3.4 ஏது அணி
 
    தண்டியலங்காரத்தில் பதின்மூன்றாவது அணியாகக் கூறப்படுவது ஏது அணி ஆகும். ஏது = காரணம். பாடலில் கூறப்படும் பொருள் நிகழ்வதற்கான காரணத்தைச் சிறப்பாக எடுத்துக் கூறுவதற்குக் கவிஞர்கள் கையாண்ட அணி ஏது அணி.
 
3.4.1 ஏது அணியின் இலக்கணம்
 
    ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச் சிறப்பாக எடுத்துச் சொல்வது ஏது என்னும் அணி ஆகும். ஏது அணி காரக ஏது, ஞாபக ஏது என்று இரு வகைப்படும்.
 
யாதன் திறத்தினும் இதனின் இது விளைந்தது என்று
ஏது விதந்து உரைப்பது ஏது; அதுதான்
காரகம், ஞாபகம் என இரு திறப்படும்
(தண்டி, 58)
(ஏது - காரணம்; காரகம் - செயலை இயற்றுவிப்பது;
ஞாபகம்- அறிவிப்பது, உணரச் செய்வது)


3.4.2 காரக ஏது

    கருத்தா, பொருள், கருமம், கருவி, ஏற்பது, நீக்கம் என்று சொல்லப்படும் இவை ஆறும் காரணமாகத் தோன்றுவது காரக ஏது ஆகும்.

(முதல்வன் - கருத்தா அல்லது வினைமுதல்;
பொருள்-செயப்படு பொருள்; கருமம் - செயல்;)


    இவ்வகைகளுள் கருத்தா காரக ஏது, பொருள் காரக ஏது ஆகியவற்றைப் பற்றிச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.

3.4.3 கருத்தா காரக ஏது

    ஒரு கருத்தாவே தொழிலை இயற்றுவிப்பதாயும் (காரகமாகியும்), அதுவே பிற தொழில் நிகழ்ச்சிகள் தோன்றுவதற்குக் காரணமாயும் (ஏதுவாயும்) நிற்பின் அது கருத்தா காரக ஏது எனப்படும்.


எடுத்துக்காட்டு:

எல்லைநீர் வையகத்து எண்ணிறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பம் தோற்றியதால்; - முல்லைசேர்
தாது அலைத்து, வண்கொன்றைத் தார் அலைத்து,
வண்டு ஆர்க்கப்
பூதலத்து வந்த புயல்

(எல்லைநீர் - கடல்; தோற்றியது - உண்டாக்கிற்று;
தாது - மகரந்தம்; தார் - மாலை பூ;
அலைத்து - அசைத்து; பூதலம் உலகம்; புயல் - மழை;)


பாடலின் பொருள்:

    முல்லை மலர்களில் பொருந்திய மகரந்தத்தை அசைத்து, வளப்பம் மிகுந்த கொன்றைப் பூங்கொத்துகளையும் அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்குமாறு, இந்நிலவுலகத்து வந்த காற்றானது, கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் உள்ள எல்லா     உயிர்களுக்கும் சொல்லுதற்கு     அரிய பேரின்பத்தைத் தோற்றுவித்தது.

  • அணிப்பொருத்தம்
    இப்பாடலில் கூறப்பட்ட கருத்தா 'காற்று' ஆகும். அந்தக் காற்றானது உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பேரின்பத்தைத் தோற்றுவித்தது என்பதால் காரகம், அது மகரந்தத் தாது அசைதல், கொன்றைப் பூங்கொத்து. அசைதல்    ஆகிய செயல்கள் நிகழ்வதற்கு ஏதுவாக அமைந்தது. ஆகவே இது கருத்தா காரக ஏது ஆயிற்று.

3.4.4 ஞாபக ஏது

    ஏது அணியின் இரண்டு வகைகளிலே மற்றொன்று ஞாபக ஏது ஆகும். காரக ஏதுவிற்குச சொல்லப்பட்ட காரணங்கள் அன்றிப் பிற காரணத்தினால், உய்த்துணரத் தோன்றுவது ஞாபக ஏதுவாம்.

    ஞாபகம் என்பதற்கு அறிவிப்பது என்று பொருள். இதனால் இது விளைந்தது என்று அறிவிப்பது ஞாபக ஏதுவாம்.
காதலன்மேல் ஊடல் கரைஇறத்தல் காட்டுமால்
மாதர் நுதல்வியர்ப்ப, வாய்துடிப்ப, - மீது
மருங்கு வளை வில்முரிய, வாள் இடுக நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து
(காதலன் = தலைவன்; கரை இறத்தல் = அளவு கடத்தல்;
மாதர் = தலைவி; நுதல் = நெற்றி; மருங்கு = பக்கம்;
வளை வில்
= வளைந்த வில் போன்ற புருவம்;
முரிய = வளைய; கருங்குவளை= கண்; சேந்த - சிவந்த;
கருத்து = குறிப்பு.)

பாடலின் பொருள்

    தலைவியின் நெற்றி வியர்த்தது; வாய் துடித்தது; இரு பக்கமும் வளைந்த புருவங்களாகிய விற்கள் மேலும் மேலே சென்று வளைந்தன; வாள் படையும் தோற்கும்படியான நீண்ட கரிய நீலமலர் போன்ற கண்கள் சிவந்தன. இந்த மெய்ப்பாடுகள் யாவும் அவள் தன்னுடைய காதலன் மீது கொண்ட ஊடல் அளவு கடந்து செல்வதைத் தெரிவிக்கும்.

  • அணிப்பொருத்தம்

    இப்பாடலில், நெற்றி    வியர்த்தல், வாய் துடித்தல், புருவங்கள்    மேலும் வளைதல், கண்கள் சிவத்தல் ஆகியவற்றுக்குத் தலைவி தன்னுடைய காதலன் மீது கொண்ட ஊடல் மிகுதியே காரணம் என அறிவிக்கப் படுவதால் இது ஞாபக ஏது ஆயிற்று.