5.5 வைதருப்பம் - சமாதி

    சமாதி என்னும் சொல்லுக்கு ஒரு பொருளைப் பிறிதொரு பொருளுடன் ஐக்கியப்படுத்திக் காட்டல் என்பது பொருளாகும். சமாதி என்னும் குணப்பாங்கு, ‘உரிய பொருளின் வினையை ஒப்புடைய பொருளின்மேல் ஏற்றி உரைப்பது’ என்னும் பொருள் படுவதாகும்.

உரிய பொருளின்றி ஒப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்
(தண்டியலங்காரம் : 25)

(புணர்ப்பது = பொருத்துவது)

    வினைக்கு மட்டுமன்றிப் பெயருக்கும்     இவ்வாறு உரைக்கப்படும் என்பது உரையாசிரியர்கள் கருத்து.

சான்று : 1

அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்
பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பரிதி
        (பெரும்பாண் : 1-2)

(அகல் = அகன்ற
இருவிசும்பு = பெரிய வானம்
பாய்
= பரவிய
பருகி = குடித்து
கான்று = உமிழ்ந்து
பரிதி
= சூரியன்)

    அகன்ற வானில் தோன்றிப் பரவிய இருளை உட்கொண்டு பருகி    இல்லாமையாக்கி,     பேரொளியான     பகலைத் தோற்றுவிப்பவன் சூரியன் என்பது பொருள்.

    சூரியன் இருளை அகற்றும்; ஒளியை வீசும். இவையே அதன்    செயலுக்குரிய வினைச் சொற்களாகும். ஆனால், இருளைப் பருகும்; ஒளியைக் காலும் (உமிழும்) என உயர்திணையும், அஃறிணையுமாகிய உயிருள்ள பொருள்களின் வினைச் சொற்கள் சூரியனின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன.

சான்று : 2

விழித்த குவளைக் கழிப்போது வாக்கிய
கள்ளுண்டு களித்த வண்டினம்

(கழி = உப்பங்கழி
போது = மலர்கள்
வாக்கிய = சொரிந்த)

    ‘விழித்துத் (மலர்ந்து) திகழும் குவளை மலரானது சொரிந்த கள்ளினை உண்டு களிப்படைந்தன வண்டினங்கள்’ என்பது பொருளாகிறது.

    கண்ணுக்குரிய விழித்தல், மலரின் மலர்தலாகிய வினைக்கு இணையாகக் கூறப்பட்டது. வாக்குதல் (சொரிதல்), குவளையின் தேன் பொங்கும் செயலுக்குக் கூறப்பெற்றது. களித்தல், வண்டின் செயலுக்கு உரைக்கப்பட்டது.

சான்று : 3

     கன்னி எயில்; குமரி ஞாழல்

    கன்னி என்பது புதியது ; முதலாவது என்னும் பொருளது. எயில் - மதில் சுவர். மறுவற்ற மதில் சுவர் கன்னி எயில் எனப்பட்டது. உயர்திணையில் பெண்பாலுள் மணமாகாதவரைக் குறிக்கும் (புதியவர்) ‘கன்னி’ என்பது, அஃறிணைக்குரியதாக வழங்கப்பெற்றது.

    அழியாத இளமை பொருந்திய ஞாழல் மரமானது ‘குமரி ஞாழல்’ எனப்பட்டது.

    உயர்திணையில் மணமாகாப் பெண்ணைக் குறிக்கும் ‘குமரி’ என்னும் சொல், ஞாழலின் இளமைக்கு ஏற்றிக் கூறப்பட்டது.

    இவ்வகையில் இது, சமாதி என்னும் குணப்பாங்கிற்குச் சான்று ஆயிற்று.

    கௌட நெறியாரும் ‘சமாதி’ குறித்த குணப்பாங்கின் இக் கருத்தை முற்றும் உடன்படுவர்.