1.5 நெடில் மோனை
அடிதோறும்
முதல் எழுத்து ஒன்றாவிடினும், அவை நெடில்களாக வந்தால் அது நெடில்மோனை எனப்படும்.
ஆர்கலி
உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற்
சிறந்தன் றொழுக்க முடைமை (முதுமொழிக்காஞ்சி - 1)
|
(ஆர்கலி
= பெருங்கடல்; சிறந்தன்று = சிறந்தது)
மேற்காட்டிய பாடலில் முதற்சீர் முதல் எழுத்துகள் 'ஆ' 'ஓ'என நெடில்களாக
வந்தமையால் இது நெடில்மோனை.
6.1.6 இன மோனை
இன
எதுகை போலவே இனமோனையும் மூவகைப்படும். அடிதோறும் முதற்சீர்களில் முதல்
எழுத்து ஒன்றாவிடினும், ஒரு வல்லின உயிர்மெய்க்கு வேறொரு வல்லின உயிர்மெய்
மோனையாக வருவது வல்லின மோனை;மெல்லின உயிர்மெய்க்கு மற்றொரு மெல்லினஉயிர்மெய்
மோனையாக வருவது மெல்லின மோனை. ஒர் இடையின உயிர்மெய்க்கு வேறோர் இடையின
உயிர்மெய் மோனையாக வருவது இடையின மோனை.
(எ.டு)
தெய்வம்
தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
(திருக்குறள்
- 55) |
(கொழுநன்
= கணவன்)
மேற்கண்ட குறட்பாவில் 'தெ' எனும் வல்லின உயிர்மெய்க்குப் 'பெ' எனும் வேறொரு
வல்லின உயிர்மெய் மோனையாக வந்தமையால் இது வல்லின
மோனை.
(எ.டு)
மோப்பக்
குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (திருக்குறள்.
90) |
(விருந்து
= விருந்தினர்)
மேற்காட்டிய குறட்பாவில் 'மோ' எனும் மெல்லின உயிர்மெய்க்கு 'நோ' எனும்
வேறொரு மெல்லின உயிர்மெய் மோனையாக வந்துள்ளது. ஆகவே இது மெல்லின
மோனை.
(எ.டு)
யாம்மெய்யாக்
கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற (திருக்குறள்.
300) |
மேற்காட்டிய குறட்பாவில்
'யா' எனும் இடையின உயிர்மெய்க்கு 'வா' எனும் மற்றோர் இடையின உயிர்மெய்
மோனையாக வந்துள்ளது. ஆகவே இது இடையின மோனை. |