1.3 நகர அமைப்பும், அதன் வகைகளும்

 

    ஓர் ஊரோ நகரமோ அமைய வேண்டுமெனின், அதற்கேற்பப் பல வீடுகளோ கட்டடங்களோ இருத்தல் வேண்டும். வெட்ட வெளியாக இருக்கும் மைதானமோ, புதரும் காடுமாக மண்டிக் கிடக்கும் இடமோ, சமப்படுத்தப்பட்டுத் திருத்தஞ் செய்த நிலையில் பல வீடுகளோ, கட்டடங்களோ கட்டப்பட்டால், ஊராகவோ நகரமாகவோ ஆகிவிடுவதை இன்றும் காணலாம்.

  • பெயர்கள்

    ஊர்களைப் பாகுபடுத்தும் பொழுது நகரம்,பட்டணம் முதலியபத்துவகைப் பெயர்கள் கூறுவர்.

(1) சிற்றூர்

    சிறிய ஊர். சில குடிசைகளையோ, வீடுகளையோ கொண்டது. வசதிகள் குறைவான இடம்.

(2) நகரம்

    பல்வேறு தொழிற் சாலைகளும் அரசாங்க நிருவாக மாவட்டத் தலைமை அலுவலகங்களும், கலைக் கூடங்களும், காவல் நிலையங்களும் கூடிய மாவட்டத் தலைநகரமாகும்.

(3) பட்டினம்

    ஆறுகள், கடல்துறைமுகங்கள், வணிகத் தலைமை நிலையங்கள், கருவூலங்கள், ஆபரணத் தொழிற் கூடங்கள், நெசவுச் சாலைகள், அயல்நாட்டு வணிகர் தங்குமிடங்கள், மாவட்டத் தலைமை அதிகாரிகள் தங்குமிடங்களுடன் கூடிய நகரைக் குறிக்கும்.

(4) படைவீடு (பாசறை)

    நாட்டுப் பாதுகாப்பிற்காக எப்போதும் போர் வீரர்களைச் சேர்த்துச் சித்தப்படுத்துவதற்கும், போர்முகத்தில் சுற்றுப் புறங்களி்ல் அவர்களைத் தங்க வைப்பதற்கும் உரிய இடமாகும்.

(5) தலைநகரம்

    அரசருடைய மாளிகை, மற்றும் அமைச்சர்கள், முதன்மையலுவலர்கள், படைவீரர்கள், பாதுகாப்புள்ள கோட்டை கொத்தளங்களுடன் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட அந்தணர், அரசர், வணிகர், வளோளர்கள் வாழுமிடம்.

    நாட்டின் பாதுகாப்பிற்காக நான்கு பக்கங்களிலும் கோட்டைகள், பொறிகள், இயந்திரங்கள், போர்ப்படைக் கருவிகளைத் தயாரிக்கும் சாலைகள், போர் வீரர்கள் பயிற்சி பெறுமிடங்கள் முதலியவற்றையுடைய தலைநகரை அடுத்துள்ள இடம்.

1.3.1 மதுரைப் பெருநகர் - அமைப்பு

    வளங்கள் நிறைந்த பாண்டிய நாட்டுக்கு நடுவே அதன் தலைநகர் மதுரையுள்ளது.

    மதுரை நகரின் நீர்வளத்தைப் பாண்டியன் மேம்படுத்தி, நீர்ப்பாசனத்திற்கேற்ப, மலை, காடுகள் வழியே நீர்க்கால்களை உண்டாக்கினான்; வையை எனும் ஆற்றைச் செம்மைப்படுத்தி நாட்டு வளத்தை மேம்படுத்தினான்.

  • மதுரைக் காஞ்சி தரும் செய்தி

  •     மதுரை நகர்ப்புறத்தே வையை ஆற்றுத்துறைகளின் பூந்தோட்டங்களின் நடுவே பாணர் சேரிகள் அமைந்திருந்தன. மதுரை நகரைச் சுற்றிக்கிடந்த அகழி பாதுகாப்பிற்காகத் தோண்டப்பட்டது. அந்தப் பேரகழியை மதுரைக் காஞ்சி,

    மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு

    என வருணித்துள்ளது.

        மதுரை நகர வாயிலைக் கடந்தால், நகர்க்குள் மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை முதலியவற்றைக் கொண்ட பெரிய வீடுகள் யாவும் சிற்பவிதிப்படி கட்டப்பட்டு, உயரமாய் உள்ளன. இத்தகைய மாளிகை போன்ற பேரில்லங்களை வரிசையாக இருபுறமும் கொண்ட தெருக்கள் விசாலமாக உள்ளன; ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடுந்தெருக்களும், பல பண்டங்கள் பெருமளவில் விற்கும் கடைத் தெருக்களும் மதுரைக்குப் பெருமை சேர்த்தன. இவ்வாறு மதுரையில் கட்டடக் கலை எந்த அளவிற்குத் தரம் உயர்ந்து நின்றது என்பதை அறியலாம்.

  • பரிபாடல் தரும் செய்தி

  •     சங்க காலத்தையொட்டிய காலப்பகுதியில் மதுரை மாநகர் பரிணாம வளர்ச்சி மிகப் பெற்றுள்ளது என்பதை இலக்கியங்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். மதுரை, திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் தோற்றப் பொலிவை அறிவதற்குப் பரிபாடல் பெரிதும் துணை நிற்கும்.

        உலகளாவிய நாகரிகங்கள் ஆற்றங்கரையையொட்டியே அமைந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே. வையைக்கரை நாகரிகத்தின் பொலிவு மதுரை மாநகரில் காணப்படும்.

        வையையாற்றங்கரையில் அமைந்துள்ள மதுரையையும் கோயிலையும் இணைத்து வருணிக்கையில், திருமாலின் உந்தித் தாமரை மலரைப் போல உள்ளது மதுரை; அந்தத் தாமரையின் இதழ்களைப் போலத் தெருக்கள் அழகுற அமைந்துள்ளன; அந்த மலரிதழ்களின் நடுவேயுள்ள பொகுட்டைப் போன்று மதுரையின் நடுவில் மதுரைச் சொக்கநாதர் கோயில் அழகுறக் காணப்படுகிறது; மலரின் கண் உள்ள மகரந்தத் தூள்களைப் போலத் தமிழ்க் குடிமக்கள் இல்லங்களில் வாழ்கின்றனர்; தாமரைத் தாதுக்களை உண்ணும் வண்டுகளைப் போல இரவலர் கூட்டமும் உளது; அஃதாவது, நலமும் வளமும் நாடி இரவலர் வருகின்றனர். நான்முகன் படைத்த வேதவொலி கேட்டு அவ்வூரில் நாளும் துயில் எழுகின்றனர். இவ்வாறு பரிபாடல் மதுரையைச் சிறப்பித்துக் கூறுகின்றது.

        இவ்வளவு சிறப்பிற்கும் அடிப்படைக் காரணம், பல படிநிலைகளில் அமைந்த கட்டடக்கலை என்பது தெரிய வரும்.

    1.3.2 புகார்நகர் - அமைப்பு

        சோழ நாட்டின் தலைநகராகிய புகார் நகரத்தைப் பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

  • பட்டினப்பாலை தரும் செய்தி

  •     நாட்டு வளத்தைப் பொறுத்தே வளமனைகளும், பிறதொழிலகங்களும் அமைவது நியதி. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் பல்வகைக் கட்டடக் கூறுகளைப் புலப்படுத்திக் காட்டுகிறார்.

        காவிரிப் பூம்பட்டினத்தில் கரும்புச் சாறு பிழியப் பெற்றுக் காய்ச்சப்படும் சர்க்கரை ஆலைகள் உள்ளன.

        பெரிய வீடுகளின் அகன்ற முற்றத்தில் காயவைக்கப் பரப்பியுள்ள நெல்லைத் தின்பதற்கு வரும் கோழிகளை, அழகிய மகளிர் தம் காதிலணிந்துள்ள பொற்குழைகளைக் கழற்றி (அவற்றை) விரட்டுகின்றனர்.

        நெய்தல் நிலப்பகுதியான பூம்புகாரில் உப்பு வணிகர்கள் வண்டியில் உப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்று மருதநிலப் பகுதியில் விற்றுவிட்டு நெல்லுடன் திரும்புகின்றனர். பெரிய பொய்கையேயல்லாமல் சோமகுண்டம், சூரியகுண்டம் எனப்பெயரிய நீர்நிலைகளும்உள்ளன.

         புலி முத்திரை பொறிக்கப்பட்ட கதவுடைய மதிலைக் கொண்ட அழகிய சமையற் கூடம் உள்ளது; அது பசித்தோரின் பசிதீர்க்கும் அறச்சாலையாக விளங்குகிறது. கேணியும் முற்றமும் கொண்ட தொழுவத்தில் பெரிய காளைகள் கட்டப்பட்டுள்ளன.

        சமண பௌத்தர்கள் தங்கும் பள்ளிகளும், சைவத்துறவியர் தங்கும் பொழில்களும் உள்ளன. பூதம் காக்கின்ற சூழலில் காளிகோயிலும் அங்கு உண்டு. இஃது ஒரு புறமிருக்க இளைஞர்கள் போர்ப்பயிற்சி புரியும் இடங்களும் உள்ளன. பரதவர் வாழும் குடிசைகளின் முற்றங்களில் மீன் வலைகளை உலர்த்தியுள்ளனர்.

        இரவு வேளையிலும் வேந்தனுக்குரிய சுங்கப் பொருள் காக்கும் அலுலர்கள், அளந்தறியா ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களைக் கொண்ட பொதி மூட்டைகளுக்குப் புலி முத்திரையிட்டுச் சுங்கச் சாவடி முற்றத்தில் திரட்டி வைப்பர்.

        ஆவணத் தெருவிலே படிக்கால் (stairs), திண்ணை, இடை கழி முதலியவை அமைந்த மாடங்களில் இளநங்கையர் பலகணி வாயிலாகக் காணும்படி வேலன் வெறியாட்டு நடைபெறும்.

        கோயில்களிலும், கடைகளிலும், பட்டிமன்றங்களிலும், புகார்த்துறையில் நங்கூரமிட்டுநிற்கும் மரக்கலங்களிலும், மதுக்கடைகளிலும் பல்வகைக் கொடிகள் பறக்கின்றன. இவ்வாறு பட்டினப்பாலை புகார் நகரக் கட்டடக் கூறுகளைக் காட்டுகின்றது.

    1.3.3 காஞ்சி மாநகர்

        காஞ்சிபுரம் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், பல்லவர் காலத்திலுமாகப் பல காலகட்டங்களில் படிப்படியே வளர்ச்சி பெற்ற மிகச் சிறந்த நகராகும்.

        இது, பல்லவர் குலமுதல்வர்களாகிய தொண்டைமான்களின் ஆட்சியில் தலைநகராகிய பெருமை கொண்டது. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலால், காஞ்சியின் இயற்கை வளமும் நகர அமைப்பும் ஓரளவு தெரிய வரும்.

        உலகிலுள்ள நகரங்கள் எல்லாவற்றிலும் சிறந்து நிற்பது காஞ்சி மாநகராகும்; இப்பெருநகரைச் சுற்றிலும் செங்கல்லால் அமைந்த மதிலும், அதனைச் சார்ந்து படைவீரர்கள் தங்கியிருக்கும் படை வீடுகளும் இருந்தன என்பதைப் பெரும்பாணாற்றுப்படையால் தெரிந்து கொள்ளலாம்.

        தேர்கள் ஓடும் பெரிய தெருக்கள் இருந்தன என்பதையும், பல வகையான பண்டங்களை விற்கவும் வாங்கவும் பெரிய கடைகள் இருந்தன என்பதையும், குடிமக்கள் நெருக்கமாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்ந்தனர் என்பதையும், இந்தக் கச்சிமாநகரில் திருவெஃகா என்ற வைணவத்தலம் உள்ளது என்பதையும் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    கட்டடம், கட்டிடம் ஆகியவற்றுக்குள்ள வேறுபாடு என்ன?
    2.
    குறிஞ்சி நிலம் என்றால் என்ன?
    3.

    கட்டடக் கலைக்குத் தேவையான மூன்று சிறப்புக் கூறுபாடுகள் எவை?
    4.
    பரிபாடலில் மதுரை எவ்வாறு உவமிக்கப்படுகிறது?