1.2
ஐந்திணைகளும் குடியிருப்புகளும்
|
மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் மூன்று அவை,
உணவு,
உறையுள் (தங்கும் இடம்), உடை. பறவைகள் கூடுகட்டி
வாழ்வதையும், விலங்குகள் தாம் தங்குவதற்கு ஏற்றவகையில் குகை
முதலியவற்றை நாடி வாழ்வதையும் பார்த்த மனிதன் தானும்
தங்குவதற்கு உரிய இடம் குறித்து எண்ணத் தொடங்கினான். அதன்
விளைவே அவன் தங்குவதற்கு உரிய இடம் உருப்பெற்றது.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில்
ஐந்திணைப்
பகுதிகளிலும் மக்கள் எவ்வாறு தம் குடியிருப்புகளை அமைத்துக்
கொண்டார்கள் என்பதைக் காண்போம்.
1.2.1
முல்லைநிலக் குடியிருப்பு
காடும் காடு சார்ந்த நிலமும் முல்லைத்
திணையாகும்;
அப்பகுதிகளில் வாழும் மக்கள், காட்டு விலங்குகளுக்கு அஞ்சி
மரங்களில் பரண்கள் கட்டி வாழத் தொடங்கினர். பிறகு, அடர்ந்த
காட்டுப் பகுதிகளில் கிடைக்கும் மரக் கிளைகளையோ
மூங்கிலையோ நட்டும், வலுவான மரக் கம்புகளையும்,
இலைகளையும் பரப்பியும் குடிசை அமைத்தனர் ; கம்புகளாலான
தட்டியைக் குடிசைக்கு வாசலாக அமைத்துக் கொண்டனர்.
கூரையுடன் கூடிய குடிசையை அமைத்துக் கொண்டு வாழ்க்கையைத்
தொடங்கிய அவர்கள், தம் குடிசைக்கு முன்புள்ள முற்றத்தில், தாம்
வளர்க்கும் ஆடு மாடுகளுக்கும் கொட்டகை கட்டி அவை தங்க
வழி செய்தனர். பின்னர் செங்கற் சுவரெழுப்பிக் கூரை அமைத்து,
கட்டடம் என்ற ஒருவகை அமைப்பை உண்டாக்கிக் கொண்டனர்.
1.2.2
குறிஞ்சிநிலக் குடியிருப்பு
மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியும் குறிஞ்சித்
திணையாகும்.
குறிஞ்சி வாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தவர்கள்.
தொடக்கக் காலத்தில் குகைவாழ் மக்களாக இருந்தவர்கள். தினை,
வரகு முதலிய பயிர்களைப் பயிரிட்ட பொழுது தினைப்புனக்
காவலுக்குப் பரண் (நான்கு குச்சிகளைக் கொண்டு உயரமாகக்
கட்டப்படும் இடம்) கட்டுவதுபோலத் தம் குடிசைகளையும் பரண்
அமைப்பில் கட்டிக் கொண்டனர். அடுத்தகட்ட வளர்ச்சியாக
மலைப்பாங்கான பகுதிகளில் கூம்புடன் கூடிய வட்டத்
தரையமைப்பில் குடிசை கட்டி வாழலாயினர். தாம் வாழும்
குடிசைக்காகப் பாறைக் கற்களையும் மூங்கிற்கம்புகளையும்,
தினைத்தாள் -வரகுத்தாள்களையும் கூரைவேயப் பயன்படுத்திக்
கொண்டனர்.
1.2.3
மருதநிலக் குடியிருப்பு
வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியும் மருதத்
திணையாகும்.
நெல், கரும்பு முதலியவற்றைப் பயிர் செய்யும் உழவர்கள் வாழும்
மருத நிலத்தில் நீர்வளம் மிகுதியாகக் காணப்படும். களிமண்ணால்
சுவர் எழுப்பி், தென்னை ஓலைகளால் கூரைவேய்ந்து வாழத்
தொடங்கினர். பின்னர் செங்கல்லால் வீடு கட்டியும், கம்புகளைக்
கொண்டும் புல், வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டும் கூரை
அமைத்தும் வாழலாயினர் ; வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும்
வகையில் தூண்கள், முற்றம், தாழ்வாரம் முதலிய உட்பிரிவுகளும்
கட்டப்பட்டன. தானியங்களைச் சேமித்து வைக்கக் குதிர்களைக்
கட்டினர்.
1.2.4
நெய்தல்நிலக் குடியிருப்பு
கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியும் நெய்தல்
திணையாகும்.
மீன் பிடித்தும், மீன் வற்றல் (கருவாடு) விற்றும் வாழ்க்கையை
நடத்திய மக்களைப் பரதவர்கள் என்பர். பனை அல்லது தென்னை
மர வாரைகளை நட்டுப் பனைமடலாலோ தென்னங்கீற்றாலோ கூரை
போட்டு, குட்டையான குடிசைகளில் வாழ்க்கையை நடத்தினர்.
பின்னர் வசதியான வீடுகளைக் கட்டிக் கொள்ள முயன்றுள்ளனர்.
1.2.5
பாலைநிலக் குடியிருப்பு
பசுமையே தலைகாட்டாத வெம்மையான மணல் சார்ந்த
இடம்
பாலைத்திணையாகும். வறண்ட நிலத்தில் நிலையான
குடியிருப்புகளில் வாழ விரும்பவில்லை. வழிப்பறி செய்து
வாழ்க்கையை நடத்தும் அவர்கள் பெரும்பாலும் கூடாரம்
அமைத்துக் கொண்டு, பல இடங்களுக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தனர்.
|