5.0 பாட முன்னுரை

    ஒரு மொழியின் மேம்பாட்டுத் திட்டம் அல்லது வளர்ச்சித் திட்டம் என்பது, அம்மொழியின் தேவையை முன்னிட்டு மேற்கொள்ளப்படுவதல்ல; சமுதாயத்தின் தேவை, சூழல், வாழ்வு, வளர்ச்சி, அச்சமுதாயம் சார்ந்துள்ள நாட்டுவளர்ச்சி போன்றவற்றை அடிப்படையாகவும், மையமாகவும் கொண்டு மேற்கொள்ளப்படுவது. மொழி, முதன்மையாகவும் முக்கியமாகவும் ஒருசெய்திப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுகிறது. அதனைத் தனித்துப் பார்ப்பது அல்லது அணுகுவது என்பது இயல்பானதாகத் தோன்றவில்லை. இதற்குக் காரணம், மொழியானது அது சார்ந்திருக்கும் சமுதாயத்தின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் இரண்டறக் கலந்து நிற்பதே ஆகும்.

    இத்தகைய மொழி, மாறக்கூடிய தன்மை உடையது. மொழியிலுள்ள சொற்களிலும் சொற்கள்     புலப்படுத்தும் பொருள்களிலும் ஏற்படும் மாற்றமே மொழி மாற்றத்தை உண்டாக்குகிறது எனலாம். தமிழ் மொழியில் இச்சொற்பொருள் மாற்றம் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. அத்தகைய காரணங்களை     அடிப்படையாகக்     கொண்டு, சொற்கள் பொருளுணர்த்தும் தன்மையை, பல முறைகளைப் பயன்படுத்தி விளக்கலாம். இவற்றையெல்லாம் விளக்கி, இப்பாடம் நமக்குச் சொற்பொருள் மாற்றச் செய்திகள் பலவற்றை வழங்குகிறது.