2.6 தொடர்நிலைச் செய்யுள்
ஒரு செய்யுளும்
அடுத்த செய்யுளும் சொல்லாலோ,
பொருளாலோ ஒன்றற்கு ஒன்று தொடர்புடையதாக அமையும்
செய்யுள் வகை, தொடர்நிலைச் செய்யுள் எனப்படும்.
முன்நின்ற செய்யுளோடு
எவ்விதப் பொருள்
எதிர்பார்ப்பும் நெருக்கமும் இன்றிப்
பல செய்யுள்கள்
அடுத்தடுத்து அமையத் தொகுக்கப்படும் தொகைநிலைச்
செய்யுளிலிருந்து வேறுபட்டு, ஒன்றை
ஒன்று அவாவி
(எதிர்பார்த்து) நிற்குமாறு தொடர்ந்து அமையும்
வகையாதலின் இது தொடர்நிலைச்
செய்யுள் எனப்
பெயர் பெற்றது.
சொற்றொடர் முடிவு
ஒரு செய்யுளுக்குள்ளேயே
முடிந்துவிடும் முத்தகச்
செய்யுள்களும், சொற்றொடர் முடிவு
ஒன்றுக்கு மேற்பட்ட செய்யுள்களில்
தொடர்ந்து சென்று நின்று
பொருள் முடிவு பெறும் குளகச் செய்யுள்களும் இத்தொடர்நிலைச்
செய்யுள் வகை நூல்களின் பகுதியாக அமைவது இயல்பு.
தொடர்நிலைச் செய்யுள்
இருவகைகளை உடையது.
அவை பொருள் தொடர்நிலைச் செய்யுள்,
சொல் தொடர்நிலைச்
செய்யுள் ஆகியனவாகும்.
பொருளினும் சொல்லினும் இருவகை தொடர்நிலை |
2.6.1 பொருள் தொடர்நிலைச் செய்யுள்
முன்செய்யுளோடு பின்செய்யுள்
பொருளினால் தொடர்ந்து
வரப்பெறுவது பொருள் தொடர்நிலைச்
செய்யுள் ஆகும். ஏதேனும் ஒரு பொருளை மையப்படுத்தி அது தொடர்பான
கருத்துகளை அடுத்தடுத்துத் தொடர்ந்து பல செய்யுட்களைக்
கொண்டு எடுத்துரைத்து, இறுதியாக
ஒரு செய்யுளில்
அப்பொருள் முற்றுப் பெறுமாறு அமையும் இயல்புடையது இது.
ஒரு வரலாற்றைத்
தொடர்ச்சியாக எடுத்துரைக்கும்
நூல் இவ்வகைச் செய்யுள் அமைப்பைக் கொண்டு விளங்கும்.
அவ்வரலாறு நிகழ்ந்ததாகவும் இருக்கலாம்.
புனைந்துரையாகவும்
இருக்கலாம்.
பெருங்காப்பியம், காப்பியம்
ஆகிய இரண்டும் பொருள் தொடர்நிலைச் செய்யுளின்
வகைகள் ஆகும். (இவை
குறித்து அடுத்த பாடத்தில் காணலாம்).
பெருங்காப் பியமே காப்பியம் என்றாங்கு
இரண்டாய் இயலும் பொருள்தொடர் நிலையே |
பொருள் தொடர்நிலைச் செய்யுள் நூல்கள்
(1) கம்பராமாயணம், வில்லிபாரதம்
போன்ற இதிகாசக்
கதைகளை விவரிக்கும் இலக்கியங்கள்.
(2) சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி
போன்ற வாழ்வியல் நிகழ்ச்சிகளை உள்ளிட்ட புனைந்துரைக்கப்
பெற்ற காவியங்கள்.
(3) திருவிளையாடற் புராணம்,
காஞ்சிப் புராணம்
முதலான புராண வரலாறுகளை
விவரிக்கும் தலபுராணங்கள்.
(4) காந்திமகான் கதை,
கவிராஜன் கதை போன்ற
தலைசிறந்த தலைவர்களின் வாழ்வியல்களைச் சுவைபட
உரைக்கும் இலக்கியங்கள்.
இவ்வாறு பொருள்தொடர்நிலைச் செய்யுள்கள் பலவகைகளில்
அமைகின்றன.
பொருள் தொடர்நிலைச் செய்யுள் - சான்று
கம்பராமாயணம், அயோத்தியா
காண்டம், கங்கைகாண்
படலத்தில் இடம்பெறும் தொடர்நிலைச் செய்யுளின் ஒரு
பகுதியைச் சான்றாகக் காண்போம்.
ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரேஆள
வேடு கொடுத்தது பார்எனும் இப்புகழ் மேவீரோ
நாடு கொடுத்தஎன் நாயக னுக்கிவர் நாம்ஆளும்
காடு கொடுக்கில ராகி எடுத்தது காணீரோ |
(ஆடு = அசைகின்ற
அறத்தவர் = இராமன்
வேடு = வேடர்கூட்டம்
எடுத்தது = படையெடுத்தது)
என்பன சொல்லி இரும்பன மேனியர் ஏனோர்முன்
வன்பணை வில்லினன் மல்உயர் தோளினன் வாள்வீரற்கு
அன்பனும் நின்றனன் நின்றது கண்டுஅரி ஏறுஅன்ன
முன்பனின் வந்து மொழிந்தனன் மூரிய தேர்வல்லான் |
(ஏறு = ஆண்சிங்கம்
மூரிய = வலிய
தேர்வல்லான் = சுமந்திரன்
மல்உயர் = மற்போரில் சிறந்த
வன்பணை = வலிய, பெரிய)
கங்கைஇரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குலத் தனிநாதற்கு உயிர்த்துணைவன் உயர்தோளான்
வெங்கரியின் ஏறுஅனையான் வில்பிடித்த வேலையினான்
கொங்குஅலரும் நறுந்தண்தார்க் குகன்என்னும் குறிஉடையான் |
(நாவாய் = படகு
குலத்தனிநாதன்= இராமன்
வெங்கரியின் ஏறு = ஆண்யானை
கொங்குஅலர் = தேன்சொரிகின்ற
தார் = மாலை
குறி = பெயர்)
இவற்றுள் முதற்பாடல்
குகனின் வீரவுரையைக்
குறிப்பதாகவும், அடுத்துள்ள இரண்டு பாடல்கள்
சுமந்திரன்,
பரதனுக்குக் குகனைப் பற்றி
அறிவிப்பதாகவும் அமைந்துள்ளன.
‘அசைகின்ற கொடிகளையுடைய
தேருடன் வரும் (பரதனின்) படைகளைத் தோற்கடித்து, தருமமே வடிவான
இராமன் மீண்டும் அரசாட்சி பெறுமாறு
உதவி புரிந்தது
வேட்டுவர் கூட்டம் என உலகம்
நம் தொண்டினைப்
புகழுமாறு போரிடுங்கள். நாட்டை ஆளுமாறு
விட்டுக்
கொடுத்த இராமனுக்குக் காட்டை ஆளவும் விடாமல், பின்
தொடர்ந்து அழிக்க வரும் படையின்
கொடுமையை
என்னென்பது’ என்கிறான் குகன்.
‘இவ்வாறு பல வீரவுரைகளை
எடுத்துரைத்து, இரும்பு
போன்ற வலிய உடலுடைய வேட்டுவ வீரர்முன்,
வலிய
பெரிய வில்லேந்தியவனும், மற்போரில்
வல்ல தோள்களை
உடையவனும் ஆகிய குகன் நின்றான். அவன் நின்ற
காட்சியைக் கண்ட ஆண்சிங்கம்
போன்ற பரதனின் முன்னால்
நின்று வலிய தேரினை
இயக்கவல்ல சுமந்திரன் குகனைக் குறித்துக் கூறலுற்றான்.’
‘கங்கையாற்றின் இரண்டு
கரைகளுக்கும் உரிமை
உடையவன்; எண்ணற்ற படகுகளை உடையவன்
; உங்கள்
ரகுவம்சத்திற்கு ஒப்பற்ற தலைவனாகத் திகழும்
இராமனுக்கு
உயிர் நண்பனாகத் திகழ்பவன்; உயர்ந்த தோளை
உடையவன்; ஆண்யானை போன்றவன்; வில்லேந்தியவன்;
தேன் சொரியும் மணம்மிக்க மாலையை உடையவன்;
குகன்
என்னும் பெயருடையவன்’.
இவ்வாறு கதையானது,
அடுத்து வரும் செய்யுள்களில்,
தொடர்ந்துவரக் காணலாம்.
2.6.2 சொல் தொடர்நிலைச் செய்யுள்
முன்செய்யுளோடு பின்செய்யுள்
சொல்லினால் தொடர்ந்து
வரப்பெறுவது சொல் தொடர்நிலைச் செய்யுள் எனப்படும்.
அந்தாதியாகப் பாடப்படும்
நூல்கள் இவ்வகையில் அமையும்.
செய்யுள் அந்தாதி சொல்தொடர் நிலையே |
அந்தாதி - விளக்கம்
ஒரு செய்யுளின்
இறுதியில் அமையும் எழுத்தோ,
அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாட்டின் தொடக்கமாக
அமைவது அந்தாதி எனப்படும்.
நூலில் தொடர்ந்து
வரும் செய்யுள்களில் அந்தாதித்
தொடை அமைந்து, நூலின் இறுதிப் பாடலின் இறுதி,
நூலின்
முதல் பாடலின் தொடக்கத்துடன் அந்தாதி
அமைப்பில்
தொடர்புடையதாக அமையும்.
இவ்வாறு அமையும்
முறையை, ‘மண்டலித்து முடிதல்’ என்று கூறுவர்.
சொல்தொடர்நிலைச் செய்யுள் - நூல்கள்
சொல்தொடர்நிலைச் செய்யுளுக்கு
அந்தாதி, சதகம்,
கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற
சிற்றிலக்கியங்கள்
சான்றாகும்.
சொல்தொடர்நிலைச் செய்யுள் - சான்று
காரைக்காலம்மையார் இயற்றிய
அற்புதத் திருவந்தாதி
யிலிருந்து சில சான்றுகள் காண்போம்.
பிறந்து மொழிபயின்ற பின்எல்லாம்
காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறம்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே !
எஞ்ஞான்று தீர்ப்பது இடர் (அற்புதத்
திருவந்தாதி:1)
|
(மொழி = பேச்சு
மை = கருமை
ஞான்ற = தங்கிய
கண்டம் = கழுத்து
எஞ்ஞான்று = எப்பொழுது
இடர் = பிறவித்துன்பம்)
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடர்உருவில்
என்புஅறாக் கோலத்து எரிஆடும் எம்மானார்க்கு
அன்புஅறாது என்நெஞ்சு அவர்க்கு (அற்புதத்
திருவந்தாதி:2) |
(களையார் = நீக்கார்
படரும் = பின்பற்றும்
சுடர்= நெருப்பு
என்புஅறா = எலும்புமாலை நீங்காத
கோலம் = வடிவம்
எரிஆடல் = நெருப்புஏந்தி ஆடுதல்
எம்மான் = தலைவன்)
அடுத்த பாட்டு
அவர்க்கே
எழுபிறப்பும்........ என்று தொடங்கும்.
இவ்வாறு அந்தாதிப் பாடல்கள் தொடர்கின்றன.
இப்பாடல்களின் திரண்ட கருத்தாவது :
‘பிறந்து பேசத்
தொடங்கிய நாளிலிருந்து நின்
திருவடியிலேயே அன்பு கொண்டு நினைத்திருக்கின்றேன்.
கரிய
கழுத்தையுடையவனே! தேவர் தலைவனாகிய சிவபெருமானே!
என் பிறவித்துயரை நீ தீர்ப்பது எப்போது?’
‘என் துயரத்தை நீக்காவிட்டாலும்,
என் மீது மனமிரங்கா
விட்டாலும், தகுதியான
வழி இது என்று எடுத்துரைக்காவிட்டாலும்,
நெருப்பு வடிவமாகி எலும்பை மாலையாக அணிந்து, தீயை ஏந்தி
ஆடும் சிவபெருமானாகிய என் தலைவன் மீது கொண்ட அன்பு
என் நெஞ்சை விட்டு நீங்காது’.
அற்புதத் திருவந்தாதியின்
முதல் பாடல் பிறந்து என்று
தொடங்குகிறது. அந்நூலின் இறுதிப் பாடல் பேராத
காதல்
பிறந்து என்று முடிகிறது.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்கள்
அகரவரிசைப்படி அமைந்த பாடல்கள் தொடர்ந்து வரப்பெறும்
அமைப்புடையன.
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல் |
... ..... ..... .......
........... (ஒளவையார் : ஆத்திசூடி) |
என வருவன அவை,
சொல் தொடர்நிலை, பொருள் தொடர்நிலை
ஆகிய இரு கூறுகளும் ஒருங்கே அமைவது சொற்பொருள் தொடர்நிலைச் செய்யுள் எனப்படும்.
என்று உரையாசிரியர்கள், மேலும் ஒருவகையைச் சுட்டுகின்றனர்.
திருவாசகம்,
திருமந்திரம் போன்றன. இவ்வகைக்குத்
தக்க சான்று என உரைப்பர்.
இவ்வாறு தொடர்நிலைச்
செய்யுள் வகை அமைகின்றது.
|