2.5 தொகைநிலைச் செய்யுள்
பல பாடல்கள்
ஒருங்கு தொகுக்கப்பட்டு அமைவது
தொகைநிலைச் செய்யுள் ஆகும்.
எட்டுத்தொகை என
அமைந்த சங்க இலக்கியத் தொகுப்புப்
போன்றன இவ்வகையுள்
அடங்கும்.
தொகுதல் என்பதன்
பொருள் சேர்தல், கூடுதல்
என்பனவாகும். ஒரு செய்யுள் சொல் அளவிலோ
பொருள்
அளவிலோ அடுத்த செய்யுளை எதிர்பார்க்காமல் தனித்து
அமைய, அவ்வாறான செய்யுள்கள் ஒற்றுமை நயம் கருதி ஒரு
சேரத் தொகுக்கப்படுதல் தொகைநிலைச் செய்யுள் எனப்படும்.
2.5.1 தொகைநிலைச் செய்யுள் வகை
ஒருவரால்
பாடப்பட்டன, பலரால் பாடப்பட்டன, பொருளால்
தொகுக்கப்பட்டன, இடத்தால் தொகுக்கப்பட்டன, காலத்தால்
தொகுக்கப்பட்டன, தொழிலால் தொகுக்கப்பட்டன,
பாட்டு
வகையால் தொகுக்கப்பட்டன, அளவால் தொகுக்கப்பட்டன என
எட்டு வகைகளில் தொகைநிலைச் செய்யுள்கள் அமைகின்றன.
எட்டு வகைகளுக்குமான சான்றுகள்
பின்வருமாறு :
ஒருவரால்
பாடப்பட்டன
ஒருவரால் பாடப்பட்ட பல்வேறு பாடல்களின் தொகுப்பாக
அமைவது.
சான்று : திருக்குறள்
திருவள்ளுவர் என்னும்
புலவர் ஒருவரால் பாடப்பட்ட
1330 குறட்பாக்களின் தொகுப்பு இந்நூல்.
பழமொழி நானூறு,
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி,
நன்னெறி, நீதிநெறிவிளக்கம்
போன்ற நூல்கள் அனைத்தும் ஒருவரால் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்டவையாகும்.
பலரால் பாடப்பட்டன
புலவர் பலரால் பாடப்பட்ட
பாடல்கள் ஒரு நூலாகத்
தொகுக்கப்படுவது.
சான்று : நெடுந்தொகை (அகநானூறு)
கபிலர், பரணர்,
ஒளவையார் முதலான புலவர் பலரின்
பாடல் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, கலித்தொகை
போன்ற தொகைநூல்கள்
அனைத்தும் இவ்வகையில் அடங்கு
வனவாகும்.
பொருளால்
தொகுக்கப்பட்டன
பாடுபொருளின் அடிப்படையில் பல பாடல்கள் ஒருநூலாகத்
தொகுக்கப்படுதல்.
சான்று : புறநானூறு
வீரம், கொடை,
புகழ் போன்றவற்றை உள்ளடக்கியது
புறப்பொருளாகும். புறப்பொருள் அமைந்த
பாடல்களின்
தொகுப்பாகப் புறநானூறு அமைகின்றது.
அகநானூறு, நற்றிணை
போன்ற நூல்களும் அகப்பொருள்
பற்றிய பாடல்களைக் கொண்டிருப்பதால்
இவ்வகையில்
அடங்கும்.
இடத்தால் தொகுக்கப்பட்டன
ஓர் இடத்தில் நிகழப் பெற்ற
நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்
பாடல்களின் தொகுப்பாக அமைவன.
சான்று : களவழி நாற்பது
போர்க் களத்தில்
நிகழ்ந்த போர்ச் செயல்களை விரித்துரைக்கும் செய்யுள்களின்
தொகுப்பாக இந்நூல்
அமைகின்றது.
ஏர்எழுபது போன்ற
நூல்கள் இவ்வகைக்குத் தக்க
சான்றுகள் ஆகும்.
காலத்தால்
தொகுக்கப்பட்டன
ஒரு காலத்து
நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்
பாடல்களின் தொகுப்பு.
சான்று : கார்நாற்பது
கார்காலம் ஒன்றினையே
மையப்படுத்திப் பாடும்
பாடல்களின் தொகுப்பாக அமைதலின் இவ்வகையில், இந்நூல் அமைந்தது.
தொழிலால் தொகுக்கப்பட்டன
ஒரு தொழில்
உணர்த்தும் பாடல்கள் பல ஒருங்கு
தொகுக்கப்படுதல்.
சான்று : ஊஞ்சல்
ஊஞ்சலாடுதல் ஆகிய
தொழில் குறித்த பாடல்களை
ஒருங்கு கொண்டது இது.
அம்மானை, தெள்ளேணம்
போன்றனவும் இவ்வகையில்
அடங்கும்.
பாட்டு வகையால் தொகுக்கப்பட்டன
பாட்டின் வகையைக்
கருத்திற்கொண்டு, ஒரே வகையான
பாட்டால் தொகுக்கப்படுதல்.
சான்று : கலித்தொகை
கலிப்பா என்னும் பாட்டில்(பா
வகையில்) அமைந்த
பாடல்களின் தொகுப்பு நூலாகக் கலித்தொகை உள்ளது.
பரிபாடல் போன்றன
இவ்வகையில் அடங்கும்.
அளவால் தொகுக்கப்பட்டன
பாடலின்
அடிவரையறையைக் கொண்டும், எண்ணிக்கையைக்
கொண்டும் பாடல்கள் பல தொகுக்கப்படுவது.
சான்று : குறுந்தொகை
குறுகிய அடிகளையுடைய
பாடல்களின் தொகுப்பு
நூலாதலின் இது குறுந்தொகை எனப்பட்டது. 4 முதல் 8 அடி
வரையிலான பாடல்கள் கொண்டது இந்நூல்.
இவ்வாறு தொகை
நிலைச் செய்யுள் எட்டு
வகைகளில் அமைவதைத் தண்டியலங்காரம்
பின்வரும்
நூற்பாவால் குறிப்பிடுகிறது.
தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருள்இடம் காலம் தொழில்என நான்கினும்
பாட்டினும் அளவினும் கூட்டிய வாகும் |
(தோன்ற = தெளிவாக அறியுமாறு
பகர்ந்தவும் = கூறியனவும்)
2.5.2 தொகைநிலைச் செய்யுள் நூல்கள்
தொகைநிலைச் செய்யுள்
வகைகள் குறித்து விளக்கம்
கண்டபோதே அவற்றிற்கான சான்று நூல்களையும் அறிந்து
கொண்டோம். அவ்வாறு சுட்டப்பெற்ற
நூல்களில் ஒரே நூலே
பல தொகைநிலைச் செய்யுள்
வகைக்கும் சான்றாக
அமைவதையும் காண்கிறோம்.
ஒரே நூல் பல
தொகைநிலைச் செய்யுள் வகைக்குச் சான்றாவது பின்வருமாறு :
குறுந்தொகை
அகப்பொருள், பாடல் அளவு, பலர் உரைத்தது.
கலித்தொகை
அகப்பொருள், பாட்டு வகை, பலர் உரைத்தது.
திருக்குறள்
நீதிநூல், பாட்டு வகை, ஒருவர்
உரைத்தது.
இவ்வாறு ஒரே நூலே
பலவகைகளுக்கும் சான்றாக
அமைவதை உணர்ந்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
|