தமிழில் நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின்
முதலிலும் உயிர் ஒலிகள் வருமானால், அவ்விரண்டு உயிர்
ஒலிகளையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, அவ்விரண்டுக்கும்
இடையே விட்டிசை (hiatus) தோன்றுகிறது. இதனால் ஒலிக்கும்
முயற்சி அருமை உடையதாகிறது. எனவே இரண்டு உயிர்
ஒலிகளுக்கு இடையே தோன்றும் விட்டிசையைத் தடுக்கவும்
(prevention
of hiatus), ஒலிக்கும் முயற்சியை எளிமையாக்கவும்
அவ்விரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையே
ஒரு மெய் ஒலி
சேர்க்கப்படும். அந்த மெய் ஒலியானது, விட்டிசைத்து நிற்கும்
இரண்டு உயிர் ஒலிகளையும், விட்டிசைக்காமல் உடம்படுத்தும்
காரணத்தால், உடம்படுமெய் ஒலி
எனப்படுகிறது.
(உடம்படுத்தல்- ஒன்றுபடுத்தல்)
சான்று:
1. எது + ஆயினும் = எதுவாயினும் (எது + வ் + ஆயினும்)
etu +
āyinum
= ‘etuvāyinum (etu + v + āyinum)
2. ஆ + இடை = ஆயிடை (ஆ + ய் + இடை)
ā + itai =
āyitai (ā
+ y + i-ai)
இங்கே காட்டிய சான்றுகளில் முதல் சான்றை
நோக்குவோம். அதில்
எது என்பது நிலைமொழி.
அதன்
இறுதியில் உ என்னும் உயிர் ஒலி
உள்ளது. ஆயினும் என்பது
வருமொழி. அதன் முதலில்
ஆ என்னும்
உயிர் ஒலி உள்ளது.
எது ஆயினும் என ஒலிக்கும்போது,
எது என்பதை ஒலித்து,
சிறிது இடைவெளி விட்டு, பின்பே
ஆயினும் என்பதை
ஒலிக்கிறோம். இவ்வாறு
இடைவெளி விட்டு ஒலிப்பதில் அருமை
(கடினம்) காணப்படுகிறது. ஆனால்
எதுவாயினும் என
ஒலிக்கும்போது, இடைவெளி விட்டு ஒலிப்பதில்லை. இவ்வாறு
இடைவெளி இல்லாமல் ஒலிப்பதில் எளிமை காணப்படுகிறது.
இதற்குக் காரணம் நிலைமொழி இறுதி உயிர் ஒலிக்கும் (உ),
வருமொழி முதல் உயிர் ஒலிக்கும் (ஆ) இடையே வ் என்னும்
மெய் ஒலி சேர்க்கப்படுவதே
ஆகும். விட்டிசைத்து நிற்கும்
இரண்டு உயிர் ஒலிகளை விட்டிசைக்காமல் உடம்படுத்தும் மெய்
ஒலியாக ‘வ்’ வருவதால் அதனை
உடம்படுமெய் ஒலி என்று
தமிழில் கூறினர்.
அதேபோல இரண்டாவது சான்றாகிய
ஆயிடை என்பதில்
ய் என்னும் மெய் ஒலி, உடம்படுமெய் ஒலியாக வருவதைக்
காணலாம்.
4.1.1 தமிழில் உடம்படுமெய் ஒலிகள்
மேலே காட்டிய சான்றுகளை நோக்கும்போது, தமிழில் ய்,
வ்
என்னும் இரண்டு மெய் ஒலிகள், உடம்படுமெய் ஒலிகளாக
வழங்குவது புலனாகும். இவற்றுள்
ய் என்பது முன் அண்ண
ஒலி (palatal) ஆகும்; வ் என்பது
பல் இதழ் ஒலி (Labio
dental) ஆகும். இவ்விரு மெய்ஒலிகளை மொழியியலார்
அரை
உயிர்கள் (semi-vowels) என்று குறிப்பிடுவர். இதனை
முன்னைய பாடத்தில் பார்த்தோம். இவற்றை மொழியியலார்
அரை உயிர்கள் என்று கூறியது பொருத்தமே எனலாம்.
ஏனெனில் இவற்றின் குணத்தில்
பாதி உயிர் ஒலியும், பாதி மெய்
ஒலியும் கலந்திருக்கின்றன. இவை மெய் ஒலிகளாயினும், அரை
உயிர்களாக இருப்பதால், விட்டிசைத்து நிற்கும் இரண்டு உயிர்
ஒலிகளுக்கு இடையில் சேர்ந்து, அவை இரண்டையும்
விட்டிசைக்காமல் உடம்படுத்தும் பணியைச் செவ்வனே
செய்கின்றன.
4.1.2 உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல்
ய், வ் என்னும் உடம்படுமெய் ஒலிகள் ஒவ்வொன்றும்
எந்தெந்தச்
சூழலில் வரும் என்பதற்கான வரையறுத்த விதி கி.பி.
13ஆம் நூற்றாண்டில் தோன்றிய
நன்னூலில் கூறப்பட்டுள்ளது.
இவ்விதி நிலைமொழியின் இறுதியில் இருக்கும் உயிர் ஒலிகளைக்
கொண்டு மூவேறு வகையாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது. அவை
வருமாறு:
1. நிலைமொழியின் இறுதியில்
இ, ஈ, ஐ என்னும் உயிர்
ஒலிகள் இருக்குமானால் அந்தச் சூழலில் யகரம் உடம்படுமெய்
ஒலியாக வரும்.
சான்று:
மணி + அரசன் = மணியரசன் (மணி+ய்+அரசன்)
தீ + எரிந்தது = தீயெரிந்தது (தீ+ய்+எரிந்தது)
மனை + அறம் = மனையறம் (மனை+ய்+அறம்)
2. நிலைமொழியின் இறுதியில் ஏ என்னும் உயிர் ஒலி
இருக்குமானால் அந்தச் சூழலில் ய், வ்
என்னும் இரண்டும்
உடம்படுமெய் ஒலிகளாக
வரும்.
சான்று:
தாயே + ஆனாலும் = தாயேயானாலும் (தாயே+ய்+
ஆனாலும்)
சே + அடி = சேவடி (சே+வ்+வடி)
(சேவடி - செம்மையான அடி)
3. நிலைமொழியின் இறுதியில் மேலே கூறிய உயிர்
ஒலிகளைத் தவிர,
ஏனைய உயிர் ஒலிகள் இருக்குமானால்,
அந்தச் சூழலில் வகரம் உடம்படுமெய்
ஒலியாக வரும்.
சான்று:
வர + இல்லை = வரவில்லை (வர+வ்+இல்லை)
திரு + அருள் = திருவருள் (திரு+வ்+அருள்)
பூ + அழகி = பூவழகி (பூ+வ்+அழகி)
இதுகாறும் தமிழில் உள்ள உடம்படுமெய் ஒலிகள் பற்றியும்,
சொற்களின் புணர்ச்சியில் அவை இடம் பெறும் சூழல் பற்றியும்
விரிவாகப் பார்த்தோம். மேலே சொன்ன கருத்துகளின் வழி
நின்று, உடம்படுமெய் ஒலிகளின் வருகை சங்க காலத்தில்
எவ்வாறு இருந்தது, இடைக்காலத்தில் எவ்வாறு மாறி வந்தது,
தற்காலத்தில் எவ்வாறு
இருக்கிறது என்பன பற்றி விரிவாகக்
காண்போம்.