2.5 தீர்த்தங்களும், கட்டடக் கலை நுட்பமும்

    உலக நாகரிகம் ஆற்றங்கரையைச் சார்ந்தே பெயரிடப்பட்டதை வரலாறு கூறும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காவிரி ஆற்றங்கரையினை ஒட்டியே பல திருத்தலங்கள் அமைந்துள்ளன; அடுத்து வையை, பெண்ணை, தாமிரபரணி முதலிய ஆறுகளின் மருங்கே திருத்தலங்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. மேலும் திருக்குளம் அல்லது கிணறு அமைத்துத் தீர்த்தம் எனப் போற்றி நிற்பது ஆலய மரபாக உள்ளது. கடல் அருகே உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்குக் கடலே தீர்த்தமாக அமைந்துள்ளது. ஆனால், ஆறு, குளம் ஆகியவற்றுக்குத் துறையமைப்பதும் படிக்கட்டுகள் அமைப்பதும் கட்டடக்கலைச் சார்புடையது.

பொதுவாகத் திருக்குளங்கள் சதுரமாகவும் நீண்ட சதுரமாகவும் படியமைப்புகளுடன் கட்டப்பட்டிருப்பதே பெரும்பான்மை. ஆனால், சுவஸ்திக் வடிவமைப்புடன் கூடிய தீர்த்தக் குளமும் தமிழகத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து உறையூர் வழியே செல்லுகையில் 21 கி.மீ. தொலைவிலுள்ள திருவெள்ளறை எனும் திருத்தலத்தில் சுவஸ்திக் குளம் உள்ளது. சுவஸ்திக் வடிவமைப்பில் இந்தத் தீர்த்தக் குளம் அமைந்திருப்பதால், இக்குளத்து ஒரு துறையிலே நீராடுபவர்களை இன்னொரு துறையிலிருப்பவர்கள் காணமுடியாது.

2.5.1 வண்டியூர்த் தெப்பக்குளம்

     தென்னிந்தியாவில் மன்னார்குடி, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் முதலிய திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் இருப்பினும், வண்டியூர்த் தெப்பக் குளத்திற்கெனத் தனிச் சிறப்பு உண்டு. இங்குள்ள நீராழி மண்டபம் - மைய மண்டபம் - சிறப்புக் கூறுகள் உடையது.

தமிழகத்திலுள்ள தெப்பக்குளங்களுள் வனப்பூட்டப்பட்ட தெப்பக் குளமாக விளங்கும் வகையில் வண்டியூர்த் தெப்பக்குளம் திருமலை நாயக்க மன்னரால் அமைக்கப்பட்டது. மதுரைக்குக் கிழக்கில் மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் இஃது அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் அழைப்பர்.

     இந்தத் தெப்பக் குளத்தில் நடுவேயுள்ள மைய மண்டபமும், திருக்குளத்தின் நான்கு மூலைகளிலும் விமானத்தோடு அமைந்துள்ள நான்கு மண்டபங்களும் கட்டடக் கலை நேர்த்தி கொண்டவை.

     இத்தெப்பக்குளம் தெற்கு வடக்கில் 1000 அடி நீளமும், கிழக்கு மேற்கில் 950 அடி அகலமும், 9.5 லட்சம் சதுர அடிப்பரப்பும் கொண்டது. இக்குளத்தைச் சுற்றிக் கருங்கல்லால் ஏறக்குறைய 4 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது; படிக்கட்டுகளும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. சுவரையொட்டி, உட்புறமாக மக்கள், குளத்தைச் சுற்றிவருதற்கு வாய்ப்பாக 5 அடி அகலத்தில் கல்வரிசை (தளவரிசை) அமைந்துள்ளது. ஒரு பக்கத்திற்கு 3 படித்துறைகளாக 12 படித்துறைகள் உள்ளன.

     மைய மண்டபத்தின் நிழல் அந்த மண்டபத்திலேயே அடங்குவதன்றி வெளிப்புறம் சாய்வதில்லை. தஞ்சைப் பெரிய கோயில் நிழல் வெளியே வீழ்வதில்லையென்பர்; அதுபோல இந்த மைய மண்டபத்திற்கும் வெளியே நிழல் சாயாச் சிறப்பு உண்டு. திருக்கோட்டியூர் ஆலய விமானத்துக்கும் இத்தகைய சிறப்பு உண்டென்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுவர்.

     வையை ஆற்றிலிருந்து இந்தக் குளத்திற்குத் தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வசதியையும் நாயக்க மன்னர் செய்து வைத்தார்.

2.5.2 புதுமண்டபம்

     பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் எழுதியுள்ள மதுரை நாயக்கர் வரலாறு, நாயக்க மன்னர்களின் சமயப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் திரட்டித் தந்துள்ளது. அதற்கு இணங்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைந்துள்ள புதுமண்டபச் சிறப்புக் கூறுகள் சிலவற்றைக் காண்போம்.

     புதுமண்டபம் தேர்ந்த கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அது 333 அடி நீளமும், 105 அடி அகலமும் 25 அடி உயரமும் கொண்டது. இதனில் 124 சிற்பத் தூண்கள் அணி செய்கின்றன. மேல்தளம் கல்லால் மூடப்பெற்றுள்ளது. இதன் உள்வரிசைக் கால்களில் திருமலை நாயக்கர் முதலிய நாயக்க அரசர்கள் பதின்மருடைய உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கு ஓரத்தில் ஒரு கருங்கல் சவுக்கை உள்ளது. திருவிழாக் காலத்தில் குளிர்ச்சியாய் இருக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி நான்கு பக்கமும் தண்ணீர் நிரப்பி வைக்கும் பொருட்டு அகழிபோல் அடிவாரம் உள்ளது. மழைபெய்தால் இப்பொழுதும் நான்கு பக்கமும் தண்ணீர் நிறையத் தேங்கிவிடும். கோடைக் காலத்தில் இவ்வகழி போன்ற அமைப்பில் தண்ணீர் நிரம்பி விடின் குளிர்ச்சியாக இருக்கும். இக்காலக் குளிர்பதன வசதி (Airconditioned) போலக் கட்டடக் கலை உத்தி கையாளப்பட்டிருப்பதை நன்குணரலாம்.