5.1 துணை வினை - ஒரு விளக்கம்

     வினைச்சொற்கள் தொழில் அல்லது செயலைக் காட்டும். இவை காலம் காட்டும் இடைநிலைகளையும் பால், எண் காட்டும் விகுதிகளையும் பெற்றுவரும். ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் தனித்தனியே சொற்பொருள் (Lexical meaning) உண்டு. சான்றாகப் பார் என்னும் வினைச்சொல் ‘பார்த்தல்’ அல்லது ‘காணுதல்’ என்ற தனிப்பொருள் உடையது. இது போன்றே இரு, பாடு, ஆடு, செய், அழு, தள்ளு போன்ற வினைச்சொற்களும் தமக்கென்று தனித்தனியே பொருள் உடையன. இத்தகைய வினைச்சொற்களுள் சில, வேறு வினைச்சொற்களுடன் இணைந்து வருதலும் உண்டு. அவ்வாறு இணைந்து வரும்பொழுது, அவை தமக்குரிய தனிப்பொருளை இழந்து, தாம் சேர்ந்து வரும் வினைச்சொற்களுக்குப் புதிய பொருளைத் தருவனவாய் அமைகின்றன. இத்தகு புதிய     பொருளை மொழியியலார் இலக்கணப்பொருள் (Grammatical meaning) என்று குறிப்பிடுகின்றனர்.     இவ்வாறு     தம்பொருளை இழந்து, இலக்கணப்பொருளைத்     தருகின்ற     நிலையில்     வரும் வினைச்சொற்களையே துணைவினைகள் (Auxillary verbs) என்று மொழியியலார் கூறுகின்றனர்.

ஆங்கில மொழியில் உள்ள
have என்ற வினைச்சொல், உடைய என்ற தனிப்பொருளைத் தரும்.      I have a pen

போன்ற ஆங்கிலச் சொற்றொடர்களில் இந்நிலையைக் காணலாம். ஆனால்,      I have to go (நான் போகவேண்டும்)      We have to go (நாங்கள் போகவேண்டும்)

போன்ற சொற்றொடர்களில்
have என்ற சொல் உடைய என்ற பொருளைத் தரவில்லை. அச்சொல் தனக்கு உரிய அப்பொருளை இழந்து, கட்டாயம் அல்லது கண்டிப்பாக என்ற இலக்கணப் பொருளைத் தருவதைக் காணலாம். இவ்வாறான இலக்கணப் பொருளைத்     தரும்     வினைகளையே ஆங்கிலத்தில் துணைவினைகள் என்கின்றனர்.

     தமிழிலும் இதுபோன்ற இரண்டு நிலைகளை வினைச் சொற்களில் காணலாம். சான்றாகத் தமிழில் இரு என்பது ஒரு வினைச்சொல். இதற்கு இருத்தல் அல்லது உண்டு என்ற தனிப்பொருள் உள்ளது.

சான்று :

     இராமன் வீட்டில் இருந்தான்

     இராமனிடம் பணம் இருக்கிறது

     இச்சொற்றொடர்களில் இரு என்பது இருத்தல் என்ற தனக்கு உரிய பொருளில் வழங்குகிறது. ஆனால் இதே இரு என்ற வினைச்சொல், பிற வினைச்சொற்களோடு சேர்ந்து வரும்பொழுது, தனக்குரிய பொருளை இழந்து இலக்கணப்பொருளைத் தருகிறது. இதுவே துணைவினை எனப்படும்.

சான்று :

     இராமன் வந்திருந்தான்

     இச்சொற்றொடரில் இரு என்பது வா என்ற வினையடியிலிருந்து தோன்றிய வந்து என்ற வினையெச்சத்தோடு சேர்ந்து வரும்பொழுது, ‘வந்து அதன் பின்பு இருந்தான்’ என்ற தன் பொருளில் வழங்காமல், வந்தான் என்ற     பொருளில் வழங்குகிறது. எனினும் இராமன் வந்த செயல் முடிவைத் தெளிவாக அல்லது உறுதியாக உணர்த்திட, வந்தான் என்ற சொல்லைக் காட்டிலும் வந்திருந்தான் என்ற சொல்லே துணைபுரிகிறது. இதற்குக் காரணம் வந்து என்பதோடு சேர்ந்து வரும் இரு என்ற வினையே ஆகும். இதுபோல ஒரு வினைக்குத் துணையாக நின்று, அவ்வினை உணர்த்தும் செயல் அல்லது தொழிலை விளக்கவோ, சிறப்பிக்கவோ உதவுவதால் இதனைத் துணைவினை என்று மொழியியலார் குறிப்பிட்டனர். இந்நிலையில் துணைவினைகளோடு சேர்ந்து வரும் வினைகளைத் (வா-வந்து) தலைமை வினை (Main verb) என்று மொழியியலார் கூறினர்.      வந்திருந்தான் என்பது போன்ற இரு வினைச்சொற்கள் சேர்ந்து வருவதைக் கூட்டுவினை (Compound verb) என்றும் மொழியியலார் குறிப்பிடுகின்றனர். கூட்டுவினையின் அமைப்புப் பின்வருமாறு அமையும்.

தலைமை வினை + துணை வினை = கூட்டுவினை
(Main verb)     (Auxillary verb) (Compound verb)

     வந்து     + இருந்தான் = வந்திருந்தான்

     தமிழில் உள்ள இத்தகைய கூட்டுவினைகளை ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் முதற்கண் வரும் தலைமை வினைகள் எல்லாம் வினையெச்ச வடிவில் இருக்கும். அவை பெரும்பாலும் செய்து, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களாக இருக்கக் காணலாம். அவ்வினையெச்சங்களோடு சேரும் துணைவினைகள் ஏவல் வடிவங்களாகவும் முற்று வடிவங்களாகவும் இருக்கும்.

சான்று :

மோது :

     மோதிப் பார் (ஏவல் வடிவம்)

     மோதிப் பார்த்தான் (முற்று வடிவம்)

ஊது :

     ஊதித் தள்ளு
(ஏவல் வடிவம்)

    
ஊதித் தள்ளினான் (முற்று வடிவம்)

உண் :

     உண்ணச் செய்
(ஏவல் வடிவம்)

     உண்ணச் செய்தான் (முற்று வடிவம்)

இச்சான்றுகளில் வரும் மோதி, ஊதி என்பன செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள் ஆகும். உண்ண என்பது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஆகும்.