1.5 மூவேந்தர்களும் கோட்டையும்

    மூவேந்தர்களைப் பொறுத்த வரையில், தம் அரண்மனைக்கும் மக்களுக்கும் தக்க பாதுகாப்பளிக்கும் நோக்கத்தில் ஞாயில்களுடன் கோட்டையையும் மதில்களையும் எடுப்பித்தனர். (ஞாயில் = படைக்கலங்களைச் சேமித்து வைப்பதற்கும், பகைவர் மீது செலுத்துவதற்குமான இடம்.)

    பொதுவாக மக்களைக் காப்பதற்காக முற்கால அரசர்கள் ஊர்களையும் நகரங்களையும் சுற்றிக் கோட்டைகளை கட்டியிருந்தனர் என்பதை வரலாறு கூறும்.

    சில குறுநில மன்னர்களுக்கு, மலைகளும் அடர்த்தியான காடுகளும் நிறைந்த பகுதிகளே பாதுகாப்பான கோட்டைபோல விளங்கின. இத்தகைய துர்க்சத்திற்கு எடுத்துக் காட்டாக வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையைக் கூறலாம்.

    நகரின் அமைப்பில் அகநகர், புறநகர் என இருவகைப் பாகுபாடுகள் இருந்தன. அந்நகரில் மிகத் தேவையான கருவூலங்களும் படைக்கலக் கொட்டில்களும் அமைந்திருக்கும். புறநகரில் பல்வகைப் போர் வீரர்களும் பல்வகைத் தொழில் புரிவோர்களும் நம்பிக்கைக்குரிய நன்மக்களும் தங்கியிருப்பர். இவ்வாறு அமைந்துள்ள தலைநகரைச் சுற்றிலும் போர்த்திறம் மிக்க வீரர்கள் அருகிருக்கும் வகையில் உயரமான பெரிய மதிற்சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும். இந்த மதிலையடுத்து வெளியே நீர் நிறைந்த ஆழமான அகழி அமைக்கப்பட்டிருக்கும். அந்த அகழியைப் பகைவர்கள் கடந்து உள்ளே வாராதவகையில் முதலைகள் அகழியில் விடப்பட்டிருக்கும்.

    கோட்டை அமைப்பை அகழிகள், அரண்கள், அரண்மனைகள், படைக்கலக் கொட்டில் முதலிய பல பகுதிகளாகப் பிரித்துக் காணலாம்.

1.5.1 அகழிகள்

    பொதுவாக மதிற்சுவரை அடுத்துச் சுமார் 60 அடிக்கு மேற்பட்ட ஆழமும், சில வேளைகளில் 100 அடிக்கு மேற்பட்ட அகலமுமுடைய அகழி ஊரைச் சுற்றிலுமே அமைத்த அரசர்களும் இருந்தனர். இவ்வாறான அகழிகளில் ஆறுகள், ஏரிகள், கடல்நீர் முதலியவற்றை இணைத்து, நீர் வற்றாமலிருக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

1.5.2 அரண்கள்

    நாட்டை ஆளும் மன்னர்கள், பகை மன்னர்களால் தம் நாட்டுக்குத் தீங்கு நேரா வண்ணம் பல உத்திகளைக் கையாண்டு பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியிருந்தனர். இயற்கை அரண்களாக மலைகளும் கடலும் ஆறும் அமைந்திடினும் செயற்கையாகவும் உயர்ந்த மதிலும் போதிய பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    பொதுவாகக் கோட்டை மதில் எப்படிப் பாதுகாப்பு அரணாக விளங்குதல் வேண்டுமென்பதைத் திருவள்ளுவர்,

உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கும்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
            (குறள். 743)

எனக் கூறிக்காட்டுகிறார். (உயரம், அகலம், திண்மை, அருமை உடையதாக அரண் அமையவேண்டும்.)

    கோட்டை மதிலரண் பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.

    பாண்டியன் உக்கிரப் பெருவழுதி புலவர் நாவினால் வரையறுக்க முடியாத பெரும்புகழ் படைத்த வீரமன்னவன். கானப்பேரெயில் கொண்ட வேங்கை மார்பன் ஆழமான அகழியையும் உயரமான கோட்டை மதிலையும் அம்பு எய்யும் அறைகளையும் அடர்த்தியான காவற்காடுகளையும் உடையவன். எனினும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் தோற்கடிக்கப்பட்டான். அவனது கானப் பேரெயிலை வென்று கையகப்படுத்திய காரணத்தால் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப் புலவர்களால் போற்றப்பட்டான்.

1.5.3 அரண்மனைகள்

    படையாற்றலும் கொடையாற்றலும் மிக்க வேந்தர்கள் தம் நாட்டினைப் பாதுகாப்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போர் நிமித்தம் பகைவர் நாட்டில் தன் படையுடன் தங்கியுள்ளான். அதே நேரத்தில் கோப்பெருந்தேவி மதுரை அரண்மனை உள் கோட்டையில் அவன் நினைவாகவே இருந்து வருகிறாள்.

    இத்தகைய சூழலில் அந்த அரண்மனையின் கட்டுக்கோப்பினை வருணித்துக் காட்டுகிறார் கணக்காயர் மகனார் நக்கீரர்.

  • கட்டடக் கலைக் கூறுகள்

  •     அரண்மனையைக் கட்டுவதற்கு முன், சிற்பநூல் விதிப்படி நண்பகலில் சித்திரைத் திங்களில் இரு கம்பு நட்டுச் சூரியன் நிழலால் திசையினைச் சரிவரக் குறித்துக் கொண்டு, திசை தெய்வங்களை வழிபட்டவாறு கட்டட வேலையைத் தொடங்கினர். மன்னர்க்கு ஏற்றவாறு மனைகளையும், அவற்றில் பாங்கான சுவர்களுடன் கூடிய வாயில்களையும், மண்டபங்கள் முதலியவற்றையும் வகுத்து அமைத்துள்ளனர். இவ்வாறான இடங்களையெல்லாம் ஒரு சேர வளைத்துப் பெரிய வலிவான மதிலையும் கட்டியுள்ளனர்.

        வலிமையுடைய மதிலி்ல் உள்ள நுழைவாயிலில் மரகதவுகள், ஆணிகள், பட்டங்கள் ஆகிய பருமனான இரும்பாலே கட்டிச் சாதிலிங்கம் வழித்துப் பூசப் பெற்றது. தாழ்ப்பாளுடன் அமைந்த சிறந்த இழு கதவுகளாக அமைந்தது. கைத்தொழில் வல்ல தச்சன் திறம்பட அமைத்த காரணத்தால், இடைவெளி இல்லாமல் பல மரங்களும் தம்மில் இறுகச் சேர்ந்த உத்தரக் கற்கவியிலே (மேலே கதவு நிலையின் மேலே இடப்பட்டிருக்கும் பாவு கல்) செருகிய நிலைகளை யுடையது. உத்தரக் கற்கவி, நடுவே இலட்சுமியின் திருவுருவம் அமைக்கப்பெற்றுள்ளது. நிலைகள் வெண்சிறு கடுகை அப்பி நெய் பூசப் பெற்றுள்ளன. மேலும், வெற்றிக் கொடிகளுடன் யானைகளுடன் வீரர்கள் நுழையும்படி, உயர்ந்த மலையை நடுவே வெளியாகக் குடைந்து திறந்தாற் போன்ற கோபுரத்தை யுடைய அகன்ற வாயில் உள்ளது. அத்தகைய மன்னர் மாளிகை வெண்மணற் பரப்புடைய முற்றத்தினையும் உடையது.

        அரண்மனையின் உள்ளே நிலாப்பயன் கொள்ளும் நிலாமுற்றம்; முற்றத்து நீர் வீழ்ந்து தொடும் வகையில் மீனின் திறந்த வாயைப் போன்ற தூம்பு (கால்வாய்) உள்ளது ;

        பாண்டிமாதேவியாகிய கோப்பெருந்தேவி தங்கும் உட்கோட்டையில் உள்ள அந்தப்புர மாளிகை, கட்டடக் கலை நேர்த்தி வாய்ந்தது. அங்கே யவனர்கள் செய்த பாவை விளக்குகளில் நெய் வார்த்து ஏற்றிய விளக்கு வெளிச்சம் மேல் நோக்கி எரிகின்றது. நிறைந்த பாதுகாப்புடன் கூடிய பல கட்டுகளுள்ள அந்தப்புரச் சுவர்கள் மலைகளைக் கண்டாற் போன்ற உயரமுடையவை, மலைகளைச் சேர்ந்து இந்திரவில் (வானவில்) கிடந்தாற் போலப் பல நிறக்கொடிகள் காணப்படுகின்றன ; வெண்மையாக விளங்கும் சாந்து பூசப் பெற்றுப் பொலிவுடன், செம்பினாலே செய்தாலொத்த வேலைப் பாட்டுடன் கூடிய தூண்கள் கருமையும் திரட்சியும் வலிமையும் உடையவை. இத்தகைய வடிவ அழகினையுடைய, கருப்பகிருகம் (உள்அறை) உள்ளது.

        இந்தச் செய்தி சங்க காலத்திலேயே மிகச் சிறந்த வேலைப்பாடு கொண்ட கட்டடங்களை அமைக்கும் கலை வல்லுநர்கள் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றது.

    1.5.4 படைக்கலக் கொட்டில்

        சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் அவர்கள் ஒற்றுமையுடன் உறவாடிய வாய்ப்பு மிகக் குறைவே. அவர்களுள் நாட்டை விரிவுபடுத்தும் எண்ணத்தில் போர்க்களம் புகுவதும், போரிட்டு வெற்றியோ தோல்வியோ அடைவதும் வரலாற்று ஏடுகளில் சொல்லப்பட்டு உள்ளன. போரிட, போர்க்குரிய வாள், வேல், வில், அம்பு முதலிய படைக்கருவிகளைத் தயாராக வைத்திருப்பர். இரும்பு செய் கொல்லர்க்குப் படைக்கருவிகள் செய்து தருவது அவர்களின் கடமையாக இருந்தது ; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே (312 : 3) எனப் புறநானூறு கூறுகிறது. படைக்கருவிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கட்டடமே ‘படைக்கலக் கொட்டில்’ ஆகும்.

        வள்ளல் அதியமான் சிறந்த போர்த்திறம் மிக்க மன்னன். ஒரு காலத்தில் அமைதியை நாடிப் புலவர் ஒளவையாரைத் தொண்டைமானிடம் தூது விட்டான் ; தொண்டைமான் ஒளவையாரிடம் தன் பெரிய படைக்கலக் கொட்டிலைக் காட்டிச் செருக்குடன் நின்றான். அவனது செருக்கையடக்கும் நோக்கத்தில் ஒளவையார், இங்கே படைக்கருவிகள் மயில் தோகை அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டுத் திரண்ட காம்பும் அழகுபட அமைத்து நெய் பூசப் பெற்றுக் காவலுடன் உள்ளன ; ஆனால், அதியமான படைக்கலங்களோ பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ் செய்யக் கொல்லன் உலைக்கூடத்தே கிடக்கின்றன. இதன் வழி அவன் வேல் கூர்மையானது எனக் குறிப்பிடுகிறார். (புறநானூறு : 95)

        இங்குக் கூறப்பட்ட படைக்கலக் கொட்டிலும், கொல்லன் உலைக் கூடமும் கட்டடக் கலை நோக்கில் சிந்திக்கத்தகும்.