3.3 காப்பிய வடிவம்

    காப்பியத்தின் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும், காப்பிய உட்பிரிவுகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பன பற்றிய செய்திகளும், காப்பியத்தில் இடம்பெறும் சுவைகள், காப்பியத்தின் பயன் எனப்படும் மையக் கருத்து ஆகியன பற்றிய செய்திகளும் காப்பிய வடிவம் என்னும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.

3.3.1 காப்பிய முகப்பு

    காப்பியம் தொடங்கப் பெறுவதற்கு முன், வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் ஆகியன இடம்பெறுதல் வேண்டும்.

வாழ்த்து

    நூல் இனிது நிறைவுறும் பொருட்டு இறைவனை வாழ்த்துதலும் வணங்குதலும் மேற்கொள்ளப் பெறும்.

சான்று :

உலகெ லாம்உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
(பெரியபுராணம்-1)

(ஓதல் = பாடுதல்
நீர்
= கங்கை
வேணி = சடை
அலகு = அளவு)

    உலகம் அனைத்தும் உணர்ந்து ஓதுவதற்கு அரிய புகழுடையவன்; பிறை    நிலவும் கங்கையும் தங்கிய சடையையுடையவன்; அளவற்ற சோதிவடிவானவன்; தில்லைச் சிற்றம்பலத்தில் நடனமிடுபவன்;    அவனது சிலம்பணிந்த அடிகளை வாழ்த்தி வணங்குவேன் என்பது இப்பாடலின் பொருள்.(நூல் இனிது நிறைவுறுதற் பொருட்டு என்பது நோக்கம்)

வணக்கம்

    இறைவனின் பெருமைகளை எடுத்துரைத்துப் போற்றி வணங்குவதும் நூல் முகப்பில் அமையும்.

சான்று :

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகுஇ லாவிளை யாட்டுஉடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே
(கம்பராமாயணம்-பாயிரம்-1)

(உளவாக்கல் = உண்டாக்குதல்
நிலைபெறுத்தல் = காத்தல்
நீக்கல் = அழித்தல்
அலகு = எல்லை, அளவு
சரண் = அடைக்கலம்)

    உலகனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் அளவில்லாத விளையாடல் புரியும் இறைவனே நமக்குத் தலைவர் ; அவர் திருவடியே நமக்கு அடைக்கலம் ஆகும் என்பது இதன் பொருள்.

வருபொருள் உரைத்தல்

    காப்பியக் கதைக் கருவாக எடுத்துக் கொண்ட பொருளை முன்மொழிதலாக அமைவது இது.

சான்று :

அளவுஇ லாத பெருமைய ராகிய
அளவுஇ லாஅடி யார்புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்புஅரிது ஆயினும்
அளவுஇல் ஆசை துரப்ப அறைகுவேன்
(பெரியபுராணம்-5)

(உரைப்பு = கூறுதல்
துரப்ப = செலுத்த
அறைதல் = கூறுதல்)

    எல்லையற்ற பெருமையுடைய அடியவர்களின் புகழினை முழுமையாகக் கூற இயலாது ஆயினும் எல்லையற்ற ஆசை செலுத்தலால் கூறத் தொடங்கினேன் என்பது பொருள்.

    இவை மூன்றும் காப்பிய முகப்பாக அமையும்.

3.3.2 காப்பிய உட்பிரிவு

    காப்பியத்திற்கு உரிய நீண்ட கதையைப் பல கூறுகளாகப் பகுத்துக் கொண்டு அவற்றிற்குப் பெயரிடுதல் வழக்கம். அவ்வாறான உட்பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் ஆகியவற்றுள் ஒன்றைப் பெயராக அமைப்பர்.

    சருக்கம் என்பது வில்லிபாரதத்தில் அமைகின்றது. (எ.கா) சூதுபோர்ச் சருக்கம்.

    இலம்பகம் என்பது சீவகசிந்தாமணியில் அமைந்துள்ளது. (எ.கா) கேமசரியார் இலம்பகம்.

    பரிச்சேதம் என்னும் பாகுபாடு உடைய இலக்கியம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

    காதை என்பது சிலப்பதிகாரத்திலும் புராணம் என்பது பெரியபுராணத்திலும் உட்பிரிவுகளின் பெயர்களாக அமைவதும் இங்கு எண்ணத்தக்கன. (எ.கா) கடலாடு காதை, மெய்ப்பொருள் நாயனார் புராணம்.

3.3.3 காப்பியச் சுவை

    நகை, அழுகை, இளிவரல், மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை (மகிழ்ச்சி) ஆகிய எண்வகைச் சுவையும் காப்பியங்களில் கலந்து வருமாறு இயற்றப் பெறும். இவை எண் வகை மெய்ப்பாடுகள் எனப்பெறும். சாந்தம் (நடுநிலை) என்னும் சுவையுடன் கூட்டி நவரசம் (ஒன்பான்சுவை) என்பர் வடமொழியாளர். வெகுளிச்சுவைக்கு ஒரு சான்று :

'எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆக’எனக்
கவுந்தி இட்ட தவந்தரு சாபம்
(சிலம்பு-நாடுகாண்காதை - 231-233)

(எள்ளுநர் = கேலிசெய்தல்
பூங்கோதை
= கண்ணகி
முதுநரி = கிழ நரி)

    ஏளனம் செய்வோராய்க் கண்ணகியைப் பற்றி நகைத்த இக்கீழ்மக்கள் முள் அமைந்த காட்டில் கிழ நரிகள் ஆவார்களாகுக எனக் கவுந்தி சபித்தார் என்பது பொருள்.

    இவ்வாறு பிற சுவைகளும் அமையும்.

3.3.4 காப்பியப் பயன்

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பொருள்களே காப்பியங்களின் கதைகளிடையே மையப்படுத்தப் படுவன ஆகும்.

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே
(நன்னூல்-பாயிரம்-10)

என்பார் பவணந்திமுனிவர்.

    நூலெங்கும் மணிகளைக் கோக்கும் நூல்போல ஊடுருவி நிற்கும் அந்நாற்பொருளும், ஒரு சில பாடல்களில் வெளிப்பட நிற்பதும் உண்டு.

அறம்

பெரியவர் தம்மைக் காய்ந்தான்
    பிறங்கல்கல் லியகோல் ஒப்பான் ;
புரிவன புரியப் பட்டுப்
    புலம்புவன் ஒத்தார்க் காய்ந்தான் ;
எரிநரகு அதனில் வீழ்வன்
    இழிந்தவர்க் காய்ந்தான் - என்றால்
ஒருவர்தம் இடத்தும் சீற்றம்
    உறாமையே நன்று மாதோ
(பிரபுலிங்கலீலை-சித்தராமையர்கதி-61)

(காய்தல் = சினத்தல்
உறாமை
= அடையாமை
மாதோ = அசைநிலை)

    தன்னினும் பெரியோரிடம் சினம் கொண்டவன், மலையைப் பெயர்த்த இரும்புக்கோல் (கடப்பாரை) போன்று வருந்துவான்; தன்னையொத்தவனிடம் சினந்தவன் உரிய தீங்கு பிறரால் பெற்று வருந்துவான் ; தன்னிலும் வலிமை குறைந்தவர்களைச் சினந்தவன் எரியும் நரகில் வீழ்ந்து வருந்துவான். எனவே யாரிடமும் சினம் கொள்ளக் கூடாது. இவ்வாறு அறவுரை கூறப்பெறுகிறது.

பொருள்

ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும்
சுற்றம் சூழ்ந்துபெ ருக்கலும் சூதுஅரோ
கொற்றம் கொள்குறிக் கொற்றவற்கு என்பவே
(சீவகசிந்தாமணி-விமலை-33)

(ஒற்றரின் = ஒற்றரால்
ஆய்தல் = அறிதல்
சூது = உபாயம்
அரோ = அசைநிலை)

    ஒற்றரை ஒற்றரால் அறிதலும், கற்றோரைப் போற்றலும், சுற்றத்தாரை ஆதரித்தலும் அரசர்க்கு நல்ல உபாயங்களாகும். இது அரசாட்சி தொடர்பான பொருட்பால் சிந்தனையாகும்.

இன்பம்

வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னாப்
பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகி னானே
(சீவக-கேமசரியார்-89)

(பாணி = பாட்டு
பொதிர்ப்ப = வீங்க
என்னா = என்று வியந்து கூறி)

    பால், அமுது, கரும்பு, தேன், கனி ஆகியன போன்ற இனிமையுடைய வாயால் யாழும் குழலும் கிளியும் போன்ற சொற்களைப் பேசும் கேமசரியை முதல் இழக்காத வணிகர் திறன்போல் என்னை இழக்காதவள் நீ என்று பாராட்டி அவளின் கொங்கை பொங்க இறுகத் தழுவிக் கொண்டான் சீவகன் என்பது பொருள். இது இன்பம் பற்றியது.

வீடு

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுஉன் அடியின்கீழ் இருக்க என்றார்
(பெரியபுராணம்-காரைக்கால்-60)

(இறவாத = குறையாத
அறவா
= அறத்தின் வடிவான சிவபெருமானே)

    காரைக்காலம்மையார்     சிவபெருமானிடம் குறையாத அன்பையும், மீண்டும் பிறவாத நிலையில் வீடுபேற்றையும், மீண்டும் பிறந்தால் இறைவனை மறவாத நிலையையும், நடனக் காட்சியை அருகிலிருந்து காணும் வரத்தையும் வேண்டுகின்றார். இது வீடுபேறு பற்றியது.

    இவ்வாறு நாற் பொருள்களும் காப்பியங்களில் இடம் பெறுகின்றன.