6.6 நூற்பொருள் தொகுப்பு

     நூல் முழுவதிலும் சொல்லப்பட்ட கருத்துகளைச் சுருக்கித் தொகுத்து நினைவூட்டுகிறார் நூலாசிரியர்.

6.6.1 குற்றங்கள்

     செய்யுள் படைக்கும் புலவர் ஆறுவகைக் குற்றங்களும் தோன்றாமல் படைக்க வேண்டும் என உரையாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அவை:

1.
எழுத்துக் குற்றம்
2.
சொற்குற்றம்
3.
பொருட்குற்றம்
4.
யாப்புக் குற்றம்
5.
அலங்காரக் குற்றம்
6.
ஆநந்தக் குற்றம்

என்பனவாம்.

     இவற்றுள் முதல் ஐந்தும் எழுத்து, சொல்,பொருள், யாப்பு, அணி நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. ஆநந்தக் குற்றம் என்பது மட்டும் இங்கு விளக்கப்படுகிறது.ஆநந்தக் குற்றங்களுள் இரண்டை மட்டும் இங்குக் காண்போம்.

  • எழுத்தாநந்தம்

     ஒரு பாடலில் 'திரையவோஓ’ எனத் தலைவனின் இயற்பெயர் குறிப்பிடப்படுகிறது. இயற்பெயரில் அளபெடை வருவது எழுத்தாநந்தம் எனும் ஆநந்தக் குற்றம்.

  • சொல்லாநந்தம்

     ஒரு பாடலில் 'விசயன் எரிந்திலங்குவேலின் மீது மதியம் எழும்' என வருகிறது. தலைவன் பெயரையொட்டி 'எரிந்தது' எனும் சொல் வருவது சொல்லாநந்தம்.

     மாணவர்களே! இங்குச் சொல்லப்பட்ட ஆநந்தக்குற்றம் போன்றவை வடமொழி இலக்கணச் செல்வாக்கினால் தமிழில் நுழைந்தவை. வெண்பாவை அந்தணர் பா     எனவும் வஞ்சிப்பாவைச் சூத்திரர்பா எனவும் பாக்களுக்கெல்லாம் சாதி வகுத்த இலக்கணங்கள் உண்டு. இவை தமிழ் மரபுக்கு முரணானவை. யாப்பருங்கலக் காரிகை     உரையாசிரியர் சொல்லியிருப்பதால் ஆநந்தக் குற்றங்கள் இங்குச் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன.