5.4 வைதருப்பம் - வலி

    செய்யுளில் தொகைச் சொல் மிகுதியாக வருமாறு தொடுப்பது வலி எனப்படும். வலி - வன்மையுடையது.

வலிஎனப் படுவது தொகைமிக வருதல்
(தண்டியலங்காரம் : 24)

    தொகைச்சொல்     என்பது     அறுவகைத் தொகைச் சொற்களையும் குறிக்கும்.

    வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியவை அவை என்று முன்பு படித்தது நினைவிருக்கலாம்.

    இவ்வாறான தொகைச் சொற்கள் பல அமையுமாறு வருவது வலி என்னும் குணப்பாங்காகிறது.

    இனி, வலி என்பதற்கான செய்யுள் சான்று பின் வருமாறு :

கால்நிமிர்த்தால் கண்பரிவ வல்லியோ புல்லாதார்
மான்அனையார் மங்கலநாண் அல்லவோ - தான
மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற் கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு

(தானம் = கொடை
கண்
= இரும்புச் சங்கிலியின் பூட்டுவாய்
பரிவ = அறுபடுவன
வல்லி = சங்கிலி
புல்லாதார் = பகைவர்
மங்கல நாண்
= தாலி
மழை = மேகம்
தட = பெரிய
வார் = நீண்ட
மானம் = பெருமை
புழை = துளை
நால்வாய் = தொங்கும் வாய்
பொருப்பு = மலை (இங்கு, யானை)

    வரையாது வழங்கும் மேகம் போன்ற பெரிய கையும், வீரக்கழல் அணிந்த காலும், பெருமைமிக்க வேலும் உடைய கிள்ளியாகிய சோழ மன்னனின் நீண்ட துதிக்கையும் தொங்கும் வாயும் உடைய யானை சினந்தால் அதைக் கட்டியிருக்கும் கால் சங்கிலியின் பூட்டு வாய் மட்டுமோ அறுபடும்? பகைவர்தம் மனைவியரின் கழுத்திலிருக்கும் தாலியும் அல்லவோ அறுபடும். அதாவது, பகையரசர்கள் இறந்து படுவது உறுதி என்பது பாடலின் பொருளாகும்.

கால் நிமிர்த்தல் - காலை நிமிர்த்தல் (ஐ)
கண்பரிவ - கண்ணைப் பரிவன (ஐ)
கழற்கால் - கழலையுடைய கால் (ஐ உடைய)
வேற்கிள்ளி - வேலையுடைய கிள்ளி (ஐ உடைய)
புழைத் தடக்கை - புழையை உடைய தடக்கை (ஐ, உடைய)
தான மழை - தானத்தை உடைய மழை (ஐ, உடைய)
மானவேல் - மானத்தையுடைய வேல் (ஐ, உடைய)
புல்லாதார் மான்அனையார் - புல்லாரது மான்அனையார் (அது)
மான் அனையார் மங்கல நாண் - மான் அனையாரது மங்கல நாண் (அது)

    இவை வேற்றுமைத் தொகை.

புழைத்தடக்கை நால்வாய்ப் - பொருப்பு புழைத்தடக்கையையும் நால்வாயையும் உடைய பொருப்பு (உம்)

    இது உம்மைத் தொகை.

    இவ்வாறு தொகைச் சொற்கள் மிக வருதல் வலி ஆகும்.

சான்று : 2

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
(குறள் : 259)

(அவி = ஆகுதிப்பொருள்
வேட்டல்
= வேள்வி செய்தல்
செகுத்தல் = கொல்லல்)

    நெய் முதலிய ஆகுதிப் பொருள்களை     இட்டு ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்வதைவிட ஓர் உயிரைக் கொல்லாமையும் உண்ணாமையுமா செயல் நல்லனவாகும்,

அவிசொரிந்து - அவியைச் சொரிந்து (ஐ)
வேட்டலின் நன்று - வேட்டலினும் நன்று (உயர்வு சிறப்பும்மை தொக்கது)
உயிர்செகுத்து - உயிரைச் செகுத்து (ஐ)

    இவ்வாறு, பல செய்யுள்களிலும் பதவுரை காண முற்படும் போது உருபு விரித்தலின் அருமையையும் அழகையும் நாம் அறியலாம்.

    வலி என்னும் குணப்பாங்கில் ஓரளவு தொகைச் சொற்கள் இடம் பெறுதலை வைதருப்பநெறி சுட்டுகின்றது. மிக அதிகமாகத் தொகைச் சொற்கள் இடம் பெற வேண்டும் எனக் கௌட நெறி குறிப்பிடுகின்றது.