6.2
தலை, இடை, கடை எதுகை மோனைகள்
உறுப்பியலில்
நீங்கள் அறிந்து கொண்ட எதுகை மோனைகளிலிருந்து மேலே கண்ட வருக்க, நெடில்,
இன எதுகை மோனைகள் வேறுபட்டிருப்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். சிறப்பில்லாத
இவற்றையும் எதுகை மோனைகளாக ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் ஒழிபியல்
உணர்த்துகிறது. இவ்வுண்மையைத் தெளிவாக்கும் வகையில் காரிகை உரையாசிரியர்
எதுகை மோனைகளை முறையே தலையாகு எதுகை, இடையாகு
எதுகை, கடையாகு எதுகை எனவும் தலையாகுமோனை, இடையாகு மோனை, கடையாகு
மோனை எனவும் தரவரிசைப்படுத்துகிறார். அவற்றை எடுத்துக் காட்டுகளுடன் காண்போம்.
6.2.1
தலையாகு எதுகை
இரண்டாம்
எழுத்துமட்டுமின்றிச் சீர்முழுவதும் ஒன்றிவருவது தலையாகு
எதுகை. அதாவது சிறப்பான எதுகை எனப்படும்.
(எ.டு)
எண்ணென்ப
ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு (திருக்குறள்.
392) |
மேற்காட்டிய குறட்பாவில்
இரண்டாமெழுத்தாகிய 'ண்' என்பது மட்டுமின்றிச் சீரின் மற்ற எழுத்துகளும்
ஒன்றிவந்துள்ளன.ஆகவே இது தலையாகு எதுகை.கற்க- நிற்க;கண்ணுடையர் -புண்ணுடையர்;
நல்லார்கண் - கல்லார்கண்; தலைப்பட்டார் - வலைப்பட்டார்; பொய்யாமை - செய்யாமை
என்பனபோலப் பல இடங்களில் திருக்குறளில்தலையாகு எதுகை வந்துள்ளதனை நீங்கள்
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
6.2.2
இடையாகு எதுகை
எதுகை
இலக்கணத்தில் சொல்லப்பட்டபடி,இரண்டாம்எழுத்து ஒன்றிச் சீரின் பிற எழுத்துகள்
ஒன்றாது வருவது இடையாகு எதுகை.
(எ.டு
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
முதற்றே உலகு (திருக்குறள்
. 1) |
மேற்காட்டிய குறட்பாவில்
இரண்டாம் எழுத்து மட்டுமே ஒன்றி வந்திருப்பதால் இது இடையாகு எதுகை.
6.2.3
கடையாகு எதுகை
இரண்டாம்
எழுத்து ஒன்றாமல், நாம் முன்பு கண்ட வருக்க, நெடில், இன எழுத்து எதுகையாக
வருவன கடையாகு எதுகை ஆகும்.அதாவது வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை
ஆகியன சிறப்பில்லாத, கடையாகு எதுகைகளாகும்.
(எ.டு)
தக்கார்
தகவிலர் என்ப தவரவர் எ
ச்சத்தாற் காணப் படும் (திருக்குறள்
- 114) |
மேற்காட்டிய பாவில்
க்-ச் என வல்லின எழுத்துகளே ஒன்றுக்கொன்று எதுகையாக வருகின்றன. இது வல்லின
எதுகை; ஆகவே கடையாகு எதுகை ஆகும்.
6.2.4
தலையாகு மோனை
அடிதோறும்
முதற்சீர் முதல் எழுத்து ஒன்றி வருவது மட்டுமன்றி, ஓரடிக்குள்ளும் சீர்களில்
முதல் எழுத்து ஒன்றி வருவது சிறப்பானதாகிய தலையாகு
மோனை.
(எ.டு
பற்றுக
பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்.350) |
(பற்றற்றான்
= இறைவன்)
மேற்காட்டிய குறட்பாவில் இரண்டடிகளிலும் முதற்சீர் முதல் எழுத்து ஒன்றி
வந்தது மட்டுமன்றி முதலடியிலும் இரண்டாம் அடியிலும் மற்ற சீர்களிலும் அந்த
முதல் எழுத்து ஒன்றி வந்திருப்பது காண்க. ஆகவே இது தலையாகு மோனை.
6.2.5
இடையாகு மோனை
அடிதோறும் முதற்சீர் முதல் எழுத்து மட்டும் ஒன்றி
வருவது இடையாகு மோனை.
(எ.டு)
மாவும்
புள்ளும் வதிவயிற் படர
மாநீர் விரிந்த பூவும் கூம்ப
மாலை தொடுத்த கோதையும் கமழ
மாலை வந்த வாடை
மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
(மா
= விலங்குகள்; புள் = பறவைகள்; வதி
= இருப்பிடம்; படர = செல்ல; கோதை
= மாலை ; புறத்திறுத்தன்று = பக்கமாகத்
தங்கியது)
மேற்கண்ட ஆசிரியப்பா அடிகள் அனைத்திலும் முதற்சீர் முதலெழுத்து ஒன்றி ஏனைய
சீர்களில் ஒன்றாதிருப்பது காண்க. ஆகவே இது இடையாகு
மோனை.
6.2.6
கடையாகு மோனை
ஒழிபியலில் (இப்பாடத்தில்) நாம் கண்ட வருக்க மோனை,
நெடில்மோனை, இனமோனை ஆகியவை சிறப்பில்லாத,கடையாகு
மோனை ஆகும்.
(எ.டு)
ஆர்கலி
உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை
(முதுமொழிக்காஞ்சி . 1) |
மேற்காட்டிய பாடலில் ஆ-ஓ
என நெடில் மோனை வந்துள்ளது. இது கடையாகு மோனையாகும்.
மாணவர்களே! கடையாகு எதுகை, கடையாகு மோனை எனும்
சிறப்பில்லாத தொடைகளுக்குத் திருவள்ளுவர் போன்ற பெரும்புலவர்களின் பாக்கள்
எடுத்துக்காட்டுகளாக அமைந்திருப்பதைப் பார்த்தீர்கள்.
மிகப்பெரும்பாலான தமிழ்ப் பாக்களில் தலையாகு எதுகை மோனைகளைப் பார்க்க முடியாது.
இதிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கண்டிப்பான இலக்கண வரையறைகளைவிடத்
தன் கருத்து வெளிப்பாட்டு ஒழுங்கையே புலவன் பெரிதும் பின்பற்றுகிறான்.
பின்னர் அவனுடைய இலக்கண மீறல்கள் புறனடையாக இலக்கண ஆசிரியர்களால் ஏற்கப்படுகின்றன.
கடையாகு எதுகை மோனை என (இலக்கண உரையாசிரியரால்) குறிப்பிடப் படுவனவற்றைப்
பயன்படுத்துவது புலவனுக்கு எவ்வகையிலும் தாழ்வாகாது. |