1.1 ஒலிப் பாகுபாடு

    ஒவ்வொரு மொழியிலும் ஒலிகள் பலவாக உள்ளன. அவற்றை ஒலிப்பதற்கு நாக்கு, மூக்கு, பல், இதழ், அண்ணம் (மேல்வாய்)     ஆகிய     உறுப்புகள்     பயன்படுகின்றன. சுவாசப்பையிலிருந்து     (நுரையீரலிலிருந்து)     எழும் காற்று இவ்வுறுப்புகளால் தடையுற்று வெளிப்படுவதே எல்லா ஒலிகளும் பிறக்கக் காரணம் ஆகும். இக்காரணம் கருதும்போது எல்லா ஒலியும் ஒன்றாகவே தோன்றும். ஆனால் நாக்கு, இதழ் ஆகிய உறுப்புகள்     பல்வேறு வகையாக நின்றும், அசைந்தும் தொழிற்படுவதால் அவ்வொலியும் பல்வேறு வகைப்படுகின்றது.

    தமிழ் மொழியில் உள்ள ஒலிகளைத் தமிழ் இலக்கண நூலாரும், மொழியியலாரும் உயிர் ஒலிகள் (vowels), மெய் ஒலிகள் (consonants) என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர்.

1.1.1 உயிர் ஒலிகள்

    அகரம் முதல் ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டு ஒலிகள் உயிர்ஒலிகள் எனப்பட்டன. இவை உயிர் போலத் தனித்து இயங்கும் ஆற்றல் உடையனவாதலின் ‘உயிர்’ எனத் தமிழ் இலக்கண நூலாரால் கூறப்பட்டன. மொழியியலாரும் இவ்வொலிகளை ‘உயிர்’ என்றே குறிப்பிடுகின்றனர்.

1.1.2 மெய் ஒலிகள்     

    ககரம் முதல் னகரம் இறுதியாக உள்ள பதினெட்டு ஒலிகள் மெய்ஒலிகள் எனப்பட்டன. உயிருடன் கூடியே இயங்கும் மெய் (மெய்- உடம்பு) போல இவ்வொலிகள் சொல்லுக்கு முதலில் தனித்து இயங்கும் ஆற்றலின்றி உயிர் ஒலிகளுடன் கூடியே இயங்கும் இயல்புடையனவாதலின் ‘மெய்’ எனத் தமிழ் இலக்கண நூலாரால் கூறப்பட்டன. மொழியியலாரும் இவ்வொலிகளை ‘மெய்’ என்றே குறிப்பிடுகின்றனர்.

இனி, தமிழில் உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம்.