2.6 சத்திய ஞானசபை

    தமிழகத்தில் சமரச சுத்த சன்மார்க்கம் கண்டு, சங்கமாக நிறுவியவர் வடலூர் வள்ளற் பெருமான்; அவர் தம்மைச் ‘சிதம்பரம் இராமலிங்கம்’ என்று அழைத்துக் கொண்டார்.

    ஜீவ காருண்ய ஒழுக்கத்தையே உயிர்நாடியாகக் கொண்ட அந்த அருளாளர், சுத்த சன்மார்க்கம் பரவவும், பசிப்பிணியால் நலிவோருக்கு அன்னமிட வாய்ப்பாகத் தருமச் சாலை நிறுவவும் தக்க இடம் நாடி நின்றார். முக்கோண வடிவமைப்பிலே, சிதம்பரமாகிய திருத்தில்லை, விருத்தாசலமாகிய திருமுதுகுன்றம், கடலூராகிய திருப்பாதிரிப்புலியூர் ஆலயங்களின் சூழலில் நடுவணதாகிய பெருவெளி - வடலூர் எனும் உத்தரஞான சிதம்பரம் - வள்ளற்பிரானால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2.6.1 கட்டட அமைப்பு

    வடலூரில் தருமச் சாலை நல்ல கட்டட அமைப்புடன், பலருக்கும் உணவு சமைக்கும் சமையற் கூடத்துடன் கட்டப்பட்டது; அதன் முன் மண்டபத்தில் பலரும் வழிபாடு செய்யும் வகையில் கூடம் அமைக்கப்பட்டது. இவ்வாறு கட்டுவதற்கும் சமரச சுத்த சத்திய ஞானசபை நிறுவவும் 80 காணி நிலத்தினை வடலூர் மக்கள் அடிகளார் பேரில் பட்டா செய்து கொடுத்தனர்.

    சிற்சபை, பொற்சபை எனச் சிறு ஆலயங்களை உட்படுத்தி 16 பட்டை வடிவ அமைப்பில், நல்ல தாழ்வாரக் கட்டுமானத்துடன் சத்திய ஞானசபையை ஆலயமாகவே அமைத்தார். அங்கே அருட்பெருஞ்சோதி ஆண்டவனைக் கண்டு வழிபடும் வகையில் - சோதிக்காட்சியைத் திரையிலே கண்டு வழிபடுமாறு - ஏற்பாடு செய்துள்ளார்.

    ஞானசபை மூன்றாம் பிராகாரத்தில் பக்க வழிகளில் இரண்டு வளைவுகளும், நீராழிப் பத்தியில் 22 வளைவுகளும் உள்ளன. இதனில் உள்ளடங்கிய ஏழு வாயில்களும் 14 சாளரங்களும் காணப்படும். ஞானசபையின் தென்புறத்தில் கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய 3 வாயில்கள் கறுப்பு நிறம் பூசப்பெற்றுள்ளன. மூன்று வாயில்களுக்கும் பொதுவான 5 படிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்குப் பக்கங்களில் ஐந்தைந்து படிகள் உள்ளன.

    ஞானசபையின் உள்ளே இருபக்கங்களிலும் 12 தூண்கள் உண்டு. ஞானசபையின் நடுவே அதிட்டான பீடம் உள்ளது. ஞானசபையைச் சுற்றி இருப்புச் சங்கிலியும் அமைத்துள்ளார்; அதனைத் தாங்கி நிற்க இருப்புப் பட்டையுடன் கூடிய 52 கட்டைகளும் உள்ளன. ஞானசபையின் தென்புறமாக வெளியே பெரிய கூடாரம் போன்ற கட்டட அமைப்பு உள்ளது.

    இந்த ஞானசபைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சாலைக்கு வடக்கே, தொழிலதிபர் நா. மகாலிங்கம் அவர்களால் கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபம் மக்கள் பலரும் அமர்ந்து அருளுரைகளைக் கேட்கும் வகையில் அமைந்துள்ளது.