6.1 கிளைமொழி - ஒரு விளக்கம்

    ஒரு நாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்பில் ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும் பேசுகின்ற அம்மொழி, நாடு முழுவதும் ஒன்றுபோல் இருக்கும் என்று கூறமுடியாது. இவர்களுடைய பேச்சுவழக்கில் சிறுசிறு மாற்றங்கள் அல்லது வேறுபாடுகள் இருப்பது இயற்கை ஆகும். எவ்வாறு எனில், அந்த நாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்பில் உள்ள இடங்களைக் காடு, மலை, ஆறு, கடல் போன்றவை பிரிக்கின்றன. இத்தகைய இயற்கைச் சூழல்களால் இயல்பாகவே பிரிபட்டு மக்கள் வாழும்போது, அம்மொழி பேசப்படும் நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்களுக்கும், மற்றொரு பகுதியில் வாழும் மக்களுக்கும் இடையே அதிகமான தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது. மேலும் அரசியல், சமயம், சாதி, தொழில், பொருளாதாரம் போன்றவற்றாலும் அம்மொழி பேசும் மக்களுக்கு இடையே தொடர்பு குறைந்துபோகிறது. இவற்றின் காரணமாக ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இடையிலான பேச்சு வழக்கு வேறுபடுகிறது. இவ்வேறுபாடு ஒரு பொருளைக் குறிக்கக் கையாளும் சொற்கள், சொற்களின் ஒலியமைப்பு மற்றும் இலக்கண அமைப்பு ஆகியவற்றில் பெரிதும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு மொழியைப் பேசுபவர்களுக்கு இடையே வேறுபட்டுக் காணப்படும் பேச்சுவழக்கையே மொழியியலார் கிளைமொழி (dialect) என்று கூறுகின்றனர்.

    கிளைமொழிக்கான இவ்விளக்கத்தைச் சில சான்றுகள் வழி நின்று பார்த்தால் நன்கு புரிந்துகொள்ளலாம்.

    தேங்காய் ஓட்டை (இரண்டாக உடைத்துப் பருப்பை எடுத்த பிறகு உள்ள ஒரு தேங்காய் ஓட்டை), தமிழ் நாட்டின் வடபகுதியில் உள்ள சென்னையைச் சார்ந்த மக்கள் கொட்டாங்கச்சி என்று கூறுகின்றனர்; தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி முதலான இடங்களில் வாழ்பவர்கள் சிரட்டை அல்லது செரட்டை என்று கூறுகின்றனர். இவ்வாறு ஒரு பொருளைக் குறிக்க இடத்திற்கு இடம் வெவ்வேறு சொற்கள் வழங்கும்போது, அச்சொற்களைக் கிளைமொழி என்று     மொழியியலார் கூறுகின்றனர்.

    சொற்களின் ஒலியமைப்பிலும் இடத்திற்கு இடம் வேறுபாடு காணப்படுகிறது. ‘சாமான்’ (things) என்ற சொல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஸகர ஒலியுடன் (‘s’) சாமான் என்று ஒலிக்கப்பட, தென்பகுதியில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஜகர ஒலியுடன் (‘j’) ஜாமான் என ஒலிக்கப்படுகிறது. இவ்வாறு ஒலிக்கப்படும் சொல்லும் கிளைமொழியே ஆகும்.

    இலக்கண அமைப்பிலும் வேறுபாடு காணப்படுகிறது. அண்ணன் வந்தான், அக்காள் வந்தாள் என்று எழுவாய் பயனிலை இயைபாகிய திணை, பால் இயைபோடு கூறவேண்டிய தொடர்களை, சமுதாயத்தில் ஒரு சில பிரிவினர் அண்ணன் வந்திச்சி, அக்கா வந்திச்சி என்று திணை, பால் இயைபில்லாமல் கூறுகின்றனர். வந்தான் என்ற ஆண்பால் சொல்லையும், வந்தாள் என்ற பெண்பால் சொல்லையும் வந்திச்சி (வந்தது) என்ற அஃறிணை ஒருமைப்பால் சொல்லால் கூறுவது இலக்கண அமைப்பில் வேறுபாடு ஆகும். எனவே வந்திச்சி என்பது கிளைமொழி எனப்படுகிறது.