3.3 தற்குறிப்பேற்ற அணி
 
    கவிஞர் தம்முடைய கற்பனைத் திறத்தைக் காட்டுவதற்குப் பாடலில் கையாளும் அணிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அணி தற்குறிப்பேற்ற அணி. பாடலில் கவிஞர் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைப் பாடுகின்றார். அந்நிகழ்ச்சி இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி. இயல்பாக நடைபெறும் அந்நிகழ்ச்சிக்குக் கவிஞர் தம் கற்பனையாக ஒரு காரணம் கற்பிக்கின்றார். இதனால் தாம் கூறும் நிகழ்ச்சிக்குப் புதிய சுவை உணர்வைத் தருகிறார். பாடலைப் படிப்போர் நெஞ்சிலும் இத்தகைய உணர்வைக் கிளர்ந்தெழச் செய்கிறார். இதன் பொருட்டுக் கையாளப்படும் அணியே தற்குறிப்பேற்ற அணி.
 
3.3.1 தற்குறிப்பேற்ற அணியின் இலக்கணம்
 
    பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.
 
பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
(தண்டி, நூ. 56)
 
(பெயர்பொருள் = அசையும் பொருள்;
அல்பொருள்
= அசையாத பொருள்)

    எனவே தற்குறிப்பேற்ற அணி 'பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி, பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி' என இரு வகைப்படும்.

3.3.2 பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி

எடுத்துக்காட்டு:

மண்படுதோள் கிள்ளி மதயானை, மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால், - விண்படர்ந்து
பாயும்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று

 
(கிள்ளி - சோழன்; மாற்றரசர் - பகை அரசர்;
வெகுளி - கோபம்; விசும்பு - விண்,வான்.)
பனிமதியம் - குளிர்ச்சி பொருந்திய முழு நிலவு;


பாடலின் பொருள்:

    நிலவுலகத்தைத் தாங்கிய தோள் வலிமையை உடைய சோழனுடைய மதயானையானது, பகை அரசர்களுடைய வெண்கொற்றக் குடையைச் சீறிச் சிதைத்தது கோபத்துடன், அக்குடையைப் போல உள்ள தன் மேலும் வானை நோக்கி வந்து பாயுமோ என்று அஞ்சி, குளிர்ச்சியை உடைய முழு நிலவானது தெளிந்த வானத்தில் நின்று தேய்கின்றது.

  • அணிப்பொருத்தம்

    இப்பாடலில் கூறப்பட்ட பொருள் வானத்தில் உள்ள சந்திரன் ஆகும். இது பெயரும் பொருள் ஆகும். அதன் இயல்பு வளர்தலும் தேய்தலும் ஆகும். தேய்தல் நிலவில் இயல்பாக (இயற்கையாக) நிகழும் தன்மை. ஆனால் கவிஞர் அது இயல்பான நிகழ்வு என்பதை ஒழித்து, 'சோழனுடைய மதயானை பகை அரசர்களுடைய வெண்கொற்றக் குடையைச் சீறிச் சிதைத்த சினத்தாலே, அக்குடையை ஒத்த தன் மேலும் வந்து பாயுமோ என்று அஞ்சியே தேய்கிறது' என்று தாம் கருதிய வேறு ஒரு     காரணத்தை ஏற்றிக்     கூறியதால் இப்பாடல் பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

3.3.3 பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி

எடுத்துக்காட்டு:

வேனில் வெயிற்கு உலர்ந்த மெய்வறுமை கண்டு
இரங்கி,
வானின் வளம்சுரந்த வண்புயற்கு, - தான்உடைய
தாதும் மேதக்க மதுவும் தடஞ்சினையால்
போதும் மீதுஏந்தும் பொழில்
    
(உலர்ந்த - வாடிய; மெய்வறுமை- மேனி வாட்டம்;
வண்புயல்
- கார் மேகம், மழைமேகம்; தாது - மகரந்தம்;
மது
-தேன்; தடஞ்சினை - பெரிய கிளை; போது - மலர்; பொழில் - சோலை.)


பாடலின் பொருள்:

    முதுவேனில் காலத்தில் கதிரவன் வெயில் வெப்பம் தாளாமல் உலர்ந்து மேனி வாடியது சோலை. அதைக்கண்டு இரங்கி, வானிலிருந்து மழைவளத்தைப்     பொழிந்தது கார்மேகம். அச்செயலுக்குக் கைம்மாறாகச் சோலை, தன்னிடத்தில் உள்ள பெருமை     பொருந்திய மகரந்தம் நிறைந்த மலர்களையும், தேனையும் நிறைந்த தன் பெரிய கிளைகளாகிய கைகளால், மேகத்திற்குத் தருவதற்காக, மேல்நோக்கி ஏந்தி நிற்கிறது.

  • அணிப்பொருத்தம்
 
    இப்பாடலில் கூறப்பட்ட பொருள் 'பொழில்' ஆகும். இது பெயராத பொருள் ஆகும். பொழில் தன்னிடத்தில் வளர்ந்து ஓங்கிய மரக் கிளைகளில் தாதும் பூவும் தேனும் கொண்டிருத்தல் இயல்பாக நிகழும் தன்மையாகும். ஆனால் கவிஞர் அத்தன்மையை ஒழித்து, 'வேனில் காலத்தில் தனக்கு வெயிலின் வெப்பம் தீர்த்து உதவிய மழைமேகத்திற்குக் கைம்மாறாகக் கொடுப்பதற்காக அப்பொழில், தன் கிளைகளாகிய கைகளால் தாதையும், மலரையும், தேனையும் ஏந்தி நிற்கும்' எனத் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை ஏற்றிக் கூறுவதால் இப்பாடல் பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

3.3.4. இலக்கியங்களில் தற்குறிப்பேற்ற அணி

    தற்குறிப்பேற்ற அணி தமிழ் இலக்கியங்களில் மிகுதியாகப் பயில்கிறது. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இவ்வணியின் ஆட்சி அதிகம் இருப்பதைக் காணலாம். சில சான்றுகள் காண்போம்.

    எடுத்துக்காட்டு - 1 சிலப்பதிகாரம்

    கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் மூவரும் ஒரு மரப்புணையில் (படகில்) ஏறி வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகர் செல்கின்றனர். வையையில் வெள்ளம் நிறைந்து ஓடுகிறது. இரு மருங்கிலும் சோலைகளில் உள்ள மரங்கள் உதிர்த்த மலர்களைச் சுமந்து கொண்டு வையை செல்கிறது. இஃது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி. ஆயின் இளங்கோவடிகள் கண்ணகிக்கு வரப் போகும் துன்பத்தை அவ் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி முன்பே அறிந்தவள் போல வருந்தி அழுத கண்ணீரே ஆறாக ஓடுகிறது என்றும் அதனைப் பிறர்க்குத் தெரியாமல் மறைக்க வேண்டி மலர் ஆடை போர்த்துக் கொண்டு செல்கிறாள் என்றும் கற்பனை நயம் தோன்ற வேறு ஒரு குறிப்பை ஏற்றிக் கூறுகிறார். இதனை,

வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி
(புறஞ்சேரி இறுத்த காதை,170-173)
என்ற அடிகளால் அறியலாம்.

(தையல்=பெண், கண்ணகி; உறுவது = நேர இருப்பது;
கரந்தனள்
= மறைத்தவளாக)

. எடுத்துக்காட்டு - 2 கம்பராமாயணம்

    இராமன் வில் வளைத்துச் சீதையை மணக்க வேண்டி, விசுவாமித்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் மிதிலை மாநகரம் செல்கின்றான். அந்நகரத்து அருகில் செல்லும்போது, நகர் மதில் மேல் உள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடின. கொடிகள் காற்றில் அசைந்தாடுவது இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஆகும். ஆனால் கம்பர், மதில் மேல் உள்ள கொடிகள் அசைந்தாடுவது, சீதையை விரைவில் வந்து மணம் புரியுமாறு இராமனைக் கை காட்டி அழைப்பது போல உள்ளது என்று தம் குறிப்பை (கருத்தை) ஏற்றிக் கூறுகிறார். இதனை,

........... ............ செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச்
செங்கண்
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது
அம்மா
(பால காண்டம், 563)
என்ற செய்யுள் வரிகளால் அறியலாம்.

(செழுமணி = அழகிய; கடிநகர் = காவல் மிகுந்த நகர்;
கமலம் = தாமரை; ஒல்லை = விரைவாக)