1.4 அணி இலக்கண வளர்ச்சி

    தொல்காப்பியத்தில் இடம்பெறும் உவமவியல் கருத்துகளே, பிற்கால அணி இலக்கண நூல்களுக்கு மூலமாக அமைந்தன. வடமொழியில் காணலாகும் அணி இலக்கணச் சிந்தனைகளின் தாக்கம், பிற்கால அணி இலக்கண நூல்களில் பெருமளவில் உள்ளது.

1.4.1 தொல்காப்பிய உவமவியல் செய்திகள்

    தொல்காப்பிய உவமவியலில் உவமையின் தோற்றம், நிலைக்களன், உவம உருபுகள், உள்ளுறை உவமை, மரபு, புறனடை ஆகியன பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

உவமையின் தோற்றம்

    வினை(செயல்), பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் இருபொருள்களுக்கிடையில் உவமை அமையும். இவற்றுள் ஒருகூறு மட்டும் அல்லாமல், இரண்டு, மூன்று கூறுகளும் பொருந்தி வரலாம். உவமையாகக் காட்டப்படுவது பொருளை விட உயர்ந்ததாகவே அமையும்.

1.4.2 தொல்காப்பியமும் தண்டியலங்காரமும்

    பிற்கால அணி இலக்கண நூல்களுள் சிறந்து விளங்குவது தண்டியலங்காரம்     ஆகும். இந்நூல்     தொல்காப்பிய உவமவியல் கருத்துகளையும் வடமொழித் தாக்கத்தையும் கொண்டு அமைந்துள்ளது.

1.4.3 அணிகளும் வடமொழித்தாக்கமும்

    இறையனார் களவியலுரை என்னும் நூலில், பாண்டிய மன்னன் ஒருவன் எழுத்தும் சொல்லும் யாப்பும் அறிந்த புலவர்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொருள் இலக்கணம் அறிந்தார் கிடைக்கப் பெறவில்லையே என ஏங்கிச் சிவபெருமானிடம் முறையிட, அவர் இறையனாராகத் தோன்றி அகப்பொருள் இலக்கணத்தை அறுபது நூற்பாக்களில் இயற்றியருளினார் என்னும் செய்தி காணப்படுகிறது. இப் பகுதியில் அணி இலக்கணம் கிடைக்கப் பெற்றது என்றோ, கிடைக்கப் பெறவில்லை என்றோ எவ்விதக் குறிப்பும் இல்லை. எனவே அணி இலக்கணம் என்ற ஒன்று தனித்து அக்காலத்தில் இல்லை என அறிஞர்கள் கூறுவர்.

அணிகளும் வடமொழிப் பெயர்களும்

    தமிழில் காணப்படும் அணி இலக்கண நூல்களில் (தண்டியலங்காரம், மாறனலங்காரம்) ‘அலங்காரம்’ என்ற சொல்லே உள்ளது.

    அணிகளின் பெயர்களும் தமிழ்மொழியின் தன்மைக்கு ஏற்ப வடிவ மாற்றங்களைப் பெற்றுள்ளன.

    இவற்றால், தொல்காப்பிய உவமவியல் சிந்தனைகளை அடியொற்றியும், வடமொழி நூல்களைத் தழுவியும் அணி இலக்கண நூல்கள் தமிழில் எழுந்துள்ளமையை அறிய முடிகிறது.

1.4.4 பிற்கால அணிகளின் வளர்ச்சி

    அணி இலக்கண வளர்ச்சியைப் பொருள் அணி வளர்ச்சி, சொல்லணி வளர்ச்சி என இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம்.

    தொல்காப்பியர் உவமவியலில் உவமை அணியை மட்டுமே எடுத்துரைத்துள்ளார். அதற்கு உரைவரைந்த பேராசிரியர் உவமையின் வகைகள் சிலவற்றைக் காட்டியுள்ளார். தொல்காப்பிய உவமவியலில் பொருள் அணி பற்றிய கருத்தே இடம் பெற்றுள்ளது; சொல்லணி இடம் பெறவில்லை. ஆனால் தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள அந்தாதி, மடக்கு முதலான பகுதிகள் சொல்லணிக்கான விதைகளாக உள்ளன.

பொருள் அணி வளர்ச்சி

நூல்பெயர்
பொருள்அணிகளின் எண்ணிக்கை
1.
யாப்பருங்கல விருத்தி உரை
27
2.
சேந்தன் திவாகரம்
28
3.
வீரசோழியம்
35
4.
தண்டியலங்காரம்
35
5.
மாறனலங்காரம்
64
6.
திருத்தணி விசாகப்பெருமாள் ஐயர் அணி இலக்கணம்
100
7.
குவலயானந்தம்
120

சொல்லணி வளர்ச்சி

நூல்பெயர்
சொல்லணிகளின் எண்ணிக்கை
1.
திருஞான சம்பந்தர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ள அணிகள்
10
2.
வீரசோழியம்
2
3.
திவாகரம்
21
4.
தண்டியலங்காரம்
2
5.
யாப்பருங்கலம்
22
6.
யாப்பருங்கல உரை
33
7.மாறனலங்காரம்
2
8.
மாறனலங்கார உரை
2

இவ்வாறு காலந்தோறும் வளர்ச்சி காணப்படுகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
ஐவகை இலக்கண நூல்களுள் இரண்டன் பெயரைக் கூறுக.விடை
2.
அணி இலக்கணத்தின் பயன்கள் யாவை?விடை
3.
தண்டியலங்காரம் கூறும் பொருள் அணிகள் எத்தனை? சொல்லணிகள் எத்தனை? விடை