3.2 காப்பிய வகைகள்

    பொருள் தொடர்நிலைச்     செய்யுளாகிய காப்பியம், பெருங்காப்பியம், காப்பியம் என இரு வகைப்படும்.

பெருங்காப் பியமே காப்பியம் என்றாங்கு
இரண்டாய் இயலும் பொருள்தொடர் நிலையே
(தண்டியலங்காரம்-7)

    அடைமொழி இன்றிக் காப்பியம் என்று    சுட்டப் பெறுவதைச் சிறுகாப்பியம் என அடைமொழி கொடுத்துச் சுட்டுவதும் உண்டு.

3.2.1 பெருங்காப்பியம்

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளையும் தன்கண் கொண்டு விளங்குவது பெருங்காப்பியம் ஆகும்.

    தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் பெருங்காப்பியம் எனப் படுகின்றன. இவற்றை ஐம்பெருங்காப்பியங்கள் எனக் குறிப்பிடுவர்.

3.2.2 சிறுகாப்பியம்

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்கள் நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வரும் காப்பியம் சிறுகாப்பியம் எனப்படும். சிறுகாப்பியம், காப்பியம் எனக் குறிக்கப் பெறுகிறது.

அறமுதல் நான்கினும் குறைபாடு உடையது
காப்பியம் என்று கருதப் படுமே
(தண்டியலங்காரம்-10)

    தமிழில், யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும்.