6.5 தற்காலத்தில் கிளைமொழிகள் தற்காலத்தில் தமிழ்நாட்டில் பேசப்படும் கிளைமொழிகளை மொழிநூலார், ‘வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி, பார்வைக் கிளைமொழி, பொதுக் கிளைமொழி’ என்றாற் போலப் பலவாறு பாகுபடுத்துகின்றனர். இவற்றுள் குறிப்பிடத்தக்கவை வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி ஆகியனவாகும். இவற்றைப் பற்றி மொழியியலார் கூறுவனவற்றை இங்கே காண்போம். தமிழ்நாட்டில் வழங்கும் கிளைமொழிகளை அவை வழங்கும் வட்டாரத்தை அல்லது இடத்தை வைத்து மொழியியலார் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அவை வருமாறு: 1. வடக்குக் கிளைமொழி இக்கிளைமொழிகள் தமிழ்நாட்டில் வழங்கும் இடங்கள் பற்றியும், இவற்றின் ஒலியமைப்பு, இலக்கண அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் மொழியியலார் குறிப்பிடும் கருத்துகளைக் காண்போம். சென்னை,
செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு முதலான
வடமாவட்டங்களில் வழங்கும் கிளைமொழியை வடக்குக்
கிளைமொழி என்பர். ஒலியமைப்பில் மாற்றங்கள் வடக்குக் கிளைமொழியில் ழகரம், யகரமாகவும் ளகரமாகவும் ஸகரமாகவும் மாறி வழங்குகிறது. கழுதை > கய்தை இலக்கண அமைப்பில் மாற்றங்கள் i) நிகழ்கால இடைநிலையாகிய ‘கிறு’ இல்லாமல் வினைமுற்று வழங்குகிறது. இருக்கிறது > கீது ii) ‘விட்டால்’ என்ற உருபு வரவேண்டிய இடத்தில் ‘காட்டி’ என்ற உருபு வருகிறது. இல்லாவிட்டால் > இல்லாங்காட்டி iii) ‘ஆக’ என்ற உருபு வருமிடத்தில் ‘கோசரம்’ என்பது வருகிறது. எனக்காக > எனக்கோசரம் iv) ஏழாம் வேற்றுமைப் பொருளைக் குறிக்க ‘ஆண்டெ’ என்ற உருபு பயன்படுத்தப்படுகிறது. என்னிடம் > என்னாண்டெ சொற்கள் இலவசம்
என்பதைக் ‘கொசுரு’ என்றும், பணம் என்பதைத் ‘துட்டு’ என்றும், சின்னம்மா என்பதைத்
‘தொத்தா’ என்றும், அப்பா என்பதை ‘நயினா’ என்றும், கொஞ்சம் என்பதை ‘ரவ்வுண்டு’
என்றும் இக்கிளைமொழியில் வழங்குவர். தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற கிழக்கு மாவட்டங்களில் வழங்கும் கிளைமொழியைக் கிழக்குக் கிளைமொழி என்பர். ஒலியமைப்பில் மாற்றங்கள் i) ககரம் வகரமாக மாறுகிறது போக > போவ ii) பகரம் வகரமாக மாறுகிறது கோபம் > கோவம் இலக்கண அமைப்பில் மாற்றங்கள் ‘வொ’ என்னும் விகுதி உயர்திணை ஒருமையையும், அஃறிணை ஒருமையையும் பன்மைப்படுத்த வருகிறது. அவனுவொ வந்தானுவொ (அவன்கள் வந்தான்கள்) சொற்கள் திருநாள்
என்பது ‘திருணா’ என்றும், எண்பது என்பது ‘எம்பளது’ என்றும், பதநீர் என்பது
‘பழணி’ என்றும் வழங்குகின்றன. இக்கிளைமொழியில் சிறிய மூட்டையைச் ‘சிப்பம்’
என்றும், குரல்வளையை ‘ஊட்டி’ என்றும் கூறுகின்றனர். கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி முதலான மேற்கு மாவட்டங்களில் பேசப்படும் கிளைமொழியை மேற்குக் கிளைமொழி என்பர். ஒலியமைப்பில் மாற்றங்கள் i) சகரம் ஸகரமாதல் சாப்பாடு
> ஸாப்பாடு ii) ஜகரம் ஸகரமாதல் ராஜா
> ராஸா இலக்கண அமைப்பில் மாற்றங்கள் i) மேற்குக் கிளைமொழி கொங்குநாட்டுத் தமிழ் எனப்படும். இதில் ‘ங்க’ என்ற பன்மை விகுதி, வினைமுற்றுகளில் உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது. வந்துடுங்கோ ii) ‘விடு’ என்ற துணைவினைக்குப் பதிலாக, ‘போடு’ என்ற துணைவினை வருகிறது. சொல்லிவிடு > சொல்லிப்போடு சொற்கள் தலைப்பாகை
என்பதை ‘உருமாலை’ என்றும், ஒரு வேளை உணவு என்பதை ‘ஒரு சந்தி’ என்றும், தலையணை
என்பதைத் ‘தலை மூட்டை’ என்றும், சமையலறை என்பதை ‘அட்டாவி’ என்றும், ஓணான்
என்பதை ‘ஒதெக்காண்’ என்றும் கூறுவர். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி முதலான தென்மாவட்டங்களில் வழங்கும் கிளைமொழி தெற்குக் கிளைமொழி எனப்படும். ஒலியமைப்பில் மாற்றங்கள் i) ழகரம் ளகரமாகவே ஒலிக்கப்படுகிறது. வாழைப் பழம் > வாளப் பளம். ii) சகரம் யகரமாக மாறுகிறது ஊசி > ஊயி iii) சில சொற்களில் மொழிமுதலில் வரும் சகரம் ஜகரமாக மாறுகிறது. சாமான் > ஜாமான் இலக்கண அமைப்பில் மாற்றங்கள் i) ‘மார்’, ‘ஆக்கமார்’ என்னும் பன்மை விகுதிகள் கன்னியாகுமரித் தமிழில் காணப்படுகின்றன. அக்காமார் ii)
‘அவனை அங்கே பார்த்தான்’ என்னும் தொடரைத் திருநெல்வேலி மாவட்டத்தில் ‘அவனை
அங்ஙனே வச்சிப் (வைத்துப்) பார்த்தான்’ என்பர். அரைஞாண் என்பதை ‘அர்ணாக் கொடி’ என்றும், கறி என்பதை ‘வெஞ்சனம்’ என்றும், ஒன்றும் தெரியாதவனை ‘அப்ராணி’ என்றும் இங்கே, அங்கே, எங்கே என்பனவற்றை முறையே ‘இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு’ என்றும், இடையில் அல்லது நடுவில் என்பதை ‘வூடாலே’ என்றும் இக்கிளைமொழியில் கூறுவர். இதுகாறும் வட்டாரக் கிளைமொழிகளைப் பற்றிப் பார்த்தோம். இனிச் சமூக கிளைமொழிகளைப் பற்றிப் பார்ப்போம். இந்தியச்
சமூகம், சாதி அடிப்படையில் அமைந்தது ஆகும். சமூக அமைப்பில் பிராமணர்கள் உயர்ந்தோராகவும்,
தலித்துகள் தாழ்ந்தோராகவும் கருதப்பட்டனர். சமூக உயர்வு தாழ்வுக்கு ஏற்பப்
பேச்சுமொழி வேறுபடலாயிற்று. பிராமணர்கள் பல்லாண்டு காலமாக அக்கிரகாரம் போன்ற
இடங்களில் தனித்து வாழ்ந்தனர். அது போலத் தலித்துகளும் மற்றவர்களினின்று
தனித்துச் சேரிகளில் வாழுகின்றனர். அதனால் அவர்களது பேச்சில் அதிக வேறுபாடு
காணப்படுகிறது. தமிழில் சமூகக் கிளைமொழிகளை ஆராய்வோர் மற்றச் சமூகத்தினரைக்
காட்டிலும் பிராமணர், தலித்துகள் ஆகிய இரு சமூகத்தவரின் பேச்சுமொழியையே அதிகம்
ஆராய்கின்றனர். பிராமணர்கள் வடமொழியையும் ஆங்கிலத்தையும் கற்ற இரு மொழியாளர்களாக விளங்குகின்றனர். கோயில்களில் நேரிடையாகப் பெரும்பங்கு வகித்ததால் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் குமரி முதல் சென்னை வரை எந்த வட்டாரத்தில் வாழ்ந்தாலும், இவர்களது பேச்சு வழக்கினில் எந்த வேறுபாடும் காணப்படுவது இல்லை. ஆனால் இவர்களது பேச்சுத்தமிழ் மற்றவர்களது பேச்சுத்தமிழினின்று வேறுபடுகிறது. வடமொழியில் உள்ள ஸ், ஜ், ஹ் போன்ற ஒலிகள் இவர்களது பேச்சுவழக்கில் காணப்படுகின்றன. மெய் ஒலிகள் தமிழில் மொழி முதல் வாரா. ஆனால் இவர்களது பேச்சு வழக்கில் சில நேரங்களில் மொழி முதலில் வரவும் செய்கின்றன: மூவிடப் பெயர்களில் தன்மை ஒருமை இடப்பெயராகிய நான் என்பதும், முன்னிலை ஒருமை இடப்பெயராகிய நீ என்பதும், நான்காம் வேற்றுமைக்கு உரிய கு உருபை ஏற்கும்போது மற்றவர்கள் பேச்சுவழக்கில் எனக்கு, ஒனக்கு (உனக்கு) என மாறும். ஆனால் இவர்களுடைய பேச்சுவழக்கிலோ இவை முறையே னேக்கு, னோக்கு என வேறுவிதமாக மாற்றம் அடைகின்றன. படர்க்கைப் பெயர்கள் எழுவாய் வடிவங்களாக இருக்கும்போது மாற்றம் அடைகின்றன. அவன் - ஆண்பால் ஒருமை மற்றவர்கள் பேச்சில் முன்னிலையில் உள்ளவரை வினவும் போது, எப்போ வந்தீர்கள் அல்லது எப்போ வந்தீங்க என வினவுவர். இவர்கள் பேச்சில் அவ்வாறு வினவுவது எப்போ வந்தேள் என மாறி அமைவதைக் காணலாம். மேலும் இவர்களது பேச்சுவழக்கில் கீழ்க்கண்ட அருஞ்சொற்கள் காணப்படுகின்றன. ஆம்படையான் (கணவன்) இந்து
சமயச் சாதி அடிப்படைக் கோட்பாட்டின்படி தலித்துகள் மிகவும் பின்தங்கியுள்ள
நிலையில் உள்ளனர். தனியாக வாழ்தல், மற்றவர்கள் இவர்கள் மீது கொண்டுள்ள சமுதாய
நோக்கு முதலியவற்றால் பல்லாண்டு காலமாக இவர்கள் தனித்து வாழ்கின்றனர். நாடு
விடுதலை அடைந்த பின்னர் இவர்களது கல்வி, சமூக, பொருளாதாரத் துறையில் ஓரளவு
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இவர்களது பேச்சுத்தமிழ் மற்றவர்களின்
பேச்சுத்தமிழினின்று வேறுபட்டுக் காணப்படுகிறது. i) உகரம் இகரமாக மாறுகிறது. முக்கியம் > மிக்கியம் ii) ழகரம் ளகரமாக மாறுகிறது. குமிழ் > கும்ளு iii) இடையில் வரும் பகரம் வகரமாக மாறுகிறது. சாபம் > சாவம் iv) இடையில் வரும் ‘க’ என்பது ‘கா’ என மாறுகிறது. தங்கச்சி > தங்காச்சி ஏந்த்ரொம் (திரிகை) தற்காலத் தமிழில் உள்ள கிளைமொழிகளைச் சமூகநிலை அடிப்படையில் காணும்போது, பிராமணர், தலித்துகள் ஆகிய இரு சமூகப் பிரிவினரின் கிளைமொழிகளைப் பற்றி மட்டுமே மேலே காண்போம். மொழியியலார் பிராமணர், தலித்துகள் மட்டுமன்றி வேறுபல சாதிப் பிரிவினரின் கிளைமொழிகளின் அமைப்பையும் ஆராய்ந்து காண்கின்றனர். மேலும் செய்கின்ற தொழில் அடிப்படையிலும் கிளைமொழிகளை ஆராய்கின்றனர். சான்றாக மீன்பிடித்தலைத் தொழிலாக உடைய மீனவர் பேச்சுமொழி பற்றி மொழியியலார் ஆராய்ந்து விளக்கியுள்ளனர். இது போலக் கிளைமொழிகள் பற்றிய பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்துள்ளன; நடந்து வருகின்றன. |