1.2 உவமை அணி
 
    தொல்காப்பியர் உவமைஅணி குறித்துக் கூறியுள்ளார் என்பதையும் உவமை அணியே பொருளணிகளில் தலைமை சான்றது என்பதையும் முன்னர்க் கண்டோம். காலப்போக்கில்உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத்'தாய் அணி' என்று கூறுவர்.
 
1.2.1 உவமை அணியின் இலக்கணம்
 
1)



2)


3)
ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.

பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும்.

ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும்.
 
உவமை அணியின் இலக்கணத்தைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.

பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை
(தண்டி, நூற்பா. 30)
 
1.2.2 உவமை அணி விளக்கம்
 
    உவமை அணியின் இலக்கணத்தைச் சற்று விரிவாகக்காண்போம். உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக்காணலாம். அவை,
 
  1) உவமை அல்லது உவமானம்
2) பொருள் அல்லது உவமேயம்
3) ஒத்த பண்பு
4) உவமை உருபு
 
ஆகியன.
 
  • உவமானம், உவமேயம்

    புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்'உவமை' அல்லது 'உவமானம்' எனப்படும்.

எடுத்துக்காட்டு:

தாமரை போன்ற முகம்

    இங்குப் புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம்.ஆகவே 'முகம்' உவமேயம். முகத்தை விளக்குவதற்காகஅதனோடு அவர் இயைத்துக் கூறும் பொருள் 'தாமரை'ஆகவே தாமரை உவமானம்.

  • ஒத்த பண்பு

    உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பைப் புலவர் சுட்டிக் காட்டியிருப்பார். இதுவே 'ஒத்த பண்பு' எனப்படும்.

எடுத்துக்காட்டு:

பவளம் போலும் செவ்வாய்

    வாய்க்கும்     பவளத்துக்கும் ஒத்த தன்மையாகிய 'செம்மை' (செம்மை-வாய்) இங்குச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைப்பாருங்கள்.

  • உவமை உருபு

    உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும்.

  • பொருளொடு பொருள் ஒப்புமைப்படுத்திக் கூறும் முறை
 
  ஒரு பொருளொடு ஒரு பொருளும்
ஒரு பொருளொடு பல பொருளும்
பல பொருளொடு பல பொருளும்
பல பொருளொடு ஒரு பொருளும்
 

என     நான்கு     வகையாகப் பொருள்கள் இயைத்து (ஒப்புமைப்படுத்தி)க் கூறப்படும்.

  • ஒரு பொருளொடு ஒரு பொருள்

எடுத்துக்காட்டு:

செவ்வான் அன்ன மேனி

    இங்கு 'வானம்' என்ற ஒரு பொருள் 'மேனி' என்றஒரு பொருளுக்கு உவமை ஆயிற்று.

  • ஒரு பொருளொடு பல பொருள்

எடுத்துக்காட்டு:

அவ்வான்
இலங்கு பிறை அன்ன விளங்கு வால் வை எயிறு

    இங்குப் 'பிறைச்சந்திரன்' என்ற ஒரு பொருள் 'பற்கள்'(எயிறு) என்ற பல பொருளுக்கு உவமை ஆயிற்று.

  • பல பொருளொடு பல பொருள்

எடுத்துக்காட்டு:

சுறவு இனத்து அன்ன வாேளார் மொய்ப்ப

    இங்குச் 'சுறா மீன் கூட்டம்' என்ற பல பொருள்தொகுதி, 'வாள் ஏந்திய வீரர் குழாம்' என்ற பல பொருள்தொகுதிக்கு உவமை ஆயிற்று.

  • பல பொருளொடு ஒரு பொருள்

எடுத்துக்காட்டு:

பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்
பீடு இல் மன்னர் போல
ஓடுவை மன்னா? வாடை நீ எமக்கே?
 
(பீடு-பெருமை; ஓடுவை-ஓடுவாய்)

    இங்கு, கரிகாலனை எதிர்த்து நிற்க மாட்டாமல் தோற்றுஓடிய பகை மன்னர்கள் பலர் தலைவன் வந்தவுடன்தலைவிக்கு முன் செயலற்று ஓடப் போகின்ற வாடையாகியஒரு பொருளுக்கு உவமை ஆயினர்.
 
1.2.3 மூவகை ஒப்புமைகள்
 

    'பண்பு, தொழில்,     பயன்'     என்னும் மூன்றுஒப்புமைத்தன்மை காரணமாக உவமை அணி தோன்றும் எனமுன்பு கண்டோம். இங்கு இவற்றை விளக்கமாகக் காணலாம்.

  • பண்பு உவமை

    ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவுஆகியவை அப்பொருளின் 'பண்பு' எனப்படும். இப்பண்புகள்காரணமாக அமையும் உவமை பண்புஉவமை ஆகும்.

எடுத்துக்காட்டு:

பவளத்தன்ன மேனி (பவளம் போன்ற உடல்)
வேய் புரை பணைத்தோள்
(வேய்-மூங்கில், மூங்கில் போன்ற தோள்)

பால் போலும் இன்சொல்
(பால் போன்ற இனிய சொல)

    இங்குக் காட்டிய சான்றுகளில் முறையே பவளத்தின்நிறம் மேனிக்கும், மூங்கிலின் வடிவம் தோளுக்கும், பாலின்சுவை சொல்லுக்கும், உவமைகளாயின. இவ்வாறு பண்புஒப்புமை காரணமாக உவமை அமைந்தமையால் இவை பண்புஉவமை ஆகும்.

  • தொழில் உவமை

    ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாகஅமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

எடுத்துக்காட்டு :
  அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன்
 
(அரிமா-சிங்கம்: அணங்கு-துன்பம்: துப்பு-வலிமை)

    சிங்கத்தைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும்வலிமையினை உடைய திருமாவளவன் என்பது இவ்வடிகளின்பொருள். துன்பம் தருதல் என்ற தொழில் ஒப்புமை காரணமாகஇது தொழில் உவமை ஆயிற்று.
  • பயன் உவமை

    ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும்உவமை பயன் உவமை எனப்படும்.

எடுத்துக்காட்டு:
  மாரி அன்ன வண்கைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே
 
(வண்கை-கொடைத்தன்மை, காணிய-காண,சென்மே-செல்லுக)

    மழையை ஒத்த கொடைத் தன்மையை உடையஆய் வள்ளலைக் காண்பதற்குச் செல்வாயாக என்பது இவ்வடிகளின் பொருள். மாரியால் விளையும் பயனும் வள்ளலின்கொடையால் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன் உவமைஆயிற்று.
 
1.2.4 உவமை அணியின் வகைகள்
 
    உவமை அணி மொத்தம் இருபத்து நான்கு வகைகளைஉடையது. (தண்டி. நூ. 31). அவை வருமாறு;
 
1) விரி உவமை
2) தொகை உவமை
3) இதரவிதர உவமை
4) சமுச்சய உவமை
5) உண்மை உவமை
6) மறுபொருள் உவமை
7) புகழ் உவமை
8) நிந்தை உவமை
9) நியம உவமை
10) அநியம உவமை
11) ஐய உவமை
12) தெரிதரு தேற்ற உவமை
13) இன்சொல் உவமை
14) விபரீத உவமை
15) இயம்புதல் வேட்கை உவமை
16) பலபொருள் உவமை
17) விகார உவமை
18) மோக உவமை
19) அபூத உவமை
20) பலவயிற்போலி உவமை
21) ஒருவயிற்போலி உவமை
22) கூடா உவமை
23) பொதுநீங்கு உவமை
24) மாலை உவமை.
இவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைச் சான்றுடன் விளக்கமாகக்காண்போம்.
 
  • விரி உவமை

    உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் இடையிலான பண்பு,தொழில், பயன் பற்றிய ஒப்புமைத் தன்மை வெளிப்படையாகஅமைவது விரி உவமை.

எடுத்துக்காட்டு:

பால்போலும் இன்சொல்; பவளம்போல் செந்துவர்வாய்;
சேல்போல் பிறழும் திருநெடுங்கண்; - மேலாம்
புயல்போல் கொடைக்கைப் புனல்நாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ(து) அவர்

(துவர்-பவளம்; சேல்-சேல்மீன்; புயல்-மழை)

இப்பாடலின் பொருள்:

    'பால் போன்ற இனிய சொல்லையும், பவளத்தைப் போன்றசிவந்த வாயினையும், சேல் மீன்களைப் போலப் பிறழ்கின்றஅழகிய கண்களையும் உடைய அவர் (தலைவி) வாழும் இடம்,மழை போன்ற கொடைக் கையை உடைய சோழனின்கொல்லி மலைச் சாரலின் பக்கத்தே உள்ளது போலும்' என்றுதலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

அணிப் பொருத்தம்

    இப்பாடலில் நான்கு உவமைகள் பயின்று வருகின்றன.இவற்றில் முறையே 'இனிமை', 'செம்மை' என்ற பண்புஒப்புமையும், 'பிறழ்தல்' என்ற தொழில் ஒப்புமையும், 'கொடை'என்ற பயன் ஒப்புமையும் வெளிப்படையாக வந்துள்ளமைகாணலாம். ஆகவே இது விரி உவமை ஆகும்.

  • தொகை உவமை

    ஒப்புமைத் தன்மை தொக்கி (மறைந்து) வருவதுதொகை உவமை.

எடுத்துக்காட்டு:

தாமரை போல்முகத்துத் தண்தரளம் போல்முறுவல்
காமரு வேய்புரைதோள் காரிகையீர்!

(தரளம்-முத்து; முறுவல்-நகை,பல்; காமரு-அழகிய; வேய்-மூங்கில்)

இப்பாடலின் பொருள் :

    ''தாமரை போன்ற முகத்தையும், குளிர்ந்த முத்துப்போன்ற நகையினையும் (பற்களையும்), மூங்கில் போன்றதோளினையும் உடைய மாதரீர்! என்று தலைவன் தோழி,தலைவி இருவரிடமும் பேசுகிறான்.

அணிப் பொருத்தம் :

    இப்பாடலில் 'தாமரை போல் முகம்' என்ற உவமையில் 'செம்மை' என்ற நிறப்பண்பு மறைந்துள்ளது. 'தண்தரளம் போல்முறுவல்' என்ற உவமையில் 'வெண்மை' என்ற நிறப்பண்பு மறைந்துள்ளது, "வேய் புரை தோள்' என்ற உவமையில்வடிவமாகிய பண்பும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு ஒப்புமைக்குரிய பண்புகளைச் சுட்டிக் காட்டாததால் இது தொகைஉவமை ஆயிற்று.

  • இதர விதர உவமை

    ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும்,உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர விதர உவமை. அதாவது, முதலில் உவமானமும்உவமேயமுமாகச் சொல்லப்பட்ட பொருள்களையே பின்னர்உவமேயமும் உவமானமுமாக மாற்றிச் சொல்லுதல், இவ்வாறுசொல்வதன் நோக்கம், இப்பொருள்களுக்கு ஒப்புமையாகக்கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லை எனக் குறிப்பதுஆகும்.

    இதரவிதரம் என்ற தொடருக்கு 'ஒன்றற்கொன்று' என்பதுபொருள்.

எடுத்துக்காட்டு :

களிக்கும் கயல்போலும் நும்கண்; நும்கண்போல்
களிக்கும் கயலும்; கனிவாய்த் தளிர்க்கொடியீர்!
தாமரைபோல் மலரும் நும்முகம்; நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்

(செவ்வி - அழகு)

இப்பாடலின் பொருள்

    தளிரொடு கூடிய கொடி போன்ற நங்கையீர்! கயல்மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன; நும்கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன; தாமரைபோல் நும் முகம் மலர்ந்துள்ளது; நும் முகம் போலத் தாமரையும்மலர்ந்து அழகு தருகின்றது.

அணிப் பொருத்தம் :

    இப்பாடலில் முதலில் கயல் உவமானமாகவும் கண்உவமேயமாகவும் வந்து, பின்னர் அவை முறையேஉவமேயமாகவும் உவமானமாகவும் மாறி வந்தன. அதேபோலமுதலில் தாமரை உவமானமாகவும் முகம் உவமேயமாகவும்வந்து, பின்னர் அவை முறையே     உவமேயமாகவும்உவமானமாகவும் மாறி வந்தன. எனவே இப்பாடல் இதரவிதர (முன் பின்) உவமை ஆயிற்று.

  • அபூத உவமை

    உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவதுஅபூத உவமை. (பூதம் - பொருள்(தனிமம்); அ - இல்லாத;அ பூதம் - இல்லாத பொருள்) இதனை 'இல் பொருள்உவமை' என்று கூறுவர். இதுவே பெருவழக்கு. கம்பராமாயணம், பெரிய புராணம், சீவகசிந்தாமணி போன்றகாப்பியங்களில் மிகுதியாக இவ்வணி பயில்வதைக் காணலாம்.கம்ப ராமாயணத்தில் ஒரு சான்று காண்போம்.

எடுத்துக்காட்டு :

வன்துணைப் பெருந்தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான்

(தழீஇஅன்ன-தழுவியது போன்ற)

பாடல் பொருள்

    இராவணன் கும்பகருணனை எழுப்பி வரச் சொல்கிறான். எழுந்து வந்த கும்பகருணன். இராவணனை வணங்கினான். நின்றுகொண்டிருந்த இராவணன் கும்பகருணனை மார்பாரத் தழுவிக்கொள்கிறான். இது, நின்ற குன்று ஒன்று நீண்ட நெடியகால்கெளாடு நடந்து சென்ற ஒரு குன்றைத் தழுவியது போல்இருந்தது என்று கம்பர் கூறுகிறார்.

அணிப்பொருத்தம்

    கால்பெற்று நடந்து செல்லும் குன்று என்பது உலகத்தில் இல்லாத ஒன்று; அவ்வாறு இல்லாத பொருளை உவமைகூறியதால் இது இல் பொருள் உவமை அணியாயிற்று.

 
1.2.5 எடுத்துக்காட்டு உவமை
 
    தண்டியலங்கார ஆசிரியர் உவமையணி வகைகளில் ஒன்றாக எடுத்துக்காட்டு உவமை அணியைக் குறிப்பிடாமல் விட்டார். ஆனால் திருக்குறள் முதலிய பல தமிழ் இலக்கியங்களில் இது மிகுதியாகப் பயில்கிறது.

    உவமானமும் உவமேயமும் தனித்தனி வாக்கியங்களாக அமைந்து அவற்றிற்கு இடையே போல என்ற சுட்டிக்கூறும் உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டுஉவமையணி எனப்படும்.

எடுத்துக்காட்டு:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(குறள் :1)

பாடல் பொருள் :

    எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன;அதுபோல இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது.

அணிப்பொருத்தம்

    இத்திருக்குறளில் 'அகர முதல எழுத்தெல்லாம்' என்ற வாக்கியம் உவமானம். 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற வாக்கியம் உவமேயம். இந்த இரு வாக்கியங்களுக்கும்இடையே 'போல' என்ற உவம உருபு மறைந்துவந்தமையால் இது எடுத்துக்காட்டு உவமை அணி ஆயிற்று.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1

தண்டியலங்காரத்தில் கூறப்படும் பொருளணிகள் மொத்தம் எத்தனை?

விடை
2

உள்ளதை உள்ளவாறு கூறல் எந்த அணி?

விடை
3

உவமை அணியிலிருந்து தோன்றிய அணிகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

விடை
4

உவமை அணி தோன்றுவதற்குக் காரணமான மூன்று ஒப்புமைத் தன்மைகள் யாவை?

விடை
5

பின்வருவனவற்றுள் விரி உவமை, தொகை உவமை எவை எவை என்பதைக் குறிப்பிடுக. பவளம் போன்ற இதழ், பால் போலும் இன்சொல், புயல் போன்ற கொடைக்கை, தாமரை போன்ற முகம்.

விடை
6

இதர விதர உவமை என்றால் என்ன?

விடை
7

அபூத உவமைக்கு மற்றொரு பெயர் யாது?அதன் இலக்கணம் கூறுக.

விடை
8

எடுத்துக்காட்டு உவமை அணியின் இலக்கணத்தை எழுதி, ஒரு சான்று தருக.

விடை