2.8 நிலவறை நிலத்தினடியில் கிடக்கும் கனிவளத்திற்காகச் சுரங்கம் அமைப்பது ஒரு புறமிருக்க, முற்காலத்தில் அரசியல் காரணமாகவும் நிலஅறையும் சுருங்கை வழியும் அமைத்திருந்தனர் என்பதை வரலாற்றால் அறியலாம். எடுத்துக்காட்டாகத் தஞ்சாவூர் அரண்மனையில் நிலவறை அமைந்திருக்கும் இடத்தைக் காணலாம். அரசியல் தேவைக்கேயன்றி, ஆலயத்திலுள்ள விலைமதிப்பிற்குரிய அணிகலன்களையும் நவமணிகளையும், சில வேளைகளில் சிலைகளையும் மறைத்து வைக்க வேண்டிய தேவை ஏற்படும். பொதுவாகவே, நகரத்தார் பெருமக்கள் ஆலயங்களுக்கும் அறச்சாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிய பெருமக்கள். அவர்கள் சார்பில் கட்டப்பட்ட நகரத்தார் கோயில்களில் கட்டடச் சிறப்பு மிகுதியாக அமைந்திருக்கக் காணலாம். “நகரத்தார் கோயிலான மாத்தூர்க் கோயிலில் அர்த்தமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் நிலவறை காணப்படுகிறது. போர்க்காலங்களிலும் பகைவர்கள் ஆலயத்தை நோக்கிப் படையெடுத்து வருங் காலங்களிலும் ஆலயத்திலுள்ள உற்சவ விக்கிரகங்கள், மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது” என்று தொல்லியல் அறிஞர் மா. சந்திரமூர்த்தி தம் ‘மாத்தூர்க் கோயில்’ (பக் - 29) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். |