1.2 உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாறு    

    தமிழ் மொழியில் பன்னிரண்டு உயிர் ஒலிகள் இருக்கின்றன. என்றாலும் தொடக்கத்தில் மூன்று உயிர் ஒலிகள் மட்டுமே இருந்தன என்றும், அவற்றிலிருந்தே மற்ற உயிர் ஒலிகள் காலப்போக்கில் தோன்றி வளர்ந்து பல்கிப் பெருகின என்றும் மொழியியலார் கூறுகின்றனர். இது பற்றி அவர்கள் கூறும் கருத்துகளை விரிவாகக் காண்போம்.

1.2.1 அடிப்படை உயிர் ஒலிகள் மூன்று

    ஒரு மொழியில் அடிப்படையான உயிர் ஒலிகள் மூன்று. அவை அ, இ, உ என்பன. இவையே எந்த ஒரு மொழியிலும் முதன்முதலில் இருந்திருக்க வேண்டும் என்றும், அவற்றிலிருந்தே பிற உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் என்றும் மொழியியலார் கூறுகின்றனர். தமிழிலும் இம்மூன்று உயிர் ஒலிகளே தொடக்கத்தில் இருந்தன.

1.2.2 ஐந்தாக வளர்தல்

    அ, இ, உ என்னும் மூன்று உயிர் ஒலிகள் காலப்போக்கில் ஐந்து உயிர் ஒலிகளாக வளர்ந்து அமைந்தன. இதனை மொழியியலார் ஓர் உயிர் ஒலி முக்கோணம் (vowel triangle) இட்டு விளக்கிக் காட்டுவர்.    

    அகரத்துக்கும் இகரத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தோன்றிய ஒலி எகரம் ஆகும். இகர ஒலி எகர ஒலியாக ஒலிக்கப்படுவதைக் கீழ்க்கண்ட சொற்கள் காட்டும்

  • இலை > எலை
  • இடம் > எடம்
  • விஷம் > வெஷம்
  • சிவப்பு > செவப்பு
  • இணை > எணை
  • இயலும் > ஏலும்

    இவ்வாறான     சொற்களை நோக்கும்போது, இகர ஒலியிலிருந்து எகர ஒலி தோன்றி வளர்ந்தது புலனாகும்.

    இதே போல அகரத்துக்கும் உகரத்துக்கும் இடைப்பட்ட நிலையில் ஒகர ஒலி தோன்றியது. உகர ஒலி ஒகர ஒலியாக ஒலிக்கப்படுவதைக் கீழ்க்கணட சொற்கள் காட்டும்.

  • உலகம் > ஒலகம்
  • உடம்பு > ஒடம்பு
  • உரல் > ஒரல்
  • உலை > ஒலை
  • உயரம் > ஒயரம்
  • துவை > தொவை

    இவ்வாறான சொற்களை     நோக்கும்போது உகர ஒலியினின்று ஒகர ஒலி தோன்றி வளர்ந்தது புலனாகும்.

    இவ்வாறு முதலில் அ, இ, உ என மூன்றாக இருந்த உயிர் ஒலிகள் அ, இ, உ, எ, ஒ என ஐந்தாக வளர்ந்தமைந்தன.

1.2.3 பத்தாகப் பெருகுதல்     

    அ, இ, உ, எ, ஒ என வளர்ந்தமைந்த ஐந்து உயிர் ஒலிகளும் பின்பு காலப்போக்கில் குறுகி ஒலித்தலும், நீட்டி ஒலித்தலும் ஆகிய வேறுபாட்டைப் பெற்றுப் பத்தாய்ப் பெருகி அமைந்தன. அதாவது அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என்று பெருகி அமைந்தன. தமிழ்மொழியில் இக்குறில் நெடில் வேறுபாடு நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வருகிறது. இக்குறில், நெடில்களைப் பெற்றுவரும் சொற்கள் பொருள் வேறுபாடு கொண்டனவாக உள்ளன.

     சான்று:

அணி, ஆணி; பல், பால்.
இன்று, ஈன்று; விடு, வீடு.
உடல், ஊடல்; புண், பூண்.
எங்கு, ஏங்கு; கெட்டு, கேட்டு.
ஒட்டு, ஓட்டு; கொல், கோல்.

    எனவேதான் தமிழில் குறிலும், அதற்குரிய நெடிலும் ஒலியனும் மாற்றொலியனுமாகக் கருதப்படாமல், தனித்தனி ஒலியன்களாகவே கருதப்படுகின்றன.

1.2.4 பன்னிரண்டாக நிறைதல்

    இவ்வாறு வளர்ந்தமைந்த உயிர் ஒலிகள் பத்தும் ஐ, ஒள என்னும் கூட்டொலிகளைப் பெற்றுப் பன்னிரண்டு என்ற எண்ணை அடைந்து அதற்குமேல் வளர்ச்சி எதுவும் பெறாமல் இன்றளவும் நிலைபெற்று நிற்கின்றன. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனப் பன்னிரண்டு உயிர்களும் தமிழில் அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1.2.5 நெடில் உயிர் ஒலிகளுக்குக் குறியீடு

    தமிழ்     இலக்கண நூலார் மேலே குறிப்பிட்ட பன்னிரண்டையும் தனித்தனி உயிர் ஒலிகளாகவே கொண்டனர். ஆனால் மொழியியலார் ஐ, ஒள என்னும் இரண்டையும், மற்ற உயிர் ஒலிகளைப் போலத் தனித்தனி உயிர் ஒலிகளாகக் கொள்ளவில்லை. அவை ஒவ்வொன்றையும் இரண்டு வேறுபட்ட ஒலிகளின் கூட்டொலிகள் என்று கொண்டனர். எனவே ஐ, ஒள என்னும் இரண்டைப் பற்றி, கூட்டொலிகள் என்னும் அடுத்த பாடத்தில் தனியே காண இருக்கிறோம். இப்பாடத்தில் ஐ, ஒள நீங்கலான ஏனைய பத்து உயிர் ஒலிகளைப் பற்றியே விரிவாகப் பார்க்க உள்ளோம்.

    தமிழ் இலக்கண நூலார் ஒவ்வொரு குறில் உயிர்க்கும், அதன் இனமான நெடில் உயிர்க்கும் தனித்தனியான வடிவங்களைக் குறியீடுகளாகத் தந்துள்ளனர்.

    

குறில் நெடில்

    மொழியியலார் ஒவ்வொரு மொழியில் உள்ள ஒலிகளுக்கும் ரோமன் வரிவடிவத்திலே (Roman script) ஒருபொதுவான குறியீடு கொடுப்பார்கள். அவ்வகையில் தமிழ் மொழியில் உள்ள ஐந்து குறில் உயிர்களுக்குத் தனித்தனியே குறியீடுகள் தந்து, அவற்றிற்கு இனமான நெடில் உயிர்களுக்குத் தனித்தனியே குறியீடு தாராது, நெடில் உயிர் என்பதைக் குறிப்பிட /:/ என்னும் ஒரே குறியீடு மட்டுமே தருவர். அவர்கள் தரும் குறியீடுகள் பின்வருமாறு:

    

குறில் உயிர் ஒலிகள் ரோமன் வரிவடிவம் நெடில் உயிர் ஒலிகள் ரோமன் வரிவடிவம்
a a :
i i :
u u :
e e :
o o :

    இதனால் தமிழ் இலக்கண நூலார் பத்து வரிவடிவங்களில் எழுதும் உயிர் ஒலிகளை, மொழியியலார் மொத்தம் ஆறு வடிவங்களில் கொண்டு வருகின்றனர். இதனை அவர்கள் ‘simplification’ என்பர். மேலும் ஐந்து நெடில் உயிர் ஒலிகளைக் குறிக்கக் கையாளும் குறியீட்டை அதாவது /:/ என்னும் ஒரே குறியீட்டை ‘Supra Segmental Phone’ என்றும் அழைப்பர். பத்து வரிவடிவங்களை, ஆறு வரிவடிவங்களாகக் குறைத்துக் கொள்வதில் எளிமைப் பண்பு காணப்படுகிறது.