2.7 திருமடங்களும் ஆசிரமங்களும் சைவத் திருமடங்கள், வீரசைவத் திருமடங்கள், வைணவத் திருமடங்கள், மத்வர் திருமடங்கள் முதலிய பலவகைத் திருமடங்களும் தத்தம் சமயத்தைப் பரப்புவதற்காகவும், தத்தம் கட்டுப்பாட்டிற்குள்ள கோயில்களை நிருவகிக்கவும், அன்னதானம் முதலிய அறங்களை முறைப்படி நடத்துவதற்காகவும் அமைந்தவை. பெரும்பாலும் சமயத்துறவியர்களே பொறுப்பேற்று அனைத்தையும் கவனிப்பர். இல்லறத்திலிருந்து கொண்டே ஆட்சிபுரிபவர்களும் உண்டு. தமிழகத்திலுள்ள திருமடங்கள் பலவற்றுள் சிறப்பாகச் செயற்படும் ஆதீனங்கள், நல்ல கட்டுக்கோப்பான கட்டடங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் சில மண்டபங்கள் ஆன்மிகத் தொடர்புடைய கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகள் முதலியவற்றை நடத்துதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. சமயச் சார்புடைய நூல்களும் ஏட்டுச்சுவடிகளும், பலரும் பயன்படுத்தும் வகையில் நூலகக் கட்டடம் பெரும்பாலும் பல திருமடங்களில் உண்டு. சில ஆதீனங்கள் சமயநூற் பயிற்சிக்கான பாடசாலைகள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றன. அனைத்திலும் சிறப்பாக ஆலய வழிபாடும், பலருக்கும் உணவளிக்கும் அன்னதானமும் நடத்துதற்கேற்பத் திருமடங்களில் விசாலமான கட்டடங்கள் உண்டு; சமயச் சார்புடைய செய்திகளை வெளியிடவும், நூல்களை வெளியிடவும் வாய்ப்பான அச்சுக் கூடமும் சில ஆதீனங்களில் உண்டு. ஆதீனங்கள் தமிழகத்து ஆதீனங்களுள் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் காசிமடம், சூரியனார் கோயில், காஞ்சித் தொண்டைமண்டலம், மதுரைத்திருஞான சம்பந்தர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆகிய ஆதீனங்கள் தமிழ்மக்கள் போற்றும் வகையில் சமயப்பணிகள் புரிந்து வருகின்றன; கட்டடச் சிறப்பும் உடையவை. பசுக்களைக் காப்பாற்றும் பசு மடங்களையும் கொண்டு விளங்குகின்றன. துழாவூர், வளோக்குறிச்சி, நாச்சியார் கோயில், வரணி, வள்ளலார் ஆகிய ஐந்து ஆதீனங்களும் இல்லறத்தார் ஆதீனங்கள். இவற்றுள் வள்ளலார் ஆதீனம் மறைந்து விட்டது. ஏனைய நான்கும் சமயப்பணிகளுக்கேற்ற கட்டடங்களைக் கொண்டுள்ளன. வரணி ஆதீனம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தலைமையிடம் கொண்டிருப்பினும், வேதாரண்யத்தில் கிளைமடம் வாயிலாக வேதாரண்யம் கோயிலை நன்முறையில் நடத்தி வருகிறது. மடங்கள் திருமடங்களைப் பொறுத்த வரையில், மயிலம் பொம்மபுரம் மடம், பேரூர் சாந்தலிங்கர் திருமடம், விருத்தாசலம் குமாரதேவர் மடம், கோயிலூர் திருமடம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம், சிதம்பரம் மௌனசுவாமிகள் திருமடம், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் திருமடம் முதலிய திருமடங்கள் நல்ல கட்டட வசதிகளுடன் சமயப் பணியும் சமுதாயப்பணியும் புரிந்து வருகின்றன. அத்துவைதத் திருமடங்களுள் காஞ்சிக் காமகோடி பீடம் ‘ஜகத்குரு’ சங்கராச்சாரியார் சுவாமிகள் திருமடம், திருமடங்களுள் முன்னணியில் உள்ளது. அது சமய மேம்பாட்டுக்குப் பெரும் பணிகள் புரிந்து வருகிறது. அகோபிலம் ஜீயர் சுவாமிகள் திருமடம், திருவரங்கம் ஆண்டவன் சுவாமிகள் மடம் முதலிய பல வைணவ மடங்களும் சமய மேம்பாட்டிற்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் பல பணிகள் புரிந்து வருகின்றன. நல்ல கட்டட வசதிகளையும் அவை பெற்று விளங்குகின்றன. மகான் இராகவேந்திர சுவாமிகள் தொடர்பாகச் சில அருள்நிலையங்கள் நல்ல வசதியான கட்டடங்களில் தோற்றுவிக்கப்பட்டு, அவையும் சமய-சமுதாயப் பணிகளைப் புரிந்து வருகின்றன. சிதம்பரத்திற்கு அருகிலுள்ள புவனகிரியில் சுவாமி இராகவேந்திரர் ஆலயம் காணத்தக்க சிறப்புடையது. பண்டைக் காலத்தில் முனிவர்கள் வாழுமிடத்தையும், பன்ன சாலையையும் ஆசிரமம் என்றனர். (பன்னசாலை = பர்ண சாலை = தழைகளால் வேயப்பட்ட குடில்) ஆசிரமம் என்பதற்கு வாழ்க்கைநிலை என்று பொருள் உண்டு. மக்கள் ஆரவார நிலையிலிருந்தும் இல்லறச் சிக்கல்களிலிருந்தும் விடுபடத் துறவு மேற்கொண்டு, இயற்கை தவழ்கின்ற மலையடிவாரம், வனப்பகுதி முதலிய இடங்களுக்குச் சென்று குடில் அமைத்துக் கொண்டு, ஆன்ம நிலையில் உயர்ந்திட யோகம், தியானம், தவம் முதலியவற்றில் ஈடுபட்டனர். சில ஆசிரமங்களில் வேதம், கலை, வித்தை முதலியவற்றையும் சீடர்களுக்குப் பயிற்றுவித்த முனிவர்கள் வாழ்ந்திருந்ததாக வரலாறுகள் உண்டு. திருவண்ணாமலையில் பகவன் இரமணர், இரமணாசிரமத்தைத் தோற்றுவித்தார். தியானமண்டபம், நூல் நிலையம் ஆகியவற்றுடன் - ரமண மகரிஷி தம் தாயாரை அடக்கம் செய்த இடத்தில் எழுப்பிய பள்ளிப்படைக் கோயில் முதலியவற்றுடன் - இன்றும் ரமணாசிரமம் நடைபெற்று வருகின்றது. அதற்கு அருகே ‘விசிறி சாமியார்’ என அழைக்கப்பட்ட சுவாமி ராம் சூரத்குமார் ஏற்படுத்தியுள்ள ஆசிரமம் வியக்கத்தக்க முன்னேற்றம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியான மண்டபம் சிறந்த பொறியியல் வல்லுநர்களால் கட்டப்பட்டு மக்களுக்குப் பயன்படுகிறது. மேலும், திருக்கோயிலூருக்கு அருகே ஞானானந்த சவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரமமும் பிற ஆசிரமங்களும் ஆன்மநல முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வருகின்றன; கட்டட வசதிகளும் அவை பெற்றுள்ளன. வடஆர்க்காடு திருப்பத்தூரில் கிறித்துவர்களால் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட கிறி்ஸ்து குல ஆசிரம் உள்ளது. இது மருத்துவத் தொண்டும், சமுதாயத் தொண்டும், சமயத்தொண்டும் செய்து வருகிறது. |