6.6 காந்தம், வலி, சமாதி

    ஒன்றைப் புகழ்ந்துரைக்கும்போது, உலக இயல்பைக் கடவாதவாறு உரைப்பது, காந்தம் எனப்படும்.

    வேற்றுமைத் தொகை முதலிய தொகைகள் மிகுதியாக வருவது வலி ஆகும்.

    சமாதி என்பது வினையை இடம்மாற்றி வேறு பொருளுடன் இணைத்துச் சொல்வதாம்.

காந்தம்

உலகஒழுக்கு இறவாது உயர்புகழ் காந்தம் (23)

என்பது நூற்பா. இது வைதருப்ப நெறி.

    ஆனால், கௌடநெறி உலக இயல்பைக் கடந்த நிலையிலும் அமையும் கற்பனைகளைக் கொண்டதாகும்.

சான்று :

    சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருக்கூவப்புராணத்தில் வரும் செய்யுள் ஒன்று :

சேட்டிள வாளை தாக்கத்
    தெங்கிள நீர்மார்த் தாண்டன்
பூட்டுவெம் பரித்தேர் காறும்
    விசையினிற் போதத் தெண்ணீர்
வேட்டுஅவண் இருந்த பாகன்
    விரைவினில் பற்றி உண்ணும்
ஊட்டும்ஊழ் எங்குற் றாலும்
    அனைவர்க்கும் ஊட்டி டாதோ
(திருக்கூவ-திருத்தலச்சருக்கம் : 15)

(சேடு = இளமை
மார்த்தாண்டன் = சூரியன்
ஊழ் = விதி
வேட்டு
= விரும்பி
பாகன் = அருணன்
விசை
= விரைவு)

    ‘ஒரு வாளைமீன் மிக வேகமாகத் துள்ள, அது தென்னையின் இளநீரைத் தாக்க, அவ்விளநீர் மேலே சூரியனின் தேர்வரை செல்ல, அங்குத் தாகமுற்றிருந்த     தேரோட்டி அருணன் அதனைப் பற்றிப் பருகினான், விதி எங்கிருப்பினும் வந்து உரிய பயன் தரும் அன்றோ!’ என்பது பாடற்கருத்து.

    உலகியல் கடந்த கற்பனையில் இயற்கை வருணனையாகிய புகழ்ச்சி அமைதலின்,     இது காந்தம் என்னும் குணப்பாங்கின்பாற்படும்.

வலி

    வேற்றுமைத் தொகை முதலான தொகைச் சொற்கள் மிகுதியாக வருமாறு அமைவது வலி என்னும் குணப்பாங்கு ஆகும்.

வலியெனப் படுவது தொகைமிக வருதல் (24)

என்பது நூற்பா.

    தொகைச் சொற்கள் ஓரளவு இடம் பெறுதல் வைதருப்பநெறி. தொகைச் சொற்கள் மிக அதிக அளவு இடம்பெறுவது கௌட நெறியாகும்.

சான்று :

செங்கலசக் கொங்கைச் செறிகுறங்கிற் சீறடிப்பேர்ப்
பொங்கரவ அல்குற் பொருகயற்கட் - செங்கனி வாய்க்
காருருவக் கூந்தற் கதிர்வளைக்கைக் காரிகைத்தாம்
ஓருருவென் உள்ளத்தே உண்டு

(குறங்கு = தொடை)

    ‘சிவந்த கலசம் போன்ற கொங்கையும், பருத்த தொடையும், சிறிய அடியும், பொங்கும் பாம்பனைய அல்குலும், மோதுகின்ற மீன்போன்ற கண்ணும், சிவந்த கனி போன்ற வாயும், மேகம் போன்ற கூந்தலும், ஒளி பொருந்திய வளையல் அணிந்த கையும் கொண்ட பெண்ணுருவம்     ஒன்று என் உள்ளத்தே நிலைபெற்றுள்ளது’ என்பது பாடற்கருத்து.

1) செங்கலசம், சீறடி, செங்கனி, காருருவம் ஆகியன பண்புத்தொகைகள்.
2) கலசக்கொங்கை, கயற்கண், கனிவாய் ஆகியன உவமைத் தொகைகள்.
3) செறிகுறங்கு, பொங்கரவம்,     பொருகயல் ஆகியன வினைத்தொகைகள்.
4) கொங்கை - குறங்கு - அடி - அல்குல் - கண் - வாய்- கூந்தல் - கை - காரிகை என வருவதில் எண்ணும்மை உள்ளது.
5) வளைக்கை என்பது வேற்றுமைத்தொகை.

    இவ்வாறு தொகைகள் பல மிகுதியாக இடம்பெறுதலின் இது வலி என்பதற்குச் சான்று ஆயிற்று.

சமாதி

    ஒரு பொருளின் வினையை அதற்கு ஒப்பாகிய பொருளின் மேல் ஏற்றிக் கூறுவது சமாதி என்னும் குணப்பாங்கு ஆகும்.

உரியபொருள் இன்றி ஒப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும் (25)

என்பது நூற்பா.

    வைதருப்பநெறியும் கௌடநெறியும் சமாதி என்னும் குணப்பாங்கில் முற்றிலும் ஒன்றுபட்டுள்ளன.

சான்று :

அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்
பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி

என்பதில் பருகுதலும் காலுதலும் (கக்குதல், உமிழ்தல்) சூரியனின் செயல்களாகக் (வினைகள்) கூறப்பட்டன.

    சூரியன் உயிரற்ற பொருள். அதன் செயல்களாக உயிருள்ளவற்றிற்கு உரிய பருகுதலும் உமிழ்தலும் கூறப்பட்டுள்ளமை ‘சமாதி’ என்னும் குணப்பாங்கைச் சுட்டுகின்றன.

    வினைச்சொல்     மட்டுமன்றி,     வேறொன்றுக்குரிய பெயர்ச்சொல்லும் வந்தமைவது ‘சமாதி’ என்பதாகும்.

    ‘கன்னி எயில்’ என்பதில் உயர்திணைக்குரிய கன்னி என்ற பெயர்ச்சொல் புதிய மதிலுக்கு உரியதாகக் கூறப்பட்டது.