1.7 நீர்ப்பாசனமும் கட்டடக் கலையும்

    நீரின் சிறப்பினை நன்குணர்ந்த மன்னர்கள் அக்காலத்திலேயே நீர் ஆதாரங்கள் பெருக்கும் வகையில் திட்டமிட்டுச் செயற்படுத்தினர்.

    பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் புறநானூற்றில் பாடிய பாடல் நீர் ஆதாரங்களைக் குறித்துக் கூறுவதாகும். (புறம்-95) அது, நீரை இன்றியமையாத உடம் பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்களாவர் ; உணவால் உளதாகியதே உடம்பு. ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தொடு கூடிய நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினரேல் அவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர் (படைப்புக் கடவுளேயாவர்). நெல் முதலியவற்றை விதைத்து மழை நீரைப் பார்த்திருக்கும் புன் செய் நிலம் (வானம் பார்த்த பூமி) இடமகன்ற பெரிய நிலத்தை உடையதாயினும் மன்னனது முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால், பாண்டியனே ! விரைந்து நிலம் பள்ளமாக உள்ள இடத்தில் நீர் நிலை மிகுமாறு நீரைத் தடுத்துச் சேமித்து வைத்தல் நல்லது. அவ்வாறு செய்தவரே நிலைத்த புகழைக் கொண்டவர் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    இவ்வாறு நீர் ஆதாரத்தைத் தேடும் கடமையுடையவன் மன்னன் என்பதைப் பட்டினப்பாலை, குளந்தொட்டு வளம்பெருக்கி (284) என்று குறிப்பிடுகிறது. குளம் தொட்டு என்ற குறிப்பால் குளம் தோண்டப்படுவதால் உண்டாவது என்பது புலப்படும்.

1.7.1 கல்லணையும் தொழில் நுட்பமும்

    தமிழகத்தில் மாமன்னர்கள் நீ்ர்ப் பாசனத்திற்காக வெட்டிய ஏரிகளும் குளங்களும் பலவாக இருந்தன. மேலும் நீரைச் சேமித்துப் பயன்படுத்த தொழில் நுட்பம் மிகுந்த அணைகளையும் கட்டினர்.

    நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரையில், திருச்சிக்கு அருகிலுள்ள ‘கல்லணை’, ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாற்சோழனால் அமைக்கப் பெற்றது என்பது வரலாறு.

    தொழில் வல்லுநர்களால் கையாளப்பட்ட பொறியியல் தொழில் நுட்பம் இன்றும் வியந்து பாராட்டுதற்குரியதாக உள்ளது. இதுபற்றி டாக்டர்.வா.செ.குழந்தைசாமி ஆராய்ந்து எழுதுகையில், “இவ்வணை, மணல்தளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட கட்டடம். நீர்த்தேக்கங்கள் அமைப்பதில், மணல்தளத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டடங்கள் எழுப்புவது ஒரு தனிக் கலையாகும்; சற்றுக் கடினமான கலையுங்கூட, அணைக்கட்டு எழுப்பிய பின்னுங்கூட, அதன் அடியிலிருக்கும் மணல் தளத்தின் வழியாகத் தண்ணீர் துருவிச் செல்வது தொடர்ந்து இருந்துவரும். இப்படிப்பட்ட கட்டமைப்புகளை, கசியும் அடித்தளத்தில் அமைந்த கட்டடங்கள் (Structures on Previous Foundations) என்று கூறுவார்கள். அணையின்மேல் வழிந்து செல்லும் நீர், அதன் கீழ்க்கசிந்து செல்லும் நீர் இரண்டாலும் பாதிக்கப்படாத வகையில் இது போன்ற அணைகள் அமைய வேண்டும். இன்றைய வளர்ச்சி நிலையில் கூட அவை சிக்கல் நிறைந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கல்லணை போன்ற ஒரு சாதனத்தை எழுப்பிய சமுதாயத்தில், சில அடிப்படைப் பொறியியல் முறைகள் இருந்திருக்க வேண்டும். அவற்றை அறிவதற்கான ஏடுகள் தமிழில் இல்லை; அல்லது இதுவரை கிடைக்கவில்லை,” என்று குறிப்பிடுகிறார்.

    பொறியியல் நுட்பம் தெரிந்த மற்றொரு வல்லுநர் எம்.பாண்டியராஜன், கல்லணை பற்றி எழுதுகையில், “கடலோரத்திலோ ஆற்றிலோ நிற்கும்போது நம் காலடி மண்ணை நீர் அரித்துச் செல்லும். நம் கால்கள் மணலுக்குள் அழுந்திப், புதைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் புதைவு நின்றுவிடும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஆற்றைத் தோண்டாமலேயே எத்தகையதொரு கட்டுமானத்துக்கும் அடித்தளம் அமைக்க முடியும். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தால் அடித்தளத்துக்கு இடவேண்டிய பொருள்களின் அளவும் பெரிதாக இருக்கும். இதுவே கல்லணைக்கு அடிப்படை” என்று குறிப்பிடுகிறார்.

    காவிரி கரையுடைத்துச் செல்லும் வழியில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டன. அவை மணலில் புதையும்போது அதன் மலோக மற்றொரு பாறை, அதுவும் புதைந்தபின் அதன்மேல் மற்றொரு பாறை, ஒரு கட்டத்தில் கடினமான தரைப்பகுதி வந்ததும் பாறை கீழிறங்காமல் நிலைத்தன. பாறைக்குமேல் பாறையை நிறுத்துமுன் இடையே களிமண் மட்டுமே பரப்பப்பட்டிருக்கிறது. காவிரிக்குக் கல்லணைக்கரை தயாராகிவிட்டது.

    1839 இல் கல்லணையின் மேலேயே, வெள்ளக் கால் நிலைமையைச் சமாளிக்கவும் நீரோட்டத்தை முறைப்படுத்தவும் வசதியாக 30 கண்களைக் கொண்ட பாலமொன்று கட்டப்பட்டது. (தரையோடு புதைந்துள்ள பாறைகளைப் பார்க்காமல், பார்வையில்படும் இந்த மேல் பகுதியைக் கல்லணை எனத் தவறாகக் கருதி விடுகிறார்கள்),” என (தினமணி பொங்கல் மலர், 1998, பக்.40-41) விளக்கிச் செல்வது மனங்கொள்ளத்தக்கது.

    இது போன்று தமிழகத்தில் பிற ஆறுகளில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளைக் காண்கையில் தமிழர்தம் கட்டடப் பொறியியல் நுட்பம் நன்கு புலனாகும்.